Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாகாளி அம்மன்
  தல விருட்சம்: வன்னி மரம்
  ஊர்: கஸ்துாரி நாயக்கன் பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வருட திருவிழாக்களில் 15 நாட்கள் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா முக்கிய விழாவாகும். சித்ரா பவுர்ணமியன்று நிறைவு பெறும் வகையில் செவ்வாய் அன்று பூச்சாட்டுடன் திருவிழா ஆரம்பம் ஆகும். அடுத்த செவ்வாய் அன்று கம்பம் நடப்பட்டு அதில் பூச்சட்டி வைத்து தினமும் பூஜை நடப்பதுடன் மாலை நேரங்களில் பக்தர்கள் அக்கம்பத்தைச் சுற்றி மேள தாளத்துடன் இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவது அனைவரையும் கவரும் அடுத்த செவ்வாய் அம்மன் அழைப்பு கரகம், முளைப்பாரி மற்றும் மாவிளக்கு சமர்ப்பித்தல், பொங்கல் என களை கட்டும். பவுர்ணமி அன்று அம்மன் திருக்கல்யாணத்துடன் விழா நிறைவுபெறும். ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் புரிவார். ஊரில் உள்ள பெண்கள் தைப்பூச கொடியேற்றத்தன்று அம்மனுக்கு பழம் சர்க்கரை படைத்து பூசை செய்து வழிபாடு செய்தபின் அவற்றை எடுத்துச் சென்று அருகில் அமைந்துள்ள விநாயகர் கோயில் முன் வைத்து பாடலுடன் கும்மியடித்து மகிழ்வர். பின் சர்க்கரை பழம் ஆகியவற்றை அங்கு அமர்ந்து அனைவரும் பகிர்ந்து உண்ணுவர். தைப்பூசத்திற்கு முதல் நாள் வரை தினமும் வகைவகையான உணவுகளை படைத்து கும்மியில் பங்கு பெறுவர். தைப்பூசத் தன்று, 9 நாட்களும் வகை வகையான உணவை சாப்பிட்டதால் ஏற்பட்ட வயிற்று கோளாறு நீங்கும் வண்ணம் ரசம் தயிர் சாதம் படைத்து வழிபடுவர். இந்த நிகழ்வு மகளிர் எந்தவித வேறுபாடும் இன்றி, மன இறுக்கம் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்வதற்காக நமது முன்னோர்கள் ஏற்படுத்திய விழாவே இது. குழந்தைகள் தவறாமால் பள்ளிக்குச் செல்லும் போதும் தேர்வுக்குச் செல்லும் போதும் வழிபட்டுச் சென்று தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனராம். குழந்தைகளைப் பொருத்தமட்டில் இந்த மாகாளியம்மனை தான் கல்விக் கடவுளாக போற்றுகின்றனர். நவராத்திரி வைபவம் என்றால் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு எல்லையும் உண்டோ? கொலு வைத்து, விதவிதமான பொம்மைகள் தசாவதாரம், இராமாயணம் மகாபாரதத்தை விளக்கும் பொம்மைகள் தேச தலைவர்கள் உருவ பொம்மைகள் என இடம்பெறச் செய்வர். தினமும் அம்மனை வழிபட்ட பின்பு காயத்திரி மந்திரம், அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், மகிஷாசுர மர்த்தினிதுதி என தினமும் பாராயணம் செய்வர். அம்மன் தினமும் ஒரு அலங்காரம் என 9 நாட்களும் விதவிதமான அலங்காரங்களில் பரிமளிப்பார். பத்தாம்நாள் விஜயதசமியன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வர். இத்தலத்தில் எத்தனை திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் நவராத்திரி வைபவம் முதன்மை விழாவாகும்.  
     
 தல சிறப்பு:
     
  உருவத்தில் உக்கிர தோற்றத்தை கொண்டிருத்தாலும் அம்மனின் சாந்த குணம், கருணை உள்ளம், அருளாற்றல் ஆகியவற்றால் குழந்தைகள் அம்மனை மானசீக தெய்வமாக போற்றி பூஜித்து வருகின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை. செவ்வாய்: மதியம் 3.00 மணி முதல் 8.30 மணி வரை. வெள்ளி: காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை. 
   
முகவரி:
   
  அருள்மிகு மாகாளி அம்மன் கஸ்துாரி நாயக்கன் பாளையம் 641041. கோயம்புத்துார்.  
   
போன்:
   
  +91 9629709651, 9843342420 
    
 பொது தகவல்:
     
  அரசு, வன்னி போன்ற அடர்ந்த மரங்களுக்கு மத்தியில் கோயில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 8 தூண்களுடன் கூடிய மகா மண்டபம் உள்ளது. சுற்று சுவரில்லாமல் அமைந்திருப்பதால் வெளிச்சுத்திற்கும் காற்றோட்டத்திற்கும் குறைவு இல்லை. மகா மண்டபத்தில் அழகுடன் அமைக்கப்ட்டுள்ள சூலம் நம்மை வரவேற்பதைப் போல் அமைந்துள்ளது. அடுத்துள்ளது பலிபீடம் மற்றும் சிம்ம வாகனம் இப்பலி பீடத்தின் பக்க வாட்டில் அம்மனை நோக்கி, கைகூப்பி துதிப்பது போன்ற அமைப்பில் உள்ள பெண்ணின் உருவம் மற்றும் மேல் பகுதியில் அம்மனின் திருபாதமும் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்தின் மேற்குப் பகுதியில் இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் முருகனும் எழுந்தருளியுள்ளனர்.

அர்த்த மண்டப நுழை வாயிலின் இருபுறமும் நீலி சூலி ஆகிய துவார பாலகிகள் காவல் புரிகின்றனர். அர்த்த மண்டபத்தின் வடபுறம் உற்சவர் மற்றும் நடராஜர் பஞ்ச லோக திருமேனிகள் உள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  தவிட்டுக்கு குழந்தை வாங்குதல் என்ற பழமொழி உண்டு. தீராத பிணியுடன் துன்பத்தை அனுபவிக்கும் குழந்தைகளின் பெற்றோர், அக்குழந்தையை அம்மனுக்கு தத்து கொடுத்து விடுவர். பின்னர் அம்மனுக்கு தவிடு கொடுத்து அதற்கு ஈடாக குழந்தையைத் திரும்ப பெற்றுக் கொள்வர். குழந்தையின் வியாதியனை அம்மன் எடுத்துக் கொண்டு நலத்துடன் கூடிய குழந்தையை அளிப்பதாக ஐதீகம். அப்படி பெற்ற குழந்தைகள் நோய்நொடியின்றி நலமுடன் வாழ்கின்றனராம். 
    
நேர்த்திக்கடன்:
    
  தீபம் ஏற்றி வேண்டுதல் செய்யும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி மன நிம்மதியுடன் வாழ்கின்றனராம். வேண்டுபவர்களின் குறைகளைப் போக்கி நலம் தரும் கருணைத் தாயாக விளங்குகின்றார்.  
    
 தலபெருமை:
     
  கருவறையில் எழுந்தருளியுள்ள மூலவர் திருமேனி 300 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தாகும். அம்மனின் அழகையும், துல்லியமான வேலைப்பாடு மற்றும் நேர்த்தியானை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஒரே கல்லில் திருவாச்சியுடன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. பின் இரு கரங்களில் உடுக்கை, ஜெபமாலை முன்னிரு கரங்களில் சூலம், குங்கும கிண்ணம் ஆகியவற்றை ஏந்தி நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சிலையில் ஆபரணங்கள், புடவை மடிப்பு, கால், கொலுசு, வளையல்கள் என தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது சிற்பியின் திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது. சிரசில் முத்து மாலையுடன் கூடிய கிரீடத்தை வடித்துள்ளனர். உதட்டின் இருபக்கமும் கோரைப்பற்கள் இரண்டும் வெளியில் நீண்டு தெரியும்படி அமைந்த அமைப்பு அம்மனின் உக்கிர தோற்றத்தை நம் கண்முன் நிறுத்தினாலும், சாந்த சொரூபிணியாகவும் கருணைக்கடலாகவும் அருள்பாலித்து வருகின்றார். என்பது தான் நிதர்சனம். மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்களை அபிஷேகத்தின் போது மட்டும் தான் காண இயலும். புடவை அணிவித்து மலர் மாலைகளுடன் அணிகலன்களைச் சாற்றி ஜடை முன்பக்கமாகத் தெரியும் வண்ணம் அமைந்த அலங்கார தோற்றம் நம் கண்களை விட்டு அகலா.

மூலவர் சன்னதியை அடுத்து தெற்கு புறமாக நவராத்திரி உற்சவத்தின் போது கொலு அமைப்பதற்கென்றே பிரத்தியேகமாக கொலு மண்டபத்தைக் கட்டி உள்ளனர். இம்மண்டபத்தின் மேற்கு பகுதியில் சப்த மாதாக்கள், கருப்பராயன் சன்னதி உள்ளது. இத்தலத்தில் ஸ்தல விருட்சமாக வன்னி மரம் விளங்குகின்றது. செவ்வாய் வெள்ளி அமாவாசை பவுர்ணமி, கிருத்திகை சங்கடஹர சதுர்த்தி ஆகிய தினங்களில் விசேச பூஜையுடன் அலங்கார ஆராதனைகள் உண்டு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நடைபெறும் பூஜை பிரசித்தி பெற்றது இப்பூஜையில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்வர்.
 
     
  தல வரலாறு:
     
  கஸ்தூரி நாயக்கன் பாளையம் உழவுத் தொழிலை பிரதானமாகக் கொண்டு வாழ்ந்த மக்கள் வாழ்ந்த பகுதி. இவ்வூரின் தெற்கு எல்லையில் காவல் தெய்வமாக வீற்றிருந்து மக்களைக் காத்து வருபவள். பேரூர் பட்டீஸ்வரர் கோயிலை நிர்மாணித்த திருமலை நாயக்கர் வம்சத்தை சார்ந்த மக்கள் அதிக அளவில் இப்பகுதியில் ஊரை உருவாக்கி வசித்து வந்தனர். வட வள்ளியில் உள்ள மிகத் தொன்மையான கோயிலுமான மதிப்பநல்லூர் அம்மன் கோயில் திருமலைநாயக்கர் நிர்மாணித்தது தான். இக்கோயிலில் திருமலை நாயக்கர் சிலை இருப்பதைக் காணலாம். அதே கால கட்டத்தில் உருவானது தான் மாகாளியம்மன் கோயில்.

திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில்  ஊர்கள் உருவான காரணத்தால் அருகில் உள்ள ஊரின் பெயர்கள் காளப்ப நாயக்கன்பாளையம், குப்ப நாயக்கன் பாளையம், அப்பநாயக்கன்பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம் என்றிருப்பதைக் காணலாம். பொதுவாக காளி, கோயில்கள் வடதிசை நோக்கி அமைந்திருக்கும். ஆனால் இக்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது சற்று வித்தியாசமான அமைப்பாகும்.

ஆதியில் ஒரு சிறிய ஓலை குடிசையில் கோயில் அமைந்திருந்தது. பின் ஓடுவேய்ந்த கட்டிடமாக  மாற்றியமைத்தனர். காலம் மாற மாற ஒரு சிறிய அளவிலான கல் கட்டிடம் கட்டி அதில் இத் தொன்மையான சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரலாயினர்.

தற்போது இப்பகுதியில் உழவுத் தொழிலோடு பிற தொழில் நிறுவனங்களும் கல்விச் சாலைகளும் பெருகி உள்ளன. ஆதியில் ஊரின் தெற்கு எல்லையில் தனித்திருந்த கோயிலைச் சுற்றிலும் குடியிருப்புகளும் வர்த்தக நிறுவனங்களும் சூழ்ந்து விட்டன. கோயில் மிகத் தொன்மையானதால் கட்டிடங்கள் சிதைந்து மிக மோசமான நிலைக்குச் சென்றது. 1930 மற்றும் 1991 ஆண்டுகளில் இருமுறை கோயில் திருவிழா நடந்து அதில் திருகல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நடந்துள்ளன. 1989ல் இறுதியாக கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

ஊர் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து நல்ல நிலைமையில் உள்ள இக்கால கட்டத்தில் கோயில் நிலை கண்டு ஊர் மக்கள் கவலை கொண்டனர். ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி பேசி அன்னைக்கு புதியதாக கோயில் கட்ட முடிவெடுத்தனர். புதிய கோயிலுக்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. பரிவார தெய்வங்களுக்கான புதிய சிலைகள் செய்வதற்கும் ஏற்பாடு செய்தனர். ஒரு நல்ல நாளில் பூமி பூஜை போடப்பட்டு கட்டுமானப் பணியைத் தொடங்கினர். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் திட்ட மதிப்பு பல லட்சங்கள் என்ற நிலையில் குழுவினர் கையில் பெரிய தொகை ஏதும் இல்லை. பூமி பூஜை போடப்பட்ட நாளிலிருந்து ஒருநாள் கூட பணி தொய்வடையாமல் திட்டமிட்டபடி அற்புதமாக கோயில் அமைந்து விட்டது. அன்னை தனக்கு தேவையானவற்றை தானே பக்தர்களிடம் பெற்று கோயில் கட்டுமானத்தை விரைவில் முடிக்க உறுதுணையாக இருந்தாராம். கோயில் பணிகள் முற்றிலும் நிறை வடைந்த நிலையில் 7.8.2016 அன்று திருநெறிய தீந்தமிழ் முறையில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சமய சான்றோர்கள் முன்னிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்களிப்புடன் வெகு விமர்சையாக நடந்தேறியது. இத்தலத்தின் சிறப்பே, மூலவர் திருமேனி 300 ஆண்டுகள் தொன்மையானது என்பது தான்.

தகவல்; வி.பி. ஆலாலசுந்தரம்
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: உருவத்தில் உக்கிர தோற்றத்தை கொண்டிருத்தாலும் அம்மனின் சாந்த குணம், கருணை உள்ளம், அருளாற்றல் ஆகியவற்றால் குழந்தைகள் அம்மனை மானசீக தெய்வமாக போற்றி பூஜித்து வருகின்றனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar