மன்னார்குடி பாமணி ஆற்றில் வடகரையில் ஜெயங்கொண்டநாதர் சுவாமி கோயில் உள்ளது. கங்கை கொண்ட சோழனின் மூத்த மகனான ராஜாதிராஜன் என்பவர் கி.பி. 1018-1054 - ஆம் ஆண்டில் இங்கு ஆண்டு வந்தார். அவர் ஜெயங்கொண்டநாதருக்கு ஆற்றிய தொண்டுக்காக அவரை ஜெயங்கொண்டான் என அழைப்பர்.
பிரார்த்தனை
ஆரோக்கியம், ஆயுள் விருத்தி அடையவும், பகை அச்சம் நீங்கவும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் திரட்டுப்பால் படைத்தும், அன்னம் நிவேதனம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சோழ மன்னர்கள் இத்தலத்தை வணங்கி பல வெற்றிகள் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலை மையப்படுத்தி, ராஜகோபால ஸ்வாமிக்கு எடுத்துச் செல்லும் வகையில் திரட்டுப்பால் திருவிழா நடத்தப்படுகிறது. கோப்பிரளயர், கோபிலர் - இருவரும் இங்கு கண்ணனின் லீலைகளைக் கண்டபோது, கண்ணபிரான் திருப்பாற்கடலில் கோபியருடன் ஜலக்ரீடை செய்ததைக் கண்டனர். கோபியர்களுடன் ஜலக்ரீடையில் ஈடுபட்ட கண்ணன் சோர்வாகி இருப்பார் என்பதற்காக, ஜெயங்கொண்டநாதர் பசும்பால், நாட்டுச் சர்க்கரை, குங்குமப்பூர், ஏலக்காய், ஜாதிக்காய், வாசனை திரவியங்கள் கலந்து தயாரித்த குழாம்புப்பாலை (திரட்டுப்பால்) கண்ணனுக்கு அனுப்பிவைத்தார். இந்த வைபவம் ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாத ரோகிணி நட்சத்திரத்தில், ஜெயங்கொண்டநாதர் கோயிலில் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் ஜெயங்கொண்டநாதர் மூலவராக வீற்றுள்ளார். மற்றொரு சன்னதியில் வியாசலிங்கம் சிவபெருமான் காட்சியருள்கிறார். அந்த லிங்கத்தின் இடப்புறம் நாரதரும், லிங்கத்தின் பின்புறம் மகாவிஷ்ணுவும் வீற்றிருப்பர். இந்தச் சன்னதியில் திரட்டுப்பாலை வைத்து பூஜைகள் செய்து, அலங்கரிக்கப்பட்ட யானைமீது ஏற்றி ராஜகோபால் ஸ்வாமி கோயிலுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள கண்ணனுக்குக் கொடுப்பார்கள். பின், அந்தத் திரட்டுப்பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. முற்காலத்தில் தொடர்ந்து நடத்தப்பட்ட இவ்விழா, சில ஆண்டுகளுக்கு முன் தடைபட்டு மீண்டும் தற்போது விமரிசையாக நடத்தப்படுகிறது. திரட்டுபால் திருவிழா : ஆடிப் பௌர்ணமி ஈசனுக்கு உகந்த நாள். அந்நாரை கோபத்ம விரதம் என்றும், சிவபெருமானுக்கான திரட்டுப்பால் திருவிழா என்று கூறுவர். அன்று ஈசனுக்கு திரட்டுப்பால் செய்து அபிஷேகம் செய்வர். பக்தர்கள் சார்பிலும் ஈசனுக்கு திரட்டுப்பால் எடுத்துவந்து அபிஷேகம் செய்து வழிபடுவர். அந்நாளில் திரட்டுப்பால் அபிஷேகத்துக்குப்பின் ஈசனுக்கு ஊமத்தை, கருநெய்தல்பூக்களால் அர்ச்சனை செய்வது கூடுதல் புண்ணியம் சேர்க்கும். மூங்கில் அரிசி உபயோகித்து பால் பாயசம் செய்து வழிபட்டால் ஆரோக்கியம், ஆயுள் விருத்தியடையும். பகை, அச்சம் நீங்கும் என்பது நம்பிக்கை. மன்னார்குடி, திருவிடைமருதூர், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி போன்ற சிவாலயங்களில் ஆடிப் பௌர்ணமியில் திரட்டுப்பால் சாற்றி நாரத்தம்பழம், அன்னம் நிவேதனம் செய்து பூஜிப்பர். வீடுகளிலும் அன்று ஈசனுக்கு திரட்டுப்பால், நாரத்தம் சாதம் செய்து வழிபடலாம்.
தல வரலாறு:
சம்பகவனம் எனும் மன்னார்குடியில், முற்காலத்தில் ஆயிரத்தெட்டு முனிவர்கள் தவமிருந்தனர். அதில். வஹ்ணிமுகர் முனிவருக்கு கோப்பிரளயர், கோபிலர் என இரு மகன்கள் இருந்தனர். இருவரும் நாராயணனை நோக்கிக் கடும் தவமியற்றினர். தவத்துக்கு இரங்கிய பெருமாள், என்ன வரம் வேண்டும்? எனக் கேட்டார். மோட்சம் வேண்டும் எனக் கேட்டார்கள். துவாரகையிலுள்ள கண்ணபிரானைத் தரிசித்தால் மோட்சம் கிட்டும் என பெருமாள் உபதேசித்தார். இருவரும் துவாரகைக்கு புறப்பட்டனர். செல்லும் வழியில் பல ஸ்தலங்களைத் தரிசித்தனர். ஒரு முறை நாரத முனிவரைக் கண்டு வணங்கி, துவாரகைக்கு எப்படிச் செல்ல வேண்டும், கண்ணன் எங்குள்ளார்? என வினவினர். ஹம்ஸன் போன்ற தீயவரை மாய்த்து, பீஷ்மர் போன்றோரைக் காக்க விண்ணுலகம் சென்றுள்ளார். நீங்கள் துவாரகை, நந்தகோகுலம் தரிசித்துவிட்டு, சம்பகாரண்யம் (மன்னார்குடி) சென்று அங்குள்ள ஹரித்திரா நதிக்கரையில் தவம் இயற்றுங்கள் என நாரதர் பணித்தார். அவ்வாறே ஸ்தலங்கள் பலவற்றைத் தரிசித்து, ஹரித்திரா நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவமிருந்தனர். காட்சியருளிய நாராயணனிடம், அன்று பிருந்தாவனத்தில் செய்த லீலைகளை நாங்கள் கண்டருள வேண்டும் எனக் கேட்டு வரும் பெற்றனர். நாராயணனும், கண்ணனின் 30 திருக்கோலங்களையும் லீலைகளையும் இரு முனிவர்களுக்கும் காட்சியருள மோட்சம் வழங்கினார். தங்களுக்கு அருளிய கோலத்தில் இங்கு தங்கி அனைவருக்கும் காட்சியருள வேண்டுமென அம்முனிவர்கள் வரம் பெற்றனர். அதன்படி, மகாவிஷ்ணு ராஜகோபாலனாக மன்னார்குடியில் வீற்றுள்ளார் என்பது புராணம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வியாசலிங்கத்தின் இடப்புறம் நாரதரும், லிங்கத்தின் பின்புறம் மகாவிஷ்ணுவும் வீற்றிருப்பது சிறப்பு.