வளர்பிறை சஷ்டி, கிருத்திகை மற்றும் அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. சித்திரை முதல் நாள் (தமிழ் வருடப்பிறப்பு) தைப்பொங்கல், கார்த்திகை ஜோதி, வைகாசி விசாகம், சூரசம்ஹாரம், ஆகிய முருகனுக்கு உகந்த விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்தாலும் தைப்பூசமே இத்தலத்தின் தலையாய பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் முதல் நிகழ்வாக கிராம தேவதைகளை குளிர்விக்க கிராமசாந்தியில் தொடங்கி கொடியேற்றம், சுவாமி திருவீதிஉலா, வள்ளி தெய்வயானை சமேத ராய் மயில் வாகனத்தில் அடிவாரம் சென்று சுவாமியை அழைத்து வரல், ஐந்தாம் நாளன்று காலை திருக்கல்யாண உற்சவம் முடிந்து யானை வாகனத்தில் ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா, ஓதிமலைமீது காவடி நேர்த்திக்கடன் செலுத்துதல், அபிஷேக ஆராதனை, அடுத்தநாள் பரிவேட்டை தெப்போற்சவம் மஞ்சள் நீர் உற்சவம் என பத்து நாட்கள் நடைபெறும் பெருவிழாவாகும். காவடி செலுத்தும் நிகழ்வு மட்டும் மலைமீது நடைபெறும். திருகல்யாணம், தேரோட்டம் பரிவேட்டை, தெப்போற்சவம் போன்ற நிகழ்வுகள் இரும்பறை கைலாச நாதர் கோயிலில் நடைபெறும். சுற்று வட்டார கிராமங்களிலிருந்து காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் காட்சி கண்களை விட்டு அகலாத நிகழ்வாகும்.
வார நாட்களில் திங்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்
தல சிறப்பு:
இத்தல முருகன் 5 முகம் 8 கரத்துடன் அருள்வது சிறப்பு. சேரமான் பெருமான், மனு நீதிச் சோழன், வஜ்ரங்க பாண்டியன் ஆகிய மூவேந்தர்கள் அஷ்டமா நதியாகிய எட்டு நதிகளிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றதாக ஓலைச்சுவடிகளில் தகவல்கள் காணப்படுகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 6:00 முதல் மாலை 6.00 வரை. திங்கள் முதல் வெள்ளி - நண்பகல் 12:00 முதல் 5:00 வரை
கருவறையில் ஐந்து முகங்கள் எட்டு கரங்களுடன் நின்ற கோலத்தில் குமார சுப்ரமணியர் என்ற திருநாமத்தில் எழுந்தருளி உள்ளார். பொதுவாக மூலவர் பீடத்தின் மீது இருப்பது தான் வழக்கம் மாறாக இங்கு கருவறையில் உள்ள பாறை மீது எழுந்தருளி உள்ளார். இந்த அமைப்புக்கு திருகு பீடம் எனப் பெயர். இம் முருகன் ஈசனின் சிவசொரூபம் எனவே இவருக்கு அதிகாரத் தன்மை மேலோங்கி உள்ளது. அதுமட்டுமல்லாது ருத்ராட்ச பந்தல் கீழ் அருள்பாலிப்பது ஆற்றல் பொருந்திய அம்சமாகும்.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை
நேர்த்திக்கடன்:
திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை ஆகியவற்றுக்கு கிருத்திகை நாளில் முருகனுக்கு செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கின்றதாம்.
தலபெருமை:
தமிழகத்தில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ள எண்ணற்ற குன்றுகளில் ஓதிமலை எனப்படும் இம்மலை சற்றே வித்தியாசமனதாகும். இம்மலைக்கு மிக அருகில் குன்றுகளோ மேட்டுப்பாங்கான இடங்களோ இல்லாமல் இருக்கும் நிலையில் இம்மலை தனி மலையாகத் திகழ்கின்றது. முருகப் பெருமான் குடிகொண்டுள்ள மலைகளில் மிக உயரமானதும் செங்குத்தானதும் ஆகும். இதன் உயரம் சுமார் 1000 மீட்டர்கள்.
மலை அடிவாரத்தில், மலைப் பாதை ஆரம்பத்தில் வீற்றிருக்கும் பாத விநாயகரைத் தரிசனம் செய்த பின் மலை ஏறவேண்டும். எந்தக் காரியத்தையும் தொடங்கும் முன் விநாயகப் பெருமானை வழிபட்டால் எந்த வித தடங்கலும் இன்றி எடுத்த காரியம் நிறைவேறும் என்ற காரணத்திற்காகத்தான் படிப்பாதை ஆரம்பத்தில் விநாயகர் சன்னதி நிறுவப்பட்டுள்ளது. மலை உச்சியை சென்றடைய 1870 படிகள் ஏற வேண்டும். மலை செங்குத்தாக அமைந்துள்ளதால் படிகளும் அவ்வாறே உள்ளன.
சுமார் 850 படிகளைக் கடந்த பின்பு வெள்ளை விநாயகர் சன்னதி உள்ளது. கோயில் முகப்பு நுழை வாயில் மண்டபத்தின் தென்பகுதியில் விநாயகப் பெருமான், உள்ளே தென்பகுதியில் மேற்கு நோக்கிய வண்ணம் பரமேஸ்வரி எதிரே சற்று உயரமான பகுதியில் இடும்பன் ஆகியோரது சன்னதிகள் உள்ளன. பிரதான மலைக் கோவில் கிழக்கு முகமாக உள்ளது. சுமார் 75 ஆண்டுகட்கு முன் செங்கற்களால் கட்டப்பெற்ற கோவிலாக இருந்தது. 1932ம் ஆண்டில் கருங்கல்லினால் ஆன கற்கோவில் கட்டப்பெற்று விமானமும் எழுப்பட்டது. மலை உச்சியில் உள்ள சிறிய சமதளப் பரப்பில் கோயில் அமைந்துள்ளது.
செம்பு தகடால் கலையம் சத்துடன் வேயப்பட்ட நெடிதுயர்ந்த கொடிக் கம்பத்தை அடுத்து மயில் மண்டபம் உள்ளது. அதை அடுத்து மகா மண்டபம் அமைந்துள்ளது. மகா மண்டப விதானத்தில் தாமரை மலர்ந்த நிலையில் சுற்றிலும் 12 ராசிகளை புடைப்புச் சுதை சிற்பங்களாக வடித்துள்ளனர். நுழைவு வாயில் வழியே உள்ளே சென்றால் மிக விலாசமான அர்த்த மண்டபத்தை அடையலாம்.
இம்மலையை ஓதியங்கிரி, ஞானமலை எனவும் அழைக்கின்றனர். இத்தலத்தில் திரிசதி அர்ச்சனை மிகவும் பிரசித்தம். இம்மலை கிராமங்கள் சூழ்ந்த பகுதி. விவசாயமே பிரதான தொழிலாக விளங்குகின்றது. விவசாய சம்பந்தப்பட்ட காரியங்களான கிணறு வெட்டுதல், ஆழ்துளை கிணறு. திருமணம் வியாபாரம் தொழில் சுபகாரியங்கள் போன்றவற்றிக்காக சுவாமியிடம் உத்தரவு கிடைத்த பின்பே செய்வதை பழக்கமாக கொண்டுள்ளனர். அதற்காக அரளி மலர்களை சுவாமியின் சிரசில் வைத்து வழிபட்டு உத்தரவு கேட்பார்கள். பூ சிரசிலிருந்து விழுந்தால் உத்தரவு கிடைத்து விட்டதாகப் பொருள் இதனை பூகேட்டல் அல்லது பூ வரம் எனத் தெரிவிக்கின்றனர்.
தல வரலாறு:
கைலாயத்தில் முருகனை உதாசீனப்படுத்திய, நான்முகன் மீது கோபப்பட்ட முருகன், பிரம்மனை பிரணவப் பொருள் கேட்டு சரியான பதில் கூறாததால், தண்டித்து இரும்பு அறையில் அடைத்து வைத்த கதையை அறிவோம். அவ்வாறு சிறை வைக்கப்பட்ட இடம் தான் இரும்பறை என வழங்கப்படுகிறது. முருகனை சமாதானப் படுத்த ஈசன் இங்கு வந்து அமர்ந்ததால் கைலாச நாதர் எனப்படுகிறார். அவருக்கென ஒரு தனிக் கோயில் உண்டு. அதன் அருகில் உள்ள மலை தான ஓதிமலை.
பதினெட்டு சித்தர்களில் முதன்மையாக விளங்கியவர் “போகர்” பழநியில் உள்ள நவபாஷான தண்டாயுதபாணி சிலையைச் செய்தவர். இம்மலையின் வடகிழக்குப் பகுதியில் போகர் தவம் இயற்றிய யாகம் நடத்திய அமைப்பு காணப்படுகிறது. அந்த இடத்தில் உள்ள திருமண் வெண்மை நிறத்துடன் விபூதியின் தன்மை கொண்டதாக இருந்தது. ஆதியில் இத்திருமண் பிரசாதமாக வழங்கப்பட்டதாம்.
போகர் பழநி திருத்தலத்திற்குச் செல்ல வழிதெரியாததால் இம்முருகனை வேண்ட, ஒருமுகம், நான்கு கரங்களுடன் சென்று வழிகாட்டி விட்டு இம் மலையிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள இடத்திலேயே தங்கிவிட்டாற் குமரக் கடவுள் அங்கேயே தங்கி அருள் பாலிப்பதால் அவ்வூர் குமாரபாளையம் எனப் பெயர் பெற்றது.
ஆறுமுகத்தில் ஒரு முகம் 4 கரங்கள் போக மீதமுள்ள ஐந்து முகங்கள் 8 கரங்களுடன் ஓதி மலை மீது அருள் பாலிக்கின்றார். இவ்வமைப்பு எந்த விதமான ஆகமவிதிகட்கும், சிற்ப சாஸ்திரத்தில் காணப்படாத அற்புதத் திருமேனியாகும். இது போன்றதொரு ஒரு வித்தியாசமான திருமேனியை எங்கும் காணப்பதரிது.
தகவல்; வி.பி. ஆலாலசுந்தரம்
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல முருகன் 5 முகம் 8 கரத்துடன் அருள்வது சிறப்பு.
இருப்பிடம் : ஓதிமலை அன்னூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் புஞ்சை புளியம்பட்டியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ஆட்டோ மற்றும் டேக்ஸி வசதிகள் உண்டு.