|
கோடு - கரை . வாஞ்சியாற்றின் கரையில் விளங்குவதால் இத்தலம் கோட்டாறு எனப்பட்டது. வெள்ளையானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறுபோலச் சொரிவித்து வழிபட்டதால் கோட்டாறு என இத்தலப்பெயர். அகத்தியர், சுபகமுனிவர், குமாரபுவனதேவர், முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற சிறப்புடையது இத்தலம். உள் பிரகாரத்தில் பால விநாயகர், கைலாசநாதர், சமயாசாரியர், சடைமுடியோடு கூடிய சுபக முனிவர், முருகன், தெட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர், சூரிய, சந்திரர், நடராஜர் முதலிய சன்னதிகள் உள்ளன.
முன்மண்டபத்திற்கு அருகில் குமார புவனேஸ்வரர் கோவில் உள்ளது. மேற்கு நோக்கிய பெரிய சிவலிங்கம் உள்ளது. அர்த்தமண்டபத்தில் பல்லாண்டுகளாக தேனீக்கள் கட்டிய பழமையான தேனடை உள்ளது. இறைவன் சன்னதியில் தேனீக்கள் ரீங்கார ஓசை செய்வதை கேட்கலாம். ஞானசம்பந்தரின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மூலவர் மிகச் சிறியவர். அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம்.
|
|