|
உத்தரவு தரும் காவல் தெய்வம்: கோயில் வளாகத்தில் அம்பாள் சன்னதிக்கு இருபுறமும் பூதராஜா, பூதராணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். இக்கோயிலில் விழா துவங்க, பூதராணியிடம் உத்தரவு கேட்கின்றனர். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, புதிதாகச் செயல்களைத் துவங்க, நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க பூதராஜாவிடம் உத்தரவு கேட்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பூதராஜா முன் நின்று கொண்டு, தங்கள் பிரார்த்தனையைச் சொல்வர். அப்போது, பல்லி சப்தமிட்டால் அதை தங்களுக்கு அம்பிகை இட்ட உத்தரவாகக் கருதி அச்செயலை துவங்குகின்றனர். அதேநேரத்தில் கோயில் வளாகத்தில் வேறு இடத்திலோ, பூதராணியிடமிருந்தோ சத்தம் கேட்டால் அச்செயலை தள்ளிப்போட்டுவிடுகின்றனர். அம்பாள் சன்னதியில் பூ கட்டிப் போட்டு உத்தரவு கேட்கும் வழக்கமும் உண்டு.
மஞ்சள் பிரார்த்தனை: குழந்தை பாக்கியம் கிடைக்க அம்பாள் சன்னதியில் 5 எலுமிச்சை மற்றும் குளியல் மஞ்சளுடன் வந்து வழிபடுகின்றனர். அர்ச்சகர்கள் அதை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, தலா மூன்றை மட்டும் பிரசாதமாகத் தருவார். எலுமிச்சையை சாப்பிட்டும், மஞ்சள் கிழங்கை குளித்தும் வர குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்புகிறார்கள்.
சுரலிங்கேஸ்வரர்: குடகனாற்றின் மேற்கு கரையில் அமைந்த கோயில் இது. இங்குள்ள விநாயகர் ஞானத்துடன், வேண்டும் வரங்களையும், செயல்களில் வல்லமையும் பெற அருள் செய்பவர் என்பதால் "அருள்ஞானசுந்தர மகாகணபதி' என்றே அழைக்கப்படுகிறார். திருமணத்தடை உள்ளோர் இவருக்கு தேங்காய் மாலை அணிவித்து வேண்டிச் செல்கின்றனர். இங்கு விசாலாட்சி அம்பிகையுடன், ஐந்து முகங்களுடன் கூடிய சுரலிங்கேஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். லிங்கத்தின் நான்கு புறமும் நான்கு முகங்கள் உள்ளது. மற்றொரு முகத்தைக் காண முடியாது. பிரதோஷ பூஜையும், ஐப்பசியில் அன்னாபிஷேக வைபவமும் இவருக்கு விசேஷமாக நடக்கும்.
விழா சிறப்பு: ஐப்பசி மாத முதல் செவ்வாய்க் கிழமையை 10ம் நாளாகக் கணக்கிட்டு, இங்கு விழா நடக்கிறது. 9ம் நாள் காலையில் அம்பிகைக்கு கண்திறப்பு வைபவம் நடக்கும். பின், அம்பிகை ஆயிரம் பொன் சப்பரத்தில் கொலுமண்டபம் செல்ல, அங்கு விசேஷ பூஜைகள் நடக்கும். 10ம் நாளில் மண்ணால் செய்யப்பட்ட அம்பிகை, சொருபட்டை என்னும் விமானத்தில் பூஞ்சோலை எனப்படும் மைதானத்திற்கு செல்வாள். மழையில் கரையும்விதமாக அமைக்கப்படும் விமானம் இது. மைதானத்தில் சிறப்பு பூஜை செய்தபின், அம்பிகையை அங்கேயே வைத்து விடுவர். அதன்பின், 3 அல்லது 4 நாட்களுக்குள் மழை பெய்து, சிலை தாமே கரைந்து விடுவதாகச் சொல்கின்றனர்.
மூன்றும் தரும் அம்பிகையர்: எந்தச்செயலைச் செய்வதாக இருந்தாலும் மூன்று விஷயம் அடிப்படையாகத் தேவைப்படும். முதலில் செய்ய வேண்டிய செயலைப் பற்றி ஆசைப்பட வேண்டும். பின், ஞானத்துடன் அதை செயல்படுத்த வேண்டும். இவையே இச்சா (ஆசை) சக்தி, கிரியா (செயல்) சக்தி, ஞான (அறிவு) சக்தி எனப்படும். இம்மூன்றையும் தரும் மூன்று அம்பிகையர் மூலஸ்தானத்தில் உள்ளனர். இம்மூவரும் நின்றபடி, கையில் அட்சய பாத்திரம் ஏந்திய தவக்கோலத்தில் இருக்கின்றனர். இதனால், இவர்களிடம் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். இப்பகுதி மக்களுக்கான பிரதான குலதெய்வ வழிபாட்டுத்தலம் இது. பவுர்ணமி நாட்களில் அம்பிகைக்கு விசேஷ பூஜை உண்டு.
|
|