ஒவ்வொரு மாத அமாவாசை, பவுர்ணமிகளில் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை மாட்டுப்பொங்கல் அன்று கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவதை பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.
தல சிறப்பு:
இக்கோயில் சஞ்சீவி மலைப்பகுதி எனும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கையாக இங்கு உருவாகும் ஊற்று இத்தலத்தில் உள்ள அம்மனின் பின்புறத்தலிருந்து வருவதால் இவ் அம்மன் பொன்னூற்று அம்மன் என அழைக்கப்பட்டு, அது மருவி பொன்னூத்து அம்மன் ஆனது. இங்கு உள்ள பூவரசு மரத்தில் குழந்தை வேண்டி தொட்டில் கட்டுவோருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதால் இக்கோவிலை சுற்றியுள்ள அனைத்து மலைவாழ் கிராமத்தினர் மற்றும் நகர்புற வாசிகள் இங்கு வருகின்றனர்.
வரப்பாளையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சஞ்சீவி மலைபகுதியில் அமைந்துள்ளது. பஸ் வசதி இல்லை. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அடிவார பகுதி வரை செல்லலாம். மலை ஏறி நடக்க வேண்டி உள்ளதால் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் செல்லலாம். அம்மன் கிழக்கு திசை நோக்கியும், மற்ற முருகன், விநாயகர், சிவன் ஆகியவை ( மலையில் இடத்திற்கு ஏற்ப) வடக்கு திசையில் கட்டப்பட்டுள்ளது. இது தவிர ஆஞ்சநேயர் மேற்கு திசையில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நவக்கிரக தனி சன்னதியும் உள்ளது. மேலும் இங்கு இயற்கையாக பாறை குகையால் உருவாகிய தியான பீடம் ஒன்று உள்ளது.
பிரார்த்தனை
இங்கு நம்மை சார்ந்து வாழும் வீட்டு விலங்குகள் உடல் நலம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் மக்கள் இந்த அம்மனை வழிபட வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்கு காட்டில் விளையும் ‘உணாம் பூ’ எனும் பூவை பறித்து அம்மனுக்கு மாலையாக தொடுத்து வழிபடுவதும். குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்தும் இவர்கள் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக துடியலுார் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், மலைக்குகையில், 200 ஆண்டுகளாக வற்றாமல் இருக்கும் பொன்னூத்தம்மன் கோவில் சுனை பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது.
தல வரலாறு:
சஞ்சீவி மலை அடிவாரத்தில் வசித்து வந்த வேலப்ப நாயுடு என்பவரின் வீட்டின் கதவை நள்ளிரவு தட்டிய சிறுமி, தன் பெயர் பொன்னம்மா என்றும், இங்கு இரவில் தங்கி கொள்ள அனுமதி வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரும் உள்ளே அழைத்து சாப்பிட உணவு கொடுத்துள்ளார். பின் இருவரும் தூங்கபின், விடிவதற்கு முன் எழுந்த சிறுமி தான் செல்வதாக கூறிவிட்டு வெளியேறி உள்ளார். வேலப்ப நாயுடு இப்போது செல்லாதேம்மா வன விலங்கு உள்ளது. நன்கு விடியட்டும் நான் அழைத்து செல்கிறேன் என்று கூறியும் கேட்காமல், அந்த சிறுமி மலைப்பகுதியை நோக்கி நடந்தாள். உடன் பின் தொடர்ந்த வேலப்ப நாயுடு குடும்பத்தினர் அச்சிறுதி தற்போது அம்மன் வீற்றிருக்கும் குகைக்குள் சென்று மறைந்ததை பார்த்துள்ளனர். வந்தது இறைவன் என்று புரிந்த கொண்ட அவர்கள் குகைக்குள் சென்று பார்த்த போது அங்கு சுயம்பு வடிவ அம்மன் சுணை ஒன்றின் அருகில் வீற்றிருக்க காட்சியளித்தார். தொடர்ந்து அந்த சுணையில் ஊறிய ஊற்றில் அம்மன் வீற்றிருந்ததால், பொன்னூற்று அம்மன் என அழைக்கப்பட்டு நாளடைவில் பொன்னூத்தம்மன் என இன்று அழைக்கப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு உள்ள பூவரசு மரத்தில் குழந்தை வேண்டி தொட்டில் கட்டுவோருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதால் இக்கோவிலை சுற்றியுள்ள அனைத்து மலைவாழ் கிராமத்தினர் மற்றும் நகர்புற வாசிகள் இங்கு வருகின்றனர்.
இருப்பிடம் : கோவை காந்திபுரத்திலிருந்தும், மேட்டுப்பாளையத்திலிருந்தும் சின்ன தடாகம் செல்லும் அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உள்ளது. துடியலுாரிலிருந்து மினி பஸ்கள் அடிக்கடி உண்டு. வரப்பாளையத்தில் இறங்கி அங்கியிருந்து 3 கிலோ மீட்டருக்கு தரை வழியில் நடந்து, அரை கிலோ மீட்டருக்கு மலையில் நடக்க வேண்டும்.