கிருத்திகை, அமாவாசை, தைப்பூசம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் ஆகிய நாட்கள் இத்தலத்தின் விசேஷ காலங்கள் ஆகும். அன்று சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெறும். இத்தலத்தின் வருட உற்சவம் பங்குனி உத்திரம் தேர்த்திருவிழாவாகும். கொடியேற்றத்துடன் துவங்கி 9 நாட்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பெறும் பெருவிழாவாகும். கிராமசாந்தி, அஷ்டபலி பூஜை, பரிவேட்டை, தெப்போற்சவம், மகா பூஜை, சாந்தி பூஜை என ஒவ்வொருநாளும் திருவிழாக்கள் நடந்தேறும். 5ம் நாள் நடைபெறும் தேர்த்திருவிழா தலையாய திருவிழாவாகும்.
தல சிறப்பு:
பழநி முருகனை ஒத்த உருவத்தைக் கொண்ட சிறிய அளவிலான திருமேனி. மலர் அலங்காரத்தில் புன்னகை ததும்பும் அழகை எத்தனை கேரம் கண்டு தொழுதாலும் சலிக்காது.
திறக்கும் நேரம்:
காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் கிழக்குநோக்கி உள்ளது. முருகன் என்றாலே அழகு என்று தானே பொருள். இம் முருகனும் அதற்கு விதிவிலக்கல்ல. பழநி முருகனை ஒத்த உருவத்தைக் கொண்ட சிறிய அளவிலான திருமேனி. மலர் அலங்காரத்தில் புன்னகை ததும்பும் அழகை எத்தனை கேரம் கண்டு தொழுதாலும் சலிக்காது. ஒருசமயம் கருவறையின் தென்பகுதியில் திடிரென வெடி சத்தத்துடன் பாறை பிளந்து விழுந்த ஓசை கேட்டது. ஊர் மக்கள் அங்கு வந்து பார்த்தபோது கண் வடிவில் ஒரு ஆழமான பள்ளம் தென்பட்டது. வெளிப்புறம் உடைந்த பாறைத் துண்டுகள் சிதறி விழுந்திருந்தன. அப்பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்தது. இறைவன் தனக்குத் தேவையான தீர்த்தத்தை தானே உருவாக்கிக் கொண்டார் போலும். இச் சுனையின் ஆழம் சுமார் 8 அடி சுவையான நீரைக் கொண்ட இச்சுனையில் வருடம் முழுவதும் வற்றாமல் ஊறிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். கோயிலைச் சுற்றி உள்ள விளைநிலங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் 150 அடிக்கு கீழ் உள்ள நிலையில், 8 அடி ஆழத்தில் சுவையான நீர் சுரந்து கொண்டிருப்பது வியப்புக்குரியது ஆகும். சுவாமியின் அபிஷேகத்திற்கு பயன்படும் இத்தீர்த்தம் சரவணதீர்த்தம் என விளங்குகிறது.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை வரம் போன்றவற்றிற்காக ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு திருக்கல்யாணம் நடத்தி வைத்தால் நீண்ட நாள் தடைப்பட்ட திருமணங்கள் கூட நடந்தேறியதாகச் சொல்கின்றனர்.
தலபெருமை:
இக்கிராமத்தின் பிரிதொரு சிறப்பு யாதெனில் கோயிலை மையமாக வைத்து ஊர் அமைந்துள்ளது. நான்கு புறமும் தேர் ஓட நல்ல அகலத்துடனும் சதுரவடிவிலும் 400 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு நிர்மாணித்திருப்பது சிறப்பாகும். தேரோட்டத்தில் கோயில் நிர்வாகிகளும் பொதுமக்களும் இணைந்து வடம் பிடித்து இழுக்க, அசைந்து ஆடிவரும் தேரின் அழகு, புன்னகை ததும்பும் முகத்தோடு வள்ளி தெய்வானையுடன் பவனி வரும் பாங்கு ஆகியவற்றைக் காண கண்கோடி வேண்டும். ஒரு கிராமிய சூழலில் அந்த ஆனந்த அனுபவத்தை, நேரில் அனுபவித்தால் மட்டுமே உணர இயலும். இத்தலத்தில் வேண்டுதல் செய்து திருமணம், குழந்தைவரம் பெற்றவர்கள் எண்ணிக்கை ஏராளம். ஒரு காரியத்தை மனதில் நினைத்து வேண்டினாலே எப்படியோ அதை நிறைவேற்றிவிடும் ஓர் அற்புத ஸ்தலம். இவ்வூரின் முதன்மையான கோயில். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு குலதெய்வமாகவும் விளங்குகிறார்.
தல வரலாறு:
இது ஒரு கிராமத்து கோயில் வளமான விளைநிலங்கள், பசுமையான தென்னந் தோப்புகளுக்கு நடுவே அமைந்துள்ள ஓர் அழகிய கோயில் வட்டமலை ஆண்டவர் கோயில். கிராமத்து கோயில் என்றாலும் அதன் பராமரிப்பு, சுத்தம் ஆகியவற்றைக் காணும்போது பிரமிப்பூட்டுவதாக உள்ளது. அனைத்து பகுதிகளிலும் பசுஞ்சாணமிட்டு ஒரே சீராக மெழுகப்பட்டிருந்தது அழகுக்கு அழகுசேர்ப்பதாக உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம். எனச் சொல்லப்படுகிறது. விவசாயி ஒருவர் கனவில் முருகன் தோன்றி ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான்சுயம்பு மூர்த்தமாக உள்ளதாகவும் அங்கு தனக்கு ஒரு கோயில் அமைத்து வழிபாடுசெய்யுமாறும் கூறினார்.
அவ்விவசாயி ஊர் பெரியவர்களை அழைத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தில் பார்த்தபோது ஒரு சுயம்பு மூர்த்தம் இருப்பதைக் கண்டனர். அவ்விடத்தில் ஒரு கற்கோயிலை எழுப்பி தினசரி பூஜைகள் நடந்து வரலாயிற்று. அங்கு தண்டத்துடன் கூடிய அழகிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். கிராமமக்கள் ஒன்று கூடி பேசி கோயில் கருவறை திருப்பணி, முன்மண்டபம் கட்ட முடிவு செய்தனர். மூலவர் சிலையை பாலாலயம் செய்து கோயில் வாயு மூலையில் தற்காலியமாக அறை அமைத்து அதில் மூலவர் சிலையை வைத்து பூஜித்துவந்தனர். அனைத்து வைபவங்களும், ஆராதனைகளும் இச்சன்னிதியில் நடைபெற்று வந்தன. பல்வேறு காரணங்களினால் கட்டிட பணிகள் சுமார் 10 ஆண்டுகள் ஸ்தம்பித்து விட்டன. கிராமத்து கோயில் என்பதால் நிதி வசதிகள் குறைவுதான். விவசாயிகளின் சாகுபடியைப் பொருத்தே நிதிநிலை இருக்கும்.
கோயில் திருப்பணி நின்றுவிட்டதால் அனைத்து மக்களும் மனதால் பாதிப்படைந்தனர் ஊர் மக்கள் ஒன்றுகூடி, கட்டிட பணிகளை தாமே மேற்கொள்ளும் முடிவை எடுத்தனர். மாட்டுவண்டிகளில் தாமே மணல், செங்கல் போன்றவற்றை கொண்டுவந்து சேர்த்தனர். கட்டிடப்பணியிலும் முழு ஈடுபாட்டுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். சுதைச் சிற்பம் கல்வேலைப்பாடுகளுக்கு மட்டும் சிற்பிகளை வேலையில் அமர்த்தினர். விளைவு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே அனைத்து பணிகளும் முடிவுற்றன. முருகப் பெருமான் எப்போதும் ஓர் உயர்ந்த இடத்தில் வீற்றிருந்து அருள்புரிவார். இங்கும் அதுபோலவே ஒரு பெரிய வட்ட வடிவமான பாறைமீது கருவறையும் கோயிலும் அமைந்திருப்பதைக் காணலாம். மூலவர் சிலையும் உயர்ந்த இடத்தில் உள்ளது. இதன் காரணமாகத்தான் வட்டமலை ஆண்டவர் என்ற திருநாமத்தைப் பெற்றார்.
படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பழநி முருகனை ஒத்த உருவத்தைக் கொண்ட சிறிய அளவிலான திருமேனி. மலர் அலங்காரத்தில் புன்னகை ததும்பும் அழகை எத்தனை கேரம் கண்டு தொழுதாலும் சலிக்காது.
இருப்பிடம் : கோவை மாவட்டம் அன்னூர்- தென்னம்பாளையம் சாலையில் 2 கி.மீ. தொலைவில் குமாரபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. அன்னூரில் இருந்து நகர பேருந்து ஏஆர்3, ஏஆர்11 மூலம் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதிகளும் உண்டு.