|
ஆர். வி. நகர் எனும் பகுதியில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானைத் தரிசிக்க செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திரள்கின்றனர் பக்தர்கள். தம்பி முருகன் மூலவராக அருள்பாலிக்கும் இந்தத் தலத்தில், அண்ணன் விநாயகப் பெருமானும் மிகுந்த வரப்பிரசாதியானவர். இவரின் திருநாமம் ஜெயம்கொண்ட விநாயகர், இவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால் நம் காரியம் யாவிலும் வெற்றியையே தந்தருள்வார் என்கின்றனர் பக்தர்கள். பழநியம்பதியில் ஆட்சி செய்யும் கந்தக்கடவுளைப் போலவே இங்கே உள்ள தண்டாயுதபாணியும் மேற்கு நோக்கி அருள்புரிவதால், இது சக்தி வாய்ந்த தலம் என்றும் பழநிக்கு நிகரான கோயில் என்றும் சொல்கின்றனர்.
செவ்வாய்கிழமைகளில் இங்கு வந்து தண்டாயுதபாணியை மனதாரப் பிரார்த்தித்தால், செவ்வாய் தோஷம் நீங்கும், கல்யாண வரம் கைகூடும் என்பது ஐதீகம்! அப்படி வேண்டிக்கொண்டு பிரார்த்தஜைன நிறைவேறியவர்கள் தம்பதி சமேதராக வந்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்குகின்றனர். அதேபோல் கார்த்திகை, விசாகம் ஆகிய மாதாந்திர நாட்களில் கந்தபிரானுக்கு விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பு. வைகாசி விசாக நன்னாளில் முருகப்பெருமானுக்குச் செவ்வரளி மாலை சார்த்தி, சிறப்பு அபிஷேகம் தரிசனம் கண்டால், நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்து வளம் சேர்ப்பான் கந்தப்பெருமான் என்கின்றனர் பக்தர்கள்.
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் விளையும் மலைப் பழம் மிகவும் விசேஷம்! அந்தப் பழத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து, அந்தப் பிரசாதத்தை உட்கொள்வது மிகுந்த பலனைத் தரும் என்கின்றனர். |
|