மாங்கல்ய சவுபாக்கியத்துக்கு துர்கா தேவிக்கு சுயம்வர புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. பவுர்ணமியன்று, சத்யநாராயண பூஜை வெகு விமர்சையாக திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நவராத்திரி வைபவத்தின் முக்கிய நிகழ்வு சங்கீத உற்சவம் ஆகும். விநாயக சதுர்த்தியன்று 108 கணபதிகளை அலங்காரம் செய்து ஆராதனைகளுக்குப் பின் ஆற்றில் நிமஞ்சனம் செய்யப்படுகிறது. இத்தலத்தின் முக்கிய பெருவிழா தன்வந்திரி ஜெயந்தி வைபவம் ஆகும். தினசரி நடைபெறும் அன்னதானம் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த அன்னத்தை தன்வந்திரி பகவானின் பிரசாதமாக உட்கொள்வதின் மூலம் எந்த வியாதியும் தம்மை அண்டாது எனவும் உள்ள வியாதிக்கும் இது மருந்தாகும் என முழுமையாக நம்புகின்றனர். ஆனி மாதம் அஸ்த நட்சத்திரதன்று கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளாகும். அந்நாளில் ஐயப்பன் விக்ரகத்தை புஷ்பங்களால் மூடப்படும் புஷ்பாஞ்சலி வைபவம் காணக் கிடைக்காத காட்சியாகும். இந்த வைபவத்தைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புகழ்பெற்ற விஜய பொடுவாள் இயற்றிய அஷ்டபதி பாடலை தினந்தோறும் கேட்டு மகிழலாம்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில்,
ராமநாதபுரம்,
கோயம்புத்தூர்.
போன்:
+91 422 4322888, 312
பொது தகவல்:
உடல் நலத்திற்கு மிகவும் இன்றியமையாதது தூய காற்று. கோவை மாநகரின் மையப் பகுதியான ராமநாதபுரத்தில் தூய காற்று வீசும் கோயில் வளாகத்தில் நுழைந்தால், ஒரு மலைப்பிரதேசத்தில் உள்ளதைப் போன்ற ஓர் உணர்வு வரும். வளர்ந்தோங்கிய பசுமையான மரங்கள் சூரிய ஒளி கூட ஊடுருவ முடியாத அளவு அடர்த்தி. ஸ்ரீசைலம் மலையில் ஆதிசங்கரர் அமர்ந்து சவுந்தர்ய லகரி எழுதிய வனப்பகுதியை ஒத்திருக்கும் சவுந்தர்யமான சூழல், காலை நேரத்தில் அச் சோலையில் குடிகொண்டிருக்கும் பறவையினங்கள் எழுப்பும் குரல்ஓசை இறைவனை துயில் எழுப்பவா? என எண்ணத் தோன்றும். நுழைவு வாயில் மண்டபத்தின் இருபுறமும் விவேகானந்தர் புத்தர், சைத்தன்ய மஹா பிரபு, சாய்பாபா, திருவள்ளுவர், ராகவேந்திரா துக்காராம், நாராயணகுரு, மீரா, ஆதிசங்கரர், அன்னமாச்சாரியர் ஆகியோரது உருவச் சிலைகள் ஒவ்வொரு தூணிலும் அமைத்துள்ளனர். அவர்கள் வாழ்ந்த காலம், வரலாறு மற்றும் பொன் மொழிகளை அழகாக பட்டியலிட்டுள்ளனர்.
அம்மண்டபத்தில் பயணிக்கும் போதே நெய் தீபங்களின் வாசனை, ஹோம குண்டங்களிலிருந்து வரும் நறுமண வாசனை நம்மை வரவேற்கும். கோயில் வளாகத்தில் நுழைந்தவுடன் நாம் காண்பது பளிச்சென்று விளங்கும் சுடர்விடும் ஆளுயர தீபம் உலக அமைதிக்காக என்ற வாசகத்துடன் காணப்படுகிறது. கொடிக்கம்பத்தின் எதிரே உள்ள மூலவர் சன்னிதி. பிரதான சன்னிதியின் உட்பிரகாரத்தில் துர்க்கை, உமா மகேஸ்வரர், சுப்ரமணியர் விநாயகர் ஆகியோர் தனிசன்னிதிகளில் அருள்கின்றனர். அடுத்து வடபகுதியில் ஆஞ்சநேயர், ஐயப்பன் தனிச்சன்னிதிகளில் கிழக்கு நோக்கி உள்ளனர். ஆஞ்ச நேயருக்கு எதிரே பகவதியம்மன் மேற்குநோக்கி அருள்கிறார். நவகிரஹ சன்னிதி இவ்வளாகத்தில் தனியே உள்ளது. தன்வந்திரிபகவான் பிரதானமாகக் கோயில் கொண்டுள்ள தலங்கள் மிகச் சிலவே. அவற்றுள் இத்தலம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.
பிரார்த்தனை
நோய் நிவர்த்திக்காக இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
உடல் நலத்தில் எந்த பாதிப்பும் வராது பகவானுக்கு பிடித்த பால் பாயசம் நைவேத்தியமாகப் படைக்கின்றனர். ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் வடைமாலை சாத்தப்படுகிறது.
தலபெருமை:
கோயில் கட்டுமானங்கள் அனைத்தும் கேரள கலாச்சார மரபுபடி அமைக்கப்பட்டுள்ளன. பூஜை முறைகள் கேரள ஆச்சாரப்படி நடைபெறுகின்றன. பொதுவாக கேரள கோயில் பூஜை முறைகள் அர்ச்சனை ஆராதனைகள் மாறுபட்டிருக்கும். நம்பூதிரிகள் கருவறையில் அமர்ந்து யோகமுத்திரைகளுடன் வேத மந்திரங்களை உச்சாடனம் செய்து தெய்வ திருமேனிகளுக்கு உருவேற்றிக் கொண்டிருப்பதால் இறை சக்திக்கு ஆற்றல் கூடிக் கொண்டே இருக்கும். தன்வந்திரி உடல் நலத்திற்குரிய தெய்வமாக இருப்பதால் இங்கு மிருத்யுஞ்ஜய ஹோமம் எனப்படும் ஆயுள் ஹோமம் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஹோமங்கள் எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக நடப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று முன்கூட்டியே பதிவு செய்து யாகத்தில் கலந்து கொள்ளலாம்.
அப்படி கலந்து கொள்ளும் அனைவரும் எந்த பாகுபாடின்றி சமமாக நடத்தப்படுகின்றனர். யாகத்தைத் தொடர்ந்து தன்வந்திரி பகவானுக்கு பிடித்த பால் பாயசம் நைவேத்தியமாகப் படைத்து நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டால் உடல் நலத்தில் எந்த பாதிப்பும் வராது என முழுமையாக நம்பப்படுகிறது. இங்கு நடைபெறும் பூஜையின் போது வாத்ய இடைக்கயும் தீபாராதனை சமயத்தில் செண்டை வாத்தியம் முழங்குவதும் கேட்போரை பரவசத்தில் ஆழ்த்துகிறது. இத்தலத்தின் தனிச் சிறப்பு எந்த விதமான செயற்கை ஒளி இல்லாமல் முழுவதும் நெய் மற்றும் நல்லெண்ணெய் விளக்குகள் உமிழும் ஒளி பரவி இயற்கையான வெளிச்சத்தைத் தருவது தான், இத்தலத்தில் வியாபிக்கும் தெய்வீக கூடுதல் அதிர்வுகளை உணர முடிகிறது.
தல வரலாறு:
மேரு மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் தேவர்கள் ஒருபுறமும் அசுரர்கள் ஒரு புறமும் இருந்து பாற்கடலைக் கடைந்தபோது அமிர்த கலசத்துடன் ஒருவர் வெளிப்பட்டார். தன் எதிரே நின்றிருந்த மகா விஷ்ணுவை சிரம் தாழ்ந்து வணங்கினார். அவருக்கு அப்சா எனப் பெயரிட்டார் விஷ்ணு. நான் அமிர்தத்தை பாற்கடலில் இருந்து கொண்டு வந்ததால் தேவர்களுக்கு கொடுக்கும் போது எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என வேண்டினார் அப்சா. மகாவிஷ்ணு தேவர்கள் உனக்கு முன்பே தோன்றியவர்கள். அவர்களின் கடின உழைப்பால் கிடைத்ததை நீ எந்த முயற்சியும் எடுக்காமல் எளிதாய் கொண்டு வந்தாய். எனவே உனக்கு அமிர்த கலசத்தைக் கொடுக்க முடியாது. அதே போல் அசுரர்களுக்கும் அமிர்தம் கிடைக்காது.
அசுரர்கள் அமிர்தத்தை உண்டால் தேவ÷õலகத்தினருக்கும், பூலோகத்தினருக்கும், பிரம்மனுக்கும், வரம் தந்த எங்களுக்கும் என்ன விளைவுகள் உண்டாகும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனவே இந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் தான் தர இயலும் என்றார். இதைக் கேட்ட அப்சா நானும் அசுரர்களைப் போல் தீமை செய்வேன் என எண்ணுகின்றீர்களா? அதனால் தான் மறுக்கின்றீர்களா? என்றார். இல்லை, நீ அமிர்தம் உண்டால் யாருக்கு என்ன பலன்? பூலோகத்தில் நன்மை செய்யவே தோன்றியவன் நீ. பூலோக மக்களைக் காக்கவே பிறந்தவன் அதனால் உனது இரண்டாவது பிறவி பூலோக மக்களுக்கு பயன்படும். நீ ஆயுர்வேத மருத்துவத்தில் தலை சிறந்தவனாக திகழ்வாய். தன்வந்திரி என அழைக்கப்படும் நீ, தேவர்களை விட உயர்வாகப் புகழப்படுவாய். இப்புவி உள்ளவரை உன்னை யாரும் மறக்க மாட்டார்கள். உன்னிடம் ஆசி பெற்ற உன்னை நாடி வருவார்கள் எனக்கூறி அப்சாவுக்கு ஆசி வழங்கி மறைந்தார் விஷ்ணு பகவான். காசியை ஆண்ட மன்னருக்கு மகனாகப் பிறந்தார் அப்சா. அந்த குழந்தைக்கு தன்வந்திரி எனப்பெயரிட்டு மகிழ்ந்தனர்.
ஆயுர்வேத மருத்துவத்தில் ஈடுபாடு ஏற்பட்டு, நன்கு கற்றறிந்து தலைசிறந்த மருத்துவராகத் திகழ்ந்தார். அதன்பலனாக தன்வந்திரியிடம் அதிக சீடர்கள் சேர்ந்தனர். ஒரு சமயம் தன்வந்திரியும் அவரது சீடர்களும் கைலாய நாதரைத் தரிசிக்க கைலாயத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். இதனை விரும்பாத தச்சன் எனும் நாகம் அவர்களை வழி மறித்து தன் விஷத்தை அவர்கள் மேல் உமிழ்ந்தது. கோபமுற்ற சீடர்கள் அப்பாம்பை கொல்ல முயற்சித்தனர். இதைக் கண்ணுற்ற வாசுகி என்னும் பாம்பு கோபத்துடன் அத்தனை சீடர்கள் மீதும் விஷக்காற்றை ஊதி மயக்கமடையச் செய்தது. அதனால் சீடர்கள் உயிரற்ற உடல்போல மயங்கி தரையில் வீழ்ந்தனர். தன்வந்திரி தன் ஆயுர்வேத சிகிச்சை மூலம் மயக்கத்தை தெளிய வைத்தார். தன்வந்திரியின் நடவடிக்கையால் கோபமுற்ற வாசுகி, தன் சகோதரி மானசதேவியை அழைத்து வந்து உயிர் பெற்ற சீடர்களை கொல்லும் படி வேண்டினாள். தன்வந்திரிமுன் சீடர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை. போராடி முடிவில் சோர்வடைந்தனர். தங்களை விட ஆற்றல் வாய்ந்தவர் என்பதைப் புரிந்து கொண்டு, நீங்கள் யார்? என தன்வந்திரியிடம் வினவினாள்.
மகாவிஷ்ணுவால் படைக்கப்பட்டவர் என்பதைத் தெரிவித்தார். தேவர்களைவிட மேலானவர் என்பதை அறிந்து மிக்க மரியாதையுடன் தன்வந்திரியையும் சீடர்களையும் கைலாயத்திற்கு அழைத்துச் சென்றனர். தேவர்கள் தன்வந்திரியின் மகிமையைத் தெரிந்து கொண்டு வணங்கினர். பின் அவரைத் தங்களின் ஆஸ்தான மருத்துவராக நியமித்தனர். பூலோகத்தில் உள்ளவர்கள் நோய் பாதிக்கப்பட்டால் தன்வந்திரி பகவானை வணங்கி மருந்து உட்கொண்டால் நோய் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம். மருத்துவர் சிகிச்சை அளித்தாலும் தன்வந்திரி பகவானைத் துதித்து, அவர் அருட்பார்வை பட்டால் தீராத வியாதிகூட விரைவில் குணமாகி விடும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட மருத்துவரான தன்வந்திரி பகவான் வாஸம் செய்யும் கோவையில் உள்ளன. பெருமாள் கோயில்களில் பரிவார தெய்வமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் தன்வந்திரி பகவான் இங்கு தனிக் கோயில் கொண்டு பிரதான மூர்த்தியாய் விளங்குகின்றார். மூலவர் சன்னிதியில் தன்வந்திரி பகவான் வீற்றிருக்கின்றார். பகவான் மலர்ந்த முகத்துடன் பின்னிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும் முன்னிரு கரங்களில் அட்டைபூச்சி மற்றும் அமிர்த கலசத்தை ஏந்தி நின்ற கோலத்தில் மேற்குத் திசை நோக்கி அருள்புரிகின்றார்.