சிவன் சன்னதிக்கு வலப்புறத்தில் அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறார். இதனை சிவன், அம்பாள் திருமணம் செய்த கோலம் என்பார்கள். இருவரது சன்னதிகளுக்கும் இடையே விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் அமைந்து சுப்பிரமணியர் என ஒரே வரிசையாக சிவ குடும்ப தெய்வங்கள் இருக்கிறது. இவ்வாறு கோயில்கள் அமைந்திருப்பது அபூர்வம்.
ராஜகோபுரத்திற்கு நேரே நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். மூலவர் விமானம் கஜபிருஷ்ட அமைப்பிலும், அம்பாள் விமானம், கோபுரம் போன்ற அமைப்பிலும் வித்தியாசமாக இருக்கிறது. கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையின் காலுக்கு கீழே மகிஷாசுரன் இல்லாமல் காட்சி தருகிறாள்.
தாழம்பூ பூஜை : தனது தலை முடியைக் கண்டதாக பொய் சொன்ன (பிரம்மனுக்காக பொய் சொன்னதால்) தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவன். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவன் வரம் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் இக்கோயிலில் சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர். இந்த நேரத்தில் சிவனை தரிசித்தால் ஆணவம், பொய் சொல்லும் குணங்கள் மறையும் என்கிறார்கள்.
தங்காதலி அம்பாள் : தட்சனின் யாகத்திற்கு சென்றதால் பார்வதி தேவியை பூலோகத்தில் சாதாரண பெண்ணாக பிறக்கும்படி சபித்தார் சிவன். சாபத்தால் பூலோகத்தில் இத்தலத்திற்கு வந்த அம்பாள், சிவனை வேண்டி தவம் செய்தாள். அவளுக்கு இரங்கிய சிவன், அம்பாளை "தன் காதலியே!' என்று சொல்லி அன்போடு அழைத்து அவளை மன்னித்து அருளினாராம். இதனால் இங்குள்ள அம்பாளை "தங்காதலி அம்பாள்' என்கின்றனர். இவளிடம் வேண்டிக்கொண்டால் தம்பதியர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. அம்பாளின் பெயரால் இவ்வூருக்கு "தங்காதலிபுரம்' என்ற பெயரும் உண்டு.
விநாயகர் சபை : விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்தாராம். அந்த செல்வங்களை பெறுவதற்காக சிவனை வேண்டினார். அவரது ஆலோசனையின்படி இத்தலத்தில் 11 விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார் என்றொரு வரலாறு உண்டு. இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். இதனை, "விநாயகர் சபை' என்கின்றனர். இதில் மூன்று விநாயகர்கள் கிழக்கு பார்த்தும், இவர்களுக்கு பின்புறத்தில் இருபுறமும் சிறிய விநாயகர்களுடன் நடுவில் ஒரு பெரிய விநாயகரும், இடப்புறத்தில் ஐந்து விநாயகர்களும் இருக்கின்றனர். அருகிலேயே கேது பகவான் தனியே இருக்கிறார்.
திரிபுராந்தகர்களை அழிக்கச் சென்ற சிவன் விநாயகரை வணங்காமல் செல்லவே அவரது தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார் விநாயகர். அவர் ஒரு சபை அமைத்து சிவனிடம், தன்னை வணங்காமல் சென்றது ஏன்? என கேட்டு விசாரணை செய்ததாகவும் விநாயகர் சபை உண்டானதற்கு மற்றொரு வரலாறு சொல்கின்றனர்.
சொர்ண காளி : இப்பகுதியை ஆட்சி செய்து வந்த குறும்பன் எனும் சிற்றரசன் ஒருவன் மன்னனுக்கு சரியாக வரி கட்டாமல் இருந்தான். எனவே அவனுடன் போரிட்டு வரியை வாங்க சோழ மன்னன் ஒருவன் குறும்பன் மீது படையெடுத்தான். காளி பக்தனான குறும்பன் அவளை ஏவி விட்டு சோழ படைகளை விரட்டியடித்தான். சோழ மன்னன் சிவனிடம் தனக்கு உதவும்படி வேண்டினான். அவனுக்காக சிவன் காளியை அடக்க நந்தியை அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த நந்தி காளியுடன் போரிட்டு அதனை வெற்றி பெற்றது. மேலும் காளியின் இரண்டு கால்களிலும் பொன் விலங்கை பூட்டியும் அதனைக் கட்டுப்படுத்தினார். பின் மன்னன் இப்பகுதியை மீண்டும் கைப்பற்றினான்.
நந்தியால் அடக்கப்பட்ட சொர்ணகாளி இக்கோயில் பிரகாரத்தில் நான்கு கைகளுடன் தனியே நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கால்களில் விலங்கு போடப்பட்டிருக்கிறது. பவுர்ணமி தோறும் மாலை வேளைகளில் இவளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
|