மூலவருக்கு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தியும் முக்கிய திருவிழாக்கள் ஆகும். பரிவார தெய்வங்களுக்கு உரிய விசேச தினங்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இத்தல மூலவருக்கு விநாயகர் சதுர்த்திதான் வருட முக்கிய உற்சவம் ஆகும். முதல்நாள் மாலை 6.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சதுர்த்தியன்று அதிகாலை அபிஷேகமும் அலங்கார ஆராதனைகளும் வெகு விமர்சையாக நடைபெறும்.
திறக்கும் நேரம்:
காலை 7.30 முதல் 10.00 வரை, மாலை 6.00 முதல் 8.00 வரை
ஆதியில் அமைந்த பிள்ளையார் கோயில் 150 ஆண்டுகட்கு முற்பட்டது எனச் சொல்லப்படுகின்றது. அரச மரத்தின் தோற்றமும் அதை உறுதி செய்கின்றது. உயர்ந்த பீடத்தில் கம்பீரமாக சித்தி விநாயகப் பெருமான் வீற்றிருக்கின்றார். கோஷ்டத்தின் தென்பகுதியில் தட்சிணாமூர்த்தியும் கன்னிமூலையில் ராகு கேதுவுடன் மாப்பிள்ளை விநாயகரும் வாயுமூலையில் முருகனும் அருள் புரிகின்றனர்.
கோயிலின் முன்பு சற்று தாழ்ந்த உயரத்தில் தென் கிழக்கில் வடக்கு நோக்கியபடி அஷ்ட புஜ துர்க்கை நின்ற கோலத்திலும் எதிரே நவகிரஹ சன்னதியும் உள்ளன. துர்க்கையம்மன் சன்னதியின் அருகில் ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி இரு கரங்களை குவித்த வண்ணம் நின்ற கோலத்தில் அருள் புரிகின்றார்.
பிரார்த்தனை
பக்தர்களின் வேண்டுதல்களான திருமண தடை, குழந்தையின்மை மற்றும் வேலைவாய்ப்புகள் போன்ற வேண்டுதல்களை பரிவோடு சித்தி விநாயகர் அருள் புரிந்து நிறைவேற்றி வைக்கின்றார்.
நேர்த்திக்கடன்:
விநாயகருக்கு அபிேஷகம் செய்கின்றனர்.
தலபெருமை:
தினசரி சிவாகம முறைப்படி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மகாபாரத பெருங்காதையில் அர்ச்சுனனால் கவரப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட வேட்டுவ பெண்ணான நாக கன்னியின் மகனே அரவான். குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க வேண்டும் எனில் “எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணங்களும் ஒருங்கே அமைந்த ஒரு மனிதனை தங்கள் தரப்பில் முதல் பலியாகக் கொடுக்க வேண்டும்.” என ஜோதிடர்கள் கணித்துக் கூறினர். பாண்டவர் தரப்பில் இவ்வாறு சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர் அர்ச்சுணன் மகன் அரவான் ஆகும்.
மகாபாரதத்தின் முக்கிய கருப் பொருளே “குருட்சேத்திர யுத்தம்” தான். போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன்னையே பலியாக்கிக் கொண்டதற்கு கிருஷ்ண பகவான் 3 வரங்களை வழங்கினார். அதில் ஒன்று தான் கூத்தாண்டவர் வழிபாடு. கூத்தாண்டவர் தான் இறப்பதற்கு முன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டியதன் பலனாக, கிருஷ்ண பரமாத்மாவே ‘மோகினி’ என்ற பெண் வடிவம் கொண்டு கூத்தாண்டவரின் வேண்டுதலை நிறைவேற்றினார். இங்கு மோகினியை ‘பொம்மி’ என அழைக்கின்றனர்.
கோவை அருகே உள்ள துடியலூரில் அரவான் பண்டிகை நீண்ட நெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது இவர் கூத்தாண்டவர் எனவும் அழைக்கப்படுகிறார். களப்பலிக்காக கோயிலிருந்து புறப்பட்டு செல்லும் வழியில் அரவான் திடல் எனுமிடத்திலுள்ள மேடை மீது சற்று இளைப்பாறுவார். பெரிய அரச மரத்தடியில் தான் அம் மேடை உள்ளது. அம்மேடை மீது சிறிய விநாயகர் சிலையும் அமைந்துள்ளது.
கூத்தாண்டவர் இளைப்பாறும் நேரத்தில் ‘பொம்மி’ கட்டுச்சோற்றுடன் வந்து அவரைச் சந்தித்து “கட்டு சோற்றை ” அவரிடம் அளிப்பார். பின் சோற்றுக் கட்டுடன் களப்பலிக்கு கூத்தாண்டவர் புறப்பட்டுச் செல்வார். இந்த நிகழ்வின் காரணமாக இம்மேடை “கட்டு சோற்று மேடை ” எனப் பெயர் பெற்றது.
இம்மேடையின் மீதுள்ள விநாயகர் கோயில் சுமார் 150 வருடங்களுக்கு முற்பட்ட தொண்மையான கோயில் இக் கோயிலில் தினசரி முறைப்படி பூஜைகள் நடைபெறுவதில்லை. மார்கழி மாதத்தில் மட்டும் பெண்கள் அதிகாலையில் வந்து நீரால் அபிஷேகம் செய்து விளக்கேற்றி பூஜித்துச் செல்வர். மற்ற நாட்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடும். இதைக் கண்ணுற்ற ஆன்மிக அன்பர்கள் கோயிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனர்.
அரசமரத்தடியில் பிள்ளையார் இருந்த இடத்தை சற்று உயரமான பீடமாக மாற்றி விமானத்துடன் கூடிய கருவறை அமைத்து, கருவரைக்கு ஏற்றால் போல் பெரிய விநாயகரை பிரதிஷ்டை செய்து 15.7.1997ல் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அன்னியர் பிரவேசிக்க முடியாதபடி இரும்பு கம்பி தடுப்பு அமைக்கப்பட்டது. ஆகமங்களில் தேர்ச்சி பெற்ற குருக்கள் ஒருவரை பூஜைகள் செய்ய நியமிக்கப்பட்டார். சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி ஆகிய தினங்களில் தொடர்ந்து கணபதி ஹோமம் மற்றும் மந்திரங்கள் ஜெபிக்க விநாயகப் பெருமானின் ஆற்றல் நாளுக்கு நாள் அதிகரித்தது. பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வந்தது. குடியிருப்பு பகுதிகளும் விரிவடைந்தது. அருகில் தட்சிணாமூர்த்தி, முருகன், துர்க்கை நவகிரகங்கள் போன்ற சன்னதிகள் இல்லை கோயிலுக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் இச்சன்னதிகளை கோயிலில் அமைத்து உதவ வேண்டும் என கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
நிர்வாகத்தினர் விநாயகப் பெருமானிடம் உத்தரவு கேட்டனர். கேட்ட வரத்தை வாரி வழங்கும் வள்ளல் அல்லவா சித்தி விநாயகர். கூடுதல் சன்னதிகள் அமைக்க உத்தரவு அளித்தார். சிலைகள் செய்யும் பணியை மயிலாடுதுறையில் உள்ள கைதேர்ந்த சிற்பியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலை செய்யும் காலத்தில் பரிவார தெய்வங்களுக்குரிய இடமும் ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து விட்டனர். சிலை தயாரானதும், சிலைகள் எடுத்துவர ஒருகுழு புறப்பட்டுச் சென்றது. சிலைகளை ஒரு வேனில் ஏற்றிப் புறப்படும் போது ஓர் அதிசயம் நடைபெற்றது. வேன் முன்புறம் பசுமாட்டுக் கன்று ஒன்று சுமார் 5 கி.மீ. தூரம் முன்னாலேயே நடந்து சென்று பின் வழிவிட்டது.
சிலைகள் வந்து சேர்ந்தவுடன் முறைப்படி ஜலவாசம், தானிய வாசம் போன்ற சடங்குகள் முடிந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு 6.9.2009ல் கும்பாபிஷேக விழா இனிதே நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில் உரெங்கும் வெய்யில் சுட்டெரிக்க கோயிலைச் சுற்றிலும் மழை பெய்ததது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஓராண்டு கழிந்த நிலையில் ஆஞ்ச நேயருக்கும் ஒரு சன்னதி உருவாக்கப்பட்டு 7.6.2010ல் கும்பாபிஷேகம் கண்டது. ஆஞ்சநேயர் சிலை எடுத்து வரும்போதும் சிலையை ஏற்றிவந்த வாகனத்தின் மேலே மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வரை கருடன் ஒன்று வட்டமிட்டு பறந்து கொண்டே வந்தது வியப்பில் ஆழ்த்தியது.
இருப்பிடம் : கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ள துடியலூர் பஸ் நிலையத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளது. மேட்டுப் பாளையம் சாலை வழியே செல்லும் அனைத்து பேருந்துகளும் துடியலூரில் நிற்கும்.