கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் ஏழரை அடி ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மாதம்தோறும் மூல நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது. கோயிலின் தென்மேற்கு மூலையில் விநாயகரும், மேற்கில் அனந்தபத்மநாப சுவாமி சந்நதியும் உள்ளன.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறவும், வறுமை நீங்கி செல்வம் கொழிக்கவும் இங்குள்ள மூன்று தேவியரையும் வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
நவராத்திரி ஒன்பது நாட்களும் மலர்கள், காய்கள், கனிகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. பாலபிஷேகம், மஞ்சள்பொடி அபிஷேகம் செய்யப்பட்டு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கப்படும்.
தலபெருமை:
இங்குள்ள துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் ஒரே சன்னதியில் கிழக்கு பார்த்தப்படி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். உத்ஸவத் திருமேனிகள் மண்டபத்தின் கீழே உள்ளன. ஸ்ரீமகாலட்சுமியின் முன்னே பிரமாண்டமான ஸ்ரீசக்கரமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நான்கு வேதங்களையும் உணர்த்திடுவதே வேத மண்டபம். கருடத்வஜம் கவசமிட்டுக் கம்பீரமாகக் காணப்படுகிறது. தினமும் கொடிமரத்து சாளரம் வழியே முப்பெருந்தேவியருக்கு சூரிய பூஜை நடைபெறுவதையும் காணலாம். தினமும் மகாமேருவுக்கு சகஸ்ரநாம வழிபாடு உண்டு. தனி நபர்கள் பெயரில் இங்கு அர்ச்சனை செய்வதில்லை. நடைபெறும் பூஜைகள் எல்லாமே உலக நன்மைக்காகவே.
பவுர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தேவியருக்கு அபிஷேக ஆராதனை சிறப்பு அம்சம் ஆகும். சித்திரை மாதப் பிறப்பன்று கருவறையில் தண்ணீர் நிரப்பி அதில் தாமரை மலர்கள் மிதக்கவிடும் காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகிறார்கள். ஆடி மாதம் கோயில் விழாக்கோலம் காண்பது அங்கே நிகழும் சாகம்பரி அலங்காரத்தைக் கண்டுகளிக்கவே, மூன்று வாரங்கள் மலர்களாலும், நான்காவது வாரம் காய்களாலும், ஐந்தாவது வாரம் கனிகளாலும் அலங்காரம் நடைபெறும். நவராத்திரி ஒன்பது நாட்களும் அலங்காரம் களை கட்டிவிடும். தீபாவளியன்று ஸ்ரீமகாலட்சுமி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் முப்பெரும் தேவியருக்கு பாலபிஷேகம், மஞ்சள்பொடி அபிஷேகம் செய்யப்பட்டு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கப்படும்.
தல வரலாறு:
தீபாவளி அன்று புதுக்கணக்கு ஆரம்பிப்பது வட மாநிலங்களில் வழக்கம். அதாவது அன்றுமுதல் கணக்கிடப்படும் புது வருடத்தில் முந்தைய வருடத்தைவிட அதிக லாபமும் வளமும் பெருக வேண்டும் என்று பூஜித்துக் கொண்டு அவ்வாறு கணக்கைத் துவங்குவது சம்பிரதாயம். அன்றைய தினம் லட்சுமி குபேர பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜை வட மாநிலங்களில் மட்டுமின்றி தென்மாநிலங்களிலும் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த பூஜையின் முக்கிய நோக்கம் வறுமை நீங்கி வளம் கொழிப்பதும் லட்சுமியின் திருவருளால் செல்வம் கொழிப்பதும் மட்டுமல்ல... பிணி, மூப்பு, துயரம் தொலைந்து இன்பம் பெருகிடவும் இந்தப் பூஜையை நடத்துவது வழக்கம். இந்தப் பூஜையை மேற்கொள்ள இயலாதவர்கள் லட்சுமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்யலாம். வடநாட்டுப் பாணியில் அமைந்துள்ள இக்கோயிலை மகாலட்சுமி மந்திர் என்றே அழைக்கின்றனர். கருவறை விமானமும் அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மகாலட்சமி மந்திர் என அழைக்கப்பட்டாலும் முப்பெரும் தேவியரான துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களும் ஒரே சன்னதியில் கிழக்கு பார்த்தப்படி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கருவறையில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியிரும் அமர்ந்த நிலையில் கிழக்குப் பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு.
இருப்பிடம் : கோயம்புத்தூரில் இருந்து 9. கி.மீ., தொலைவில் ஈச்சனாரியில் அமைந்துள்ளது மகாலட்சுமி திருக்கோயில். பிரசித்திப் பெற்ற இத்தலம் விநாயகர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.