இராம நவமி, சித்திரை அட்சய திருதியை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி உள்ளிட்ட திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
இடதுகை மார்போடு அணைத்து தன் வலக்கையால் வாய் பொத்தி நிற்கும் அனுமனின் (சுமார் 4 அடி உயரம்) சிலை வேறு எங்கும் காணாத சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வீரகோதண்டராமர் திருக்கோயில்,
தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி அருகே,
திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91 80568-56894
பொது தகவல்:
சீதைக்கு முன் சற்று இடப்புறமாக ஆஞ்சநேயர் சிலையும் அதற்கு முன்னால் ஆஞ்சநேயருடைய உற்சவ சிலையும் உள்ளன. லட்சுமணனுக்கு சற்று முன்னால் சீதை, ராமர், லட்சுமணர் ஆகியோர்களுக்கான உற்சவர் சிலைகள் இருக்கின்றன. மற்றும் ஒரு மேடையில் செல்வர், சக்கரத்தாழ்வார், கண்ணன், சந்தான கிருஷ்ணன் ஆகியோரது திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு சன்னதி, நுழைவு வாயில் கோபுரம், ஆர்.சி.மணிமண்டபம், பலி பீடம், கொடிமரம், மகா மண்டபம், கருடாழ்வார் ராமரை மேற்கு பக்கம் பார்த்த வண்ணமும், இடபக்கம் விக்னேஷ்வரர் சங்கராதியும், வலது பக்கம் பத்மநதி, நாகராஜரும் உள்ளே பிரகார மண்படம், துவார பாலகர்கள் ஜெயவீரன் வலது பக்கமும், விக்னேஷ்வரர் இடது பக்கமும் அமைத்து கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் பின் பக்கம் ராமர் கண்டெடுக்கப்பட்ட குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாமல் உள்ளது. குளத்தின் அருகில் பெரிய அளவில் ஆலமரம் உள்ளது. இந்திய அளவில் இடம் பெற்ற கோவில் என்பதால் வட நாட்டினர் இந்தியில் வரைபடம் அமைத்து கோவில் இடம் பெற்றதை வட்ட மிட்டு காட்டியுள்ளனர்.
பிரார்த்தனை
திருமணம் பாக்கியம் கிடைக்க, மன சஞ்சலம் நீங்க, கோர்ட் விவகாரம் தீர, புத்திர பாக்கியம் கிடைக்க, நவகிரக தோஷ பீடைகள் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
ஆஞ்ச நேயரை வேண்டி ஒருபடி தயிர், நான்கு முழ புது வேஷ்டி ஆஞ்சநேயர் மேனியில் சாத்தி வழிபாடு செய்தால் காரியம்கை கூடும். புத்திபாக்கியம் வேண்டுபவர்கள் சந்தான கோபாலனை கையில் எடுத்து சென்றால் புத்திபாக்கியம் ஜெயமாகும்.
தலபெருமை:
தில்லைவிளாகத்தில் உள்ள இந்தக் கோயிலின் சன்னதி கிழக்குப் பார்த்துள்ளது. உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் சன்னதி கிழக்குப் பார்த்துள்ளது. கொடிமரம், கருடாழ்வார் சன்னதியைச் சுற்றிலும் ஒரு பரந்த வெளிச்சுற்று அல்லது பிராகாரம் தென்படும். முன்னால் ஒரு மண்டபம் உள்ளது. அதில் சன்னதிக்குச் செல்லும் வாயிலுக்கு இருபுறமும் அபூர்வமான சிலைகள் பிறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இடப்புறம் சங்க நிதியும் வலப்புறம் பதும நிதியும் காணப்படுகின்றனர். சங்கநிதி கையில் சங்கும் அதேபோன்று பதும நிதியின் கையில் தாமரையும் காட்சியளிக்கின்றன. கருவறையில் கற்சிலைகளே கிடையாது. இடமிருந்து வலமாக சீதை, ஸ்ரீராமர், லக்குவணன் ஆகியோர் விக்கிரகங்கள் பஞ்சலோகத்தால் ஆனவை. சீதைக்கு முன் சற்று இடப்புறமாக ஆஞ்சநேயர் சிலையும் அதற்கு முன்னால் ஆஞ்சநேயருடைய உத்ஸவ சிலையும் உள்ளன. லக்குவணனுக்கு சற்று முன்னால் சீதை, ஸ்ரீராமர், லக்குவனார் ஆகியோர்களுக்கான உத்ஸவர் சிலைகள் இருக்கின்றன. மற்றும் ஒரு மேடையில் செல்வர், சக்கரத்தாழ்வார், கண்ணன், சந்தான கிருஷ்ணன் ஆகியோரது திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ராமர் சிலை சுமார் 4 அடி உயரம் இருக்கும். இவ்வளவு பெரிய பஞ்சலோக சிலையைக் காண்பதரிது. வலக் கையில் அம்பும் இடக்கையில் வில்லுமாக வெகு கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் ஸ்ரீராமபிரான். ஆகவே வீரகோதண்டராம சுவாமி என்ற திருப்பெயரைப் பெற்றிருக்கிறார். ராவணனை வென்று சீதையை மீட்ட பின் அயோத்திக்குத் திரும்பும்போது இங்கே ஸ்ரீராமபிரான் சற்று அமர்ந்ததாகப் புராண வழிச்செய்தி உண்டு.
சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ ஆஞ்சநேயர் ஒருகை பொத்தி, ஒரு கையை கீழே வைத்து கட்டளையி டுங்கள் என செய்தி கேட்பது போன்று உள்ளார்.
கால்சிறப்பு: வலது காலில் பச்சை நரம்பும், இடது காலில் தேமல் மச்சம் மற்றும் வடுக்களும், தாயார் கட்டிய ரக்ஷாபந்தனமும் உள்ளது.
தல வரலாறு:
கி.பி. 1862-ஆம் ஆண்டில் வேலுத்தேவர் என்பவர் ஸ்ரீராமர் மடம் ஒன்று கட்டவேண்டுமென்று கனவில் தோன்றியதைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் குளம் வெட்டும்போது சில அடிகள் தோண்டியவுடன் செங்கற்கள் பல தெரிந்தன. இன்னும் ஆழமாக தோண்டியதும் செங்கல் கட்டடம் ஒன்று அங்கே புதைந்து இருக்கிறது என்பது தெரியவந்தது. அதே ஆண்டு கார்த்திகை மாதம் 12-ஆம் நாள் புதன்கிழமை அன்று பதினான்கு அழகான பஞ்சலோக விக்கிரகங்கள் அவ்விடத்தில் கிடைத்தன. அப்படிக் கிடைத்தவை சுமார் ஐந்தடி, நாலரை அடி, நாலடி உயரமுள்ள ஸ்ரீராமர், இலக்குவனார், சீதாபிராட்டியார், அனுமான் மற்றும் (அதே போல் இரண்டரை அடி, இரண்டேகால் அடி உயரமுள்ள ஸ்ரீராமர், இளையபெருமாள், சீதாபிராட்டியார், அனுமான் 1913-ல் புதிதாக உத்ஸவத்துக்காகச் செய்து வைக்கப்பட்டது) செல்வர், சக்கரத்தாழ்வார், ருக்மணி - சத்யபாமாவுடன் கூடிய கண்ணன், சந்தானகிருஷ்ணன் ஆகியவை ஆகும். உடனே வேலுத்தேவர் அங்கு ஒரு குடிசை போட்டு உயரமான ஸ்ரீராமர், லட்சுமணன், சீதை, அனுமான் ஆகியோரை மூல விக்கிரகங்களாகவும், உயரம் குறைந்த இவர்களது திருமேனிகளுடன் இதர உலோகத் திருமேனிகளை உத்ஸவ மூர்த்திகளாகவும் வைத்து வழிபட தொடங்கினார். 14 ஆண்டுகள் வனவாசம் பூர்த்தியாகி அயோத்திக்குத் திரும்பும்போது பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் ஸ்ரீராமர் தங்கியிருந்ததாக வால்மீகி ராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆக இந்த தில்லைவிளாகம் பரத்வாஜ முனிவர் வாழ்ந்த இடமாக நாம் அறியமுடிகிறது. இங்கிருந்து பரதனுக்கு என்ன செய்தி தெரிவிக்க வேண்டுமென்று ஆஞ்சநேயர் கைகட்டி வாய் பொத்தி குருவிடம் சிஷ்யன் இருப்பதைப் போல பவ்யமாக நின்று அனுமன் காட்சி அளிப்பது இந்த தில்லைவிளாகத்தில் மட்டுமே காண முடியும்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இடதுகை மார்போடு அணைத்து தன் வலக்கையால் வாய் பொத்தி நிற்கும் அனுமனின் (சுமார் 4 அடி உயரம்) சிலை வேறு எங்கும் காணாத சிறப்பு.
இருப்பிடம் : மயிலாடுதுறை-காரைக்குடி ரயில் பாதையில் உள்ள தில்லைவிளாகம் புகைவண்டி நிலையத்தில் இறங்கி சுமார் 2 கி.மீ. தொலைவு தெற்கே சென்றால் இந்தத் திருக்கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி :
திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5.