மேற்குப்பக்கம் வாயிலில், ராஜகோபுரம் இல்லாததால் நுழைவு வாயிலில் பஞ்ச மூர்த்திகளோடு கூடி வாயில் அமைக்கப்பட்டுள்ளது. வலதுபக்கம் ஒரு கலசம் கூடிய தனி சன்னிதியில் ஓம்கார கணபதியும், இடபக்கம் ஒரு கலசத்துடன் கூடிய தனி சன்னிதியில் கல்யாண சுப்ரமணியர் வள்ளி, தெய்வானையுடனும், பின் பக்கம் தெற்கு பக்கம் பார்த்த வகையில் சண்டிகேஸ்வரர் ஒரு கலசம் கூடிய தனி சன்னிதியில், மடப்பள்ளி எதிரில், தல விருட்சம் வில்வம் உள்ளது. தட்சிணாமூர்த்தி தெற்கு பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றார்.
பிரதான நந்தி மண்டபத்தில் 14 தூண்கள், நுழைவு வாயிலில் அருகில் பிரதான நந்தி மற்றும் பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. சவுந்திரநாயகி அம்மன் கிழக்குப் பக்கம் பார்த்த வகையில் தனிக்கலசத்துடன் கூடிய சன்னிதியிலும், அருகில் மேற்குபக்கம் பக்கம் பார்த்த வகையில் பைரவர், சனீஸ்வரன், சந்திரன் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தில் எட்டுத்தூண்கள், கிழக்குப்பக்கம் பார்த்த வகையில் மகாலிங்கம், அருகில் திருமுறைப்பேழையும், பழக்காலத்து அழியா ஓவியம் உள்ளது. மேலும் மேற்கு பக்கம் பார்த்த வகையில் நர்த்தன விநாயகர் அருள்பாலிப்பதுடன், அதிகார நந்தி வலது பக்கம் தலையை சாய்த்த வண்ணம் படுத்துள்ளார். அர்த்த மண்டபத்தை தொடர்ந்து கற்பகிரகத்தில் உத்திராட்சப்பந்தலின் கீழ் சுயம்பாக ஒரு கலசம் கூடிய தனி சன்னிதியில் அகஸ்தீஸ்வரர் அருள்பாலிக்கின்றார். ஆயிரத்து 500 -1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் எனக் கூறப்படுகிறது. கடந்த 2013 செப்டம்பர் 15-ம்தேதி கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
இத்தலம் சதுர்வேதி மங்கலம் என்ற புராணப்பெயருடன் விளங்கியது. (நான்கு வேதங்கள் படித்த பண்டிதர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும் அப்பர் பாடிய அபிமுக்தீஸ்வரர் கோயிலும் உள்ளது) சோழர்காலத்தில் மணக்கால் ஐயம்பேட்டை என மருவியது அதற்கான வரலாறு தெரியவில்லை.
பிரார்த்தனை
திருமணத்தடை, புத்திரபாக்கியம், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு மற்றும் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
திருமணம் தடை: இங்குள்ள கல்யாணக்கோலத்தில் உள்ள சுவாமி- அம்பாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து, புது வஸ்திரங்கள், மாலைகள் அணிவிப்பது. புத்திரபாக்கியம்: செவ்வாய்க்கிழமைகள், கார்த்திகை மற்றும் சஷ்டி தினங்களில் முருகனை வழிபட்டால் புத்திரபாக்கியம் மற்றும் திருமணத்தடை நீங்குகிறது. தீராத பிரச்சனைகள்: தீர்க்கப்படுவதால், சக்திவாய்ந்த பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியின் போது அபிஷேக ஆராதனை செய்தல். சகல ஐஸ்வர்யங்கள்: சங்கடஹர சர்த்தியில் சவுபாக்கிய விநாயகரை வழிபட்டு சகல ஐஸ்வர்கங்களையும் பெறலாம்.
தலபெருமை:
திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நாச்சியார் கோயிலுக்கு தெற்கிலும், திருக்கண்ணபுரம் சவுரிராஜபுரம் கோயிலுக்கு மேற்கிலும் அபிமுக்தீஸ்வரர் கோயிலுக்கு கிழக்கிலும் 18 கோயில்கள், 18 குளங்கள் மற்றும் 18 வீதிகள் அடங்கிய வரலாற்றுப்புகழ் பெற்ற ஊர் மணக்கால். ஐயம் பேட்டையான இங்கு சோழர்காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலை திருநாவுக்கரசர் வைப்பு தலத்தலமாக வைத்து பாடியது தனி சிறப்பு என்று கூறப்படுகிறது.
தல வரலாறு:
இறைவன் திருமணக்கோலம் காண்பதற்கு அகத்திய முனிவர் இங்கு தவம் செய்தார் எனக்கூறப்படுவதுடன் இங்கு மூலவருக்கு அகஸ்தீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. பெருவேளுரில் அம்பிகை அபின்ன நாயகியாகத் தவக்கோலம் கொண்டு இறைவனை மணம்புரியத் தவம் செய்த போது, திருக்கரவீரத்தில் திருமணம் நடந்தது. இதை நினைவு கூறும் வகையில் சுவாமிக்கும் வலபக்கம் அம்பிகை சன்னிதி உள்ளது. பின்னர் ராப்பட்டீசுவரத்தில் உள்ள அந்தபுரத்தில் ஓர் இரவு தங்கி கயிலைக்கு சென்றதால் அந்த அம்மன் அந்தப்புரநாயகி என்ற பெருமை இத்தலத்திற்கும் பெருமை சேர்க்கிறது. அந்த திருமணத்திற்கு பந்தல் கால் நட்டது மணக்கால் என்று ஆன்றோர்கள் கூறியுள்ளனர். ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக கூறப்படுகிறது.
திருநாவுக்கரசர் இத்தலத்தை வைப்பு தலமாக பாடியுள்ளார். சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவன்கோயில்கள் 108 - இல் இதுவும் குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுகள் அதிகளவில் அழிந்துள்ளதால் வரலாறுகள் தெரியவில்லை. பிறத்தகவல்கள்: அகத்திய முனிவர், திருநாவுக்கரசர் இத்தலத்தின் அருகில் உள்ள பெருவேளூரைப் பாடியிருப்பதாலும், திருவாரூர் பதிகத்தில் இத்தலத் தின்பெயரை வைத்துப்பாடியிருப்பதாலும், அப்பர் பெருமான் மணக்காலை தரிசித்துப் பாடியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கான சான்றுகள் மற்றும் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. சோழர்கால கோயில்களில் இதுவும் ஒன்று, இக்கோயில் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து கிடந்தது. அப்பகுதியைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் தியாகேஸ்வரி என்ற பெண் மணியின் முயற்சியால் கோயில் புதுப்பித்து குடமுழுக்கு செய்யப் பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தை மாதத்தில் மாலையில் சூரிய அஸ்தமத்தின் போது, சூரிய ஒளிக்க திர்கள் சுவாமியின் மீது விழும் நேரத்தில் சூரிய பூஜை நடத்தப்படுகிறது.