அனைத்து சனிக்கிழமைகள், கார்த்திகை தீபம் மார்கழி அனைத்து நாட்கள், வைகுண்ட ஏகாதசி நாட்களில் மட்டும் பூஜைகள் நடைபெறும். புரட்டாசி அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு திருமஞ்சனமும் சுவாமி புறப்பாடும் உண்டு.
தல சிறப்பு:
இங்குள்ளவர் சுயம்புமூர்த்தம் மட்டுமின்றி, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய பெருமைகளுக்குரியது.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12.00 மணி வரை வரை திறந்திருக்கும். (சனிக்கிழமைகளிலும் பிற விசேஷ தினங்களிலும்)
முகவரி:
அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில்,
சீலியூர், கோயம்புத்தூர்-641025.
பொது தகவல்:
மலைமீது செல்வதற்கு வசதியாக கற்களை அடுக்கி படிகளை அமைத்தனர். சமதள பகுதிகளில் கற்களை பாவி நடந்து செல்வதற்கு ஏதுவாக அமைத்தனர். இதற்கு பெருந்தொகை செலவானதால் சிறிது சிறிது ஆக செய்து வேலையை முடித்தனர். படிகள் சிமெண்ட் மணல் கலந்து கட்டாமல் கற்களை அடுக்கி வைத்து உருவாக்கியுள்ளதால் சீராக இருக்காது. ஆனாலும் ஏறுவதற்கு வசதியாக இருக்கும் வகையில் அமைத்துள்ளனர். பெரும்பாலான பாதைப் பகுதிகளில் அடர்ந்த மரங்கள் வளர்ந்திருப்பதால் எப்போதும் நிழல் இருக்கும். மலை ஏறும் போது நல்ல காற்றைச் சுவாசிக்க முடிவதுடன் மூலிகைகளின் நறுமணத்தையும் அனுபவிக்கலாம். உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்ல வலிமை சேர்ப்பதாக உள்ளது. கோயிலின் முன் மேடையுடன் கூடிய தீப ஸ்தம்பம் உள்ளது.
மகாமண்டபத்தின் தெற்கு பகுதியில் விநாயகப் பெருமானும் நாகரும் அருள்பாலிக்கின்றனர். இவ்வூரில் உள்ள விவசாயிகள் அனைவரும் தமது தோட்டத்தில் விளைந்த பயிர்களை அறுவடை செய்யும் முன் கோயில் பூசாரியை அழைத்து வந்து காட்டில் பூஜை செய்த பின்பு தான் அறுவடையைத் தொடங்குவர். அறுவடை செய்ததில் ஒரு பங்கை அன்னதானத்திற்கு ஒதுக்கிய பின் மீதமுள்ள தானியத்தை சொந்த பயன்பாட்டுக்கோ அல்லது விற்பனைக்கோ எடுத்துக் கொள்வர். இன்றும் இக்கிராமத்தவர்கள் இம்முறையைக் கடைபிடித்துவருகின்றனர்.
இக்கோயில் கிராமத்து கோயில் என்பதுடன் மிகச் சிறிய கோயில். ஆனால் சக்தி வாய்ந்த மூர்த்தி. பூஜை முறைகள் எந்தவிதமான ஆகம விதி முறைகளுக்கும் உட்பட்டதல்ல. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய பெருமைகளுக்குரியது. தற்போது வறட்சியின் காரணமாக புஷ்கரணி வறண்டு விட்டது. அபிஷேகத்துக்கு உரிய நீரை அடிவாரத்திலிருந்து சுமந்து தான் கொண்டுவரப்படுகிறது. கடினமான மலையேற்றம் என்றாலும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வருகின்றனர். மலையேற முடியாதவர்கள் கூட மற்றவர்களின் துணையோடு வருவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஐந்தாம் தலைமுறைச் சார்ந்தவர்கள் பூஜை செய்து வருகின்றனர்.
பிரார்த்தனை
உடல் பிணி, குழந்தையின்மை, திருமணத் தடை, தொழில்வளம் போன்ற வேண்டுதல்களுக்கு இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
தலபெருமை:
ரங்கநாதருக்கு வெள்ளியிலான முக கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு காரமடை ரங்கநாதர் கோயிலின் மூலவரை ஒத்திருப்பது விசேசம். இந்த வெள்ளி கவசம் வந்த விதம் சுவாரஸ்யமானது. மலையின் அடிவாரத்தில் உள்ள சீலியூரில் விவசாயமே பிரதான தொழில். பெரும்பாலான விவசாயிகள் சோளப் பயிரை விளைவித்து வருவர். நன்கு வளர்ந்து முதிர்ந்தவுடன் சோளகதிர்களை திருடிச் சென்று விடுவர். அதனைப் பாதுகாக்க காவல் காத்து வருவது வழக்கம். ஒரு விவசாயி தனது நிலத்தில் நன்கு விளைந்து முற்றிய கதிர்களை காவல் காத்து வந்த நிலையில் ஒருவன் திருடிக்கொண்டிருப்பதைக் கண்டார். சற்றும் யோசிக்காமல் தன்னிடமிருந்த துப்பாக்கியால் அத்திருடனை நோக்கி சுட்டுவிட்டார்.
குண்டு அவன் நெஞ்சில் பாய அதே இடத்தில் சுருண்டு விழுந்து மாண்டு போனான். அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட நீண்ட நேரம் ஆகியது. மனதை திடமாக்கிக் கொண்டு, அந்த உடலை குழிதோண்டி புதைத்து விட்டு அந்த இடத்தில் மாட்டுத் தொழுவம் அமைத்து மாடுகளை கட்டி விட்டார். போலீஸ் கண்டுபிடித்து விட்டால் தூக்குத் தண்டனை நிச்சயம் என்பதை உணர்ந்து தோகைமலை பெருமாளை மனதில் நிறுத்தி நீ என் தலையைக் காப்பாற்றினால் உனக்கு வெள்ளித்தலை (கவசம்)என பயம் கலந்த உணர்வுடன் மனதார வேண்டிக் கொண்டார். தினமும் பெருமாளை மனதில் நிறுத்தி பூஜித்தும் வந்தார். பெருமாளின் அருளால் விடுதலை கிடைத்தது. தான் வேண்டிக் கொண்டபடி தோகைமலை ரங்கநாதப் பெருமாளுக்கு வெள்ளியிலான தலை கவசம் செய்து, சாற்றி தன் வேண்டுதலை நிறைவேற்றினார்.
தல வரலாறு:
கோவை மாவட்டத்தின் மேற்கு எல்லையால் அமைந்திருப்பது பரந்து விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை. அதன் அருகே அதிக அளவில் சிறிய குன்றுகள் உள்ளன. காரமடைக்கு அருகில் இறைவன் குடி கொண்டு அருள்பாலிக்கும் குந்தமலை, மாதேஸ்வரன் மலை, தண்டிகை மலை, சொர்ண மலை என பல சிறிய மலைகள் உள்ளன. இவற்றில் தோகை மலையும் ஒன்று, காரமடையில் இருந்து தோலம்பாளையம் செல்லும் பாதையில் சீலியூர் கிராமத்தில் இம்மலை அமைந்துள்ளது. இம்மலையில் ஏராளமான உயிர் காக்கும் மூலிகைச் செடிகளும் மரங்களும் உள்ளன. இம்மலை உச்சியில் துளசியம்மன் பெட்டத்தம்மன் சமேத ரங்கநாதப் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். 300 ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த ஸ்தலம். இம்மலையைச் சுற்றி உள்ள கிராமங்களில் பிரதானத் தொழில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தான். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் நீர்வளம் மலிந்து விவசாயம் செழித்திருந்தது.
பசுக்களை வளர்த்து பால் கரந்து விற்று, அதன் மூலம் பிழைப்பு நடத்தி வந்தனர். ஒரு விவசாயின் மாடுகளை பணியாள் மூலம் மேய்ச்சலுக்காக மலைமீது ஓட்டிச் சென்று பின் மாலையில் தோட்டம் திரும்புவது வழக்கம். நன்றாக பால் கரந்து கொண்டிருந்த ஒரு இளம் பசுவின் மடியில் மட்டும் தொடர்ந்து தினமும் பால் - இல்லாததைக் கண்டு விவசாயி அதிர்ச்சியடைந்தார். பணியாளை விசாரித்ததில் சரியான பதிலைத் தெரிவிக்கவில்லை. காரணத்தை கண்டறிய ஒருநாள் மாடுகளைப் பின் தொடர்ந்து சென்றார். மலை உச்சியில் பரந்த சமவெளியில் அடர்ந்த பசுமையான புற்களும் மரம் செடி கொடிகள் செழிப்பாக வளர்ந்த பகுதியாக விளங்கியது. ஒரு மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டு அப்பசுவைக் கண்காணித்து வந்தார். சிறிது நேரம் புல் மேய்ந்து கொண்டிருந்த பசு ஓரிடத்தில் வந்து நின்றது.
சிறிது நேரத்தில் மடியிலிருந்து தானாகவே பால் சொரிந்தது. பால் முழுவதும் சொரிந்த நிலையில் அவ்விடத்தை விட்டு அகன்று மறுபடியும் புல் மேயத் தொடங்கியது. இதைக் கண்ணுற்ற பசுவின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். ஊருக்கு சென்று நடந்தவற்றை ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தார். வயதானவர்கள் மலைஏறுவது சிரமம். எனவே சில பெரியவர்களுடன் இளைஞர்கள் பெரும் அளவில் மலை உச்சியை அடைந்தனர். பால் சொரிந்த இடத்தை புதர்களை நீக்கிப் பார்த்த போது அந்த இடத்தில் பெரிய வடிவில் ஒன்றும் சிறிய வடிவில் இரண்டு சுயம்பு மூர்த்தங்களைக் கண்டனர். வயது முதிர்ந்த பெரியவர், இது காரமடை ரங்கநாதரின் மறு வடிவம் தான். தோகை மலையில் எழுந்தருளி உள்ளார். தேவியர் துளசியம்மனும் பெட்டத்தம்மனும் உடன் வீற்றிருக்கின்றனர். தாம் அங்கு குடிகொண்டிருப்பதை நமக்கு உணர்த்தத்தான் தெய்வீக பசுவின் மூலம் இத்திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார் என்றார்.
இளைஞர்கள் உடனே அவ்விடத்தைச் சுத்தம் செய்து ஒரு சிறிய அளவிலான பந்தல் நிர்மாணித்து தினசரி பூஜைகளைச் செய்து வந்தனர். பெருமாளுக்கு ஒரு கோயிலை அமைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். சுமார் 1700 அடி உயரமுள்ள மலைமீது அனைத்துப் பொருட்களையும் சுமந்து தான் கொண்டு செல்லவேண்டும். அதற்கென ஆட்களை நியமித்து பொருட்களை மேலே கொண்டுசென்று சேர்த்தனர். தண்ணீருக் கென கோயிலின் மேற்குப் பகுதியில் குளம் ஒன்றை வெட்டினர். அவ்வளவு உயரத்திலும் குளத்தில் தண்ணீர் ஊறியது ஆச்சரியம் மட்டும் அல்ல பகவானின் கருணையும் தான். கருவறை சுற்று சுவர்களை கட்டி அதன் மீது மரச் சட்டங்களை இணைத்து அதன் மீது ஓடுகளை நிறுத்தினர். ஓடுகளின் மேல் விமானத்தை கட்டி முடித்தனர். அர்த்த மண்டபம் மற்றும் முன் மண்டபம் அதே முறையில் கட்டி முடித்து கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தனர். கருவறையில் சுயம்பு மூர்த்தங்களான துளசியம்மன் பெட்டத்தம்மன் சமேத ரங்கநாதப் பெருமாள் சேவை சாதிக்கின்றார். பெருமாள் தோகைமலை ரங்கநாதப் பெருமாள் என்ற திருநாமத்தில் அழைக்கப் பெறுகிறார்.
தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம்
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ளவர் சுயம்புமூர்த்தம் மட்டுமின்றி, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய பெருமைகளுக்குரியது.
இருப்பிடம் : காரமடையிலிருந்து தோலம் பாளையம் செல்லும் வழியில் சீலியூர் கிராமத்தில் பிரதான சாலையருகே அமைந்துள்ளது இம்மலை. காரமடையிலிருந்து 12 கி.மீ. தடம் எண் 4ஏ மூலம் கோயில் அடிவாரத்தை அடையலாம்.