கருவறையில் மேற்கு நோக்கிய நிலையில் மகிழ்ச்சியை அருள்கின்ற மநுநாதேஸ்வரர் உள்ளார். கருவறைக்கு வெளியே தெற்குநோக்கி அம்பாள் மாணிக்க சிவகாம சுந்தரி அருள்புரிகிறாள். கிழக்கு நோக்கி தனிச்சன்னிதி கொண்டு பாலசுப்ரமணியர் (குமாரசுப்ரமணியர்) அருள்புகிறார். கோஷ்டத்தில் துர்க்கை அருள்புரிகிறாள். ஈசான்யத்தில் சூரியன், பைரவர் சிலைகள் உள்ளன. சனீஸ்வரர் சன்னிதி உண்டு. நவகிரகங்கள் கிடையாது. அந்தணர் வேடத்தில் வரதராஜ பெருமாளும் யாகத்திற்கு வந்ததால், அதை நினைவுபடுத்தும் வண்ணம் ஊரில் ஒரு பெருமாள் கோயிலும் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வெவ்வேறு திதியை ஒட்டி மாத சிவராத்திரி வரும்.
ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி பெருமையை சிவபெருமான் நந்திக்குச் சொன்னதாகவும், அவர் மற்றவர்களுக்குச் சொன்னதாகவும் புராணக் குறிப்பு உண்டு அவை: சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி- உமாதேவியால் வழிபடப்பட்டது. வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி- சூரியனால் வழிபடப்பட்டது. ஆனி மாத வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி- ஈசனால் வழிபடப்பட்டது. ஆடி மாத தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி- முருகனால் வழிபடப்பட்டது. ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி- சந்திரனால் வழிபடப்பட்டது. புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரி- ஆதிசேஷனால் வழிபடப்பட்டது.ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி சிவராத்திரி- இந்திரனால் வழிபடப்பட்டது.
கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி என இரண்டு சிவராத்திரிகள்- சரஸ்வதியால் வழிபடப் பட்டவை. மார்கழி மாதத்தின் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரிகள்- லட்சுமியால் வழிபடப்பட்டவை. தை மாத வளர்பிறை திரிதியை சிவராத்திரி- நந்திதேவர் வழிபட்டது. மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரி- தேவர்கள் வழிபட்டது. பங்குனி மாத வளர்பிறை திரிதியை சிவராத்திரி- குபேரனால் வழிபடப்பட்டது. திருவீழிமிழலையிலிருந்து இறைவனைக் கைப்பிடித்து அழைத்துவந்த பிள்ளையார் நின்றகோலத்தில் காட்சிதருவதை கோயில் மகாமண்டபத்தில் இன்றும் காணலாம்.
பிரார்த்தனை
மாத சிவராத்திரியன்று விரதமிருந்து வழிபாடுகள் மேற்கொண்டால் எண்ணிய காரியங்கள் ஈடேறும் என்கின்றனர் பக்தர்கள்.
நேர்த்திக்கடன்:
தேய்பிறை அஷ்டமி நாளிலோ இக்கோயிலிலுள்ள பைரவர்க்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால், உடன் பிறப்புகளுடனான பிணக்குகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்; எதிரிகள் தொல்லை அகன்று விடும். அதுமட்டுமின்றி செவ்வாய்க்கிழமை சாயரட்சை காலத்தில் பைரவருக்கு மாதுளம்பழத்தில் மிளகுதீபம் ஏற்றினால் இழந்ததை மீட்கலாம். வரவேண்டிய பணம், சொத்துகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்பதால் இங்கு ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர்.
தலபெருமை:
மேற்கு நோக்கிய சிவன்கோயில். ராஜகோபுரம் இல்லை. மேற்கே உள்ளே நுழைவாயிலைக் கடந்ததும் நிருதிமூலையில் சித்தி விநாயகர் க்ஷேத்திர விநாயகராக அருள்புரிகிறார். நந்தி தேவர், பலிபீடத்தையடுத்து மகாமண்டபம் உள்ளது. தெற்கே சுதை வடிவில் ஒரு மேடையில் நால்வர் சிற்பங்கள் உள்ளன. அதனையடுத்து அர்த்தமண்டபத்தின் உட்புறம் வீழிநாதரையும் வரதராஜபெருமாளையும் அழைத்துவந்த பாலவிநாயகர் சிலை உள்ளது. தெற்குநோக்கிய வண்ணம் நடராஜரும் சிவகாமியம்மையும் அருள்புரிகிறார்கள். சுதை வடிவில் துவார பாலகர்கள் டிண்டி, முண்டி சிலைகள் உள்ளன.
தல வரலாறு:
நிம்மதியென்பது சொர்க்கத்தில் மட்டுமல்ல இவ்வுலகிலும் உள்ளது என்பதை மநுநீதிசோழனின் வாழ்வில் நிரூபித்து மகிழ்ச்சியைத் தக்கவைத்த மகிமைவாய்ந்த திருத்தலம்- காவிரி தென்கரைத் தலங்களில் வைப்புத்தலமாக விளங்குகின்ற தலம்- தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவராலும், திருவிசைப்பா அருளிய சேந்தனாராலும், திருப்புகழ்தந்த அருணகிரிநாதராலும் பாடல்பெற்ற தலம்- திருவீழிமிழலை தலபுராணத்தோடு நெருங்கிய தொடர்புடைய தலம்தான் மருதவஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் மநுநாதேஸ்வரர் திருக்கோயில். நீதிநெறி தவறாது ஆட்சிசெய்தலுக்கு உதாரணமாகக் கூறப்படுபவன் மநுநீதிசோழ மன்னன். சோழ நாட்டின் நீதிமுறைக்கு எடுத்துக்காட்டாக, மநுநீதிசோழன் பற்றி கண்ணகி குறிப்பிடுவதாக சிலப்பதிகாரத்தில் வருகிறது. பதினெண்கீழ் கணக்கு நூலான பழமொழி நானூறு நூலிலும் இக்கதை எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. சேக்கிழாரின் பெரியபுராணத்திலேயே மநுநீதிசோழன் கதை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
இவைதவிர சோழ மன்னர் பெருமைகூற எழுந்த இராஜராஜ சோழன் உலா, விக்ரம சோழன் உலா, குலோத்துங்கச் சோழன் உலா போன்றவற்றிலும் இக்கதை வருகிறது. இத்தகைய பெருமைவாய்ந்த மநுநீதிசோழனுக்கு வீதிவிடங்கன் என்ற அழகான ஒரு மகன் இருந்தான். தேரேறி வீதியுலா கிளம்பினான். அப்பொழுது அவனையே அறியாது அவனது தேரின் சக்கரங்கள் ஏறி ஒரு பசுங்கன்று இறந்துவிட்டது. இதைக்கண்ட தாய்ப்பசு அரண்மனை சென்று, ஆராய்ச்சி மணியின் கயிற்றை தனது வாயால் அடித்து நீதி கேட்டது. மன்னனும் பசுவின் பின்னால் சென்று பார்த்தபோது, வீதிவிடங்கன் வந்த பாதையில் பசுவின் கன்று இறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். பசுவின் துயரறிந்த மன்னன், தானும் தன் மகனை இழத்தலே தகுமென்று, மந்திரியிடம் இளவரசனைத் தேரேற்றிக் கொல்லப் பணித்தான். மந்திரியோ மன்னர் குலத்திற்கு ஒரு தீங்கும் செய்யேன் என்று கூற, மன்னனே தன் மகனைத் தேரேற்றிக் கொன்றான் அவ்வாறு தன் மகனைத் தேரேற்றிக் கொன்ற பாவத்தால் மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அதிலிருந்து விடுபட சோழமன்னன் தென்திசை நாடி திருவீழிமிழலையை அடைந்து, அரிசில் நதியிலும் தீர்த்தப் புஷ்கரணியிலும் நீராடி, விதிப்படி இறைவனைப் பூஜித்தான்.
பின்னர் தென்கீழ்த்திசையில் ஐங்குரோச தூரத்தில் ஒரு தவச்சாலையை அமைத்து அங்கே அருந்தவங்கள் புரிந்தான். அவ்விடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தீர்த்தமும் உண்டாக்கி, நித்திய நிவேதனங்களையும் செய்தான். மநுதவம் செய்த இடம் மநுதவஞ்சேரி எனப்பட்டு, தற்போது அது மருதவஞ்சேரி என்று வழங்கப்படுகிறது. சோழமன்னன் மருதவஞ்சேரியில் மிகப்பெரிய யாகம் ஒன்றினையும் செய்தான். அதன் முடிவில் அந்தணர் நூற்றுவர்க்கு வீடும், நிலமும், பொன், பொருள், ஆடைகளும் தானமாகக் கொடுக்க எண்ணம் கொண்டான். அவ்வாறு செய்யும்போது அந்தணர் இருவர் குறையவே, தம் வேள்விக்கு தடை நேரிடுமோ என்று வருந்திய மன்னன், மருதவஞ்சேரியிலிருந்தே திருவீழிமிழலையில் உறையும் வீழிநாதரை மனமுருகத் துதித்துத் தம் குறையைத் தீர்க்குமாறு வேண்டினான். அன்றிரவு மநுவின் கனவில் வீழிநாதர் தோன்றி, அஞ்சேல் நாளை உம் குறை தீர்ப்போம் எனக் கூறியருளினார். மறுநாள் திருவீழிமிழலையிலிருந்து வீழிநாதப் பெருமானும், வரதராஜபெருமாளும் அந்தணர் வடிவில் வந்தனர். அவர்களை ஒரு சிறுவன் மருதவஞ்சேரிக்கு யாகம் நடக்குமிடத்திற்கு அழைத்துவந்தான். பிராமணர் வடிவில் வீழிநாதரும், வரதராஜ பெருமாளும், சிறுவனாக வந்த விநாயகரும் மநுவின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கி, குறைதீர்த்து மறைந்தருளினர். என்பதை கீழுள்ள ஸ்லோகத்தால் அறியலாம்.
இருப்பிடம் : இக்கோயில் கும்பகோணத்திலிருந்து 30 கி.மீ தூரத்திலும், பூந்தோட்டத்திலிருந்து 5 கி.மீ தூரத்திலும், கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலுக்கு மேற்கே 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பூந்தோட்டத்திலிருந்து எரவாஞ்சேரி, நாச்சியார் கோயில் வழியாக கும்பகோணம் செல்லும் பஸ்சிலும் செல்லலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020