Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு புஷ்பகுஜாம்பாள் சமேத சிங்கீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு புஷ்பகுஜாம்பாள் சமேத சிங்கீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சிங்கீஸ்வரர்
  உற்சவர்: பஞ்சமூர்த்திகள், நடராஜர், சிவகாமி அம்பாள், பிரதோஷ நாயர், சந்திரசேகர்
  அம்மன்/தாயார்: புஷ்பகுஜாம்பாள்
  தல விருட்சம்: இலந்தை மரம்
  தீர்த்தம்: ஸ்வேத பத்ம புஷ்கரிணி கமல தீர்த்தம் ( தாமரை)
  ஊர்: மப்பேடு
  மாவட்டம்: திருவள்ளூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மாசி மாதம் பிரம்மோற்சவம் ( 10 நாட்கள்), ஆருத்ரா தரிசனம், பிரதோஷம், மூல நட்சத்திரம், ஆனி திருமஞ்சனம், மகா கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர்: சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக படிப்பார்கள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 1:00 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில், மப்பேடு போஸ்ட்-631 403, பேரம்பாக்கம் வழி, திருவள்ளூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 44 -2760 8065, 94447 70579, 94432 25093 
    
 பொது தகவல்:
     
 

மூல நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: சோம்பல் என்பதே இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுவர். கல்விகேள்விகளில் ஆர்வம் நிறைந்திருக்கும். பார்ப்பதற்கு லட்சணம் பொருந்தியவர்களாக இருக்கும் இவர்கள், உணவு விஷயத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பர். பழங்களை விருப்பத்தோடு புசிப்பர். உடல் வலிமையோடு திகழ்வர்.




பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான்,சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.


கோயிலின் மொத்த பரப்பளவு : 5 ஏக்கரில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மூலவர் மற்றும் அம்பாள் கோபுரம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
 

மூலம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புபவர்கள், இசைப்பயிற்சிகள் மேற்கொண்டு இறைவனை வழிபட்டால், பெரும்புகழ் கிடைக்கும். துர்க்கையம்மன் திருவடிகளில் மகிஷன் உருவம் உள்ளதால், செவ்வாய், வெள்ளி தோறும் ராகு காலத்தில் (42 வாரங்கள்) எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், திருமணம் மற்றும் குழந்தை பேறு கிடைக்கும்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர். இங்குள்ள துர்க்கைக்கு 42 வாரம் தீபமேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். 
    
 தலபெருமை:
     
  வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர்: சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக படிப்பார்கள். ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே. இவள் ஒரு மூல நட்சத்திரத்தனறு ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்க நாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள். இதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும், உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும், சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடைத்தது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் கல்வியிலும், பேச்சிலும் சிறந்து விளங்குவார்கள்.

சிறப்பம்சம்
: கோயிலின் வட கிழக்கு மூலையில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீவீரபாலீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மரத்தின் அருகில் உள்ள நந்தியையும், மூலவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத்தில் அதன் எதிரில் கீழே உள்ள நவவியாகரண கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. இங்குள்ள துர்க்கை மிகவும் விசேஷமானவள்.42 வாரம் இவளுக்கு தீபமேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

சோழர் கால கோயில்: வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கி.பி.976ல் கோவில் கட்டப்பட்டது. இவன் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் சகோதரர். பின்னர் இதே கிராமத்தில் பிறந்த அரியநாத முதலியார் கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கி.பி.1501ல் கோவில் ராஜ கோபுரம், மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டி வைத்தார். கடந்த 2008ம் ஆண்டு, குகஸ்ரீ சுந்தரேச சுவாமிகள்(ஆத்தூர்-சேலம்) முன்னிலையில், இந்து அறநிலையத்துறை சார்பில் சத் சங்கம் பெயரில், நால்வர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இத்திருக்கோவிலில் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீர பாலீஸ்வரர் மற்றும் வையாழி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.
 
     
  தல வரலாறு:
     
 

சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன்,பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார். நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத் திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்றும், பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.



ஊர் பெயர் காரணம்: தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தனது மெய்யான ரூபத்தை பெற இங்கு சிவனை வழிபட்டார். இதனால், இந்த ஊர் ஆரம்ப காலத்தில் திருமால்பேடு (பேடு=பெண்) என்றும், பின்னர் மெய்ப்பேடு என்றும் தற்போது மப்பேடு எனவும் அழைக்கப்படுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக படிப்பார்கள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar