மிக முக்கிய விழாவாக சித்திரை மாத திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விசேச அலங்காரங்கள் அம்மனுக்கு செய்யப்படுகிறது. சித்திரை திருவிழாவில் அலகு குத்துதல், லட்சார்ச்சனை, சக்திகிரகம் அழைத்தல், தீச்சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல், மாரியம்மன் தாலாட்டு, முளைப்பாரி, மாவிளக்கு ஆகிய விசேசங்களும் உண்டு. மேலும் அம்மாவாசை, பெளர்ணமி, ஆடிக்கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு உள்பட விநாயகருக்கு சதுர்த்தி, முருகனுக்கு தை பூசம், துர்க்கை அம்மனுக்கு வளர்பிறை அஷ்டமி போன்ற விழாக்களும் உண்டு.
தல சிறப்பு:
மனிதன் உபயோகித்து, குப்பை என வீசி உருவான மண்மேட்டில் தோன்றிய அம்மன் என்ற சிறப்பு பெற்ற தலம் இது.
திறக்கும் நேரம்:
காலை: 7 மணி முதல் 9 மணி வரை மாலை: 5 மணி முதல் 8 மணி வரை
முகவரி:
அருள்மிகு குப்பமண் மாரியம்மன் கோயில்,
மோர் மார்க்கெட், கணபதி.கோயமுத்துார்- 641006
போன்:
+91 98439 96699
பொது தகவல்:
மூலவர் மாரியம்மனும், உற்சவரும் வடக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். விநாயகர், முருகன் ஆகியோர் மூலவர் சன்னதியிலேயே அருள்பாலிக்கின்றனர். பிரம்மாண்டமான துவார, பாலகர், பாலகியுடன் சிம்ம வாகனம், சக்தி வேல், பலி பீடம் உண்டு. வெளிப்பிரகாரத்தில் கருப்பராயன், முனிஸ்வரன், விஷ்ணு துர்கை, ஆண்டாள், ஊஞ்சல் மண்டபம், ஆதி முடியப்பன் உப தெய்வங்களும் உண்டு.
பிரார்த்தனை
திருமண தடை, தொழில் வளர்ச்சி, குழந்தை பாக்கியம், உடல் நலன் உள்ளிட்ட சகல விதமான பிராத்தனைகளும் இங்கு பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு புடவை சாத்துதல், தாலி வழங்கல், பிரசாதம் தருதல், அன்னதானம் வழங்கல் போன்றவை மூலம் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
குப்பை மேட்டில் சிறுவர்கள் மூலம் தோன்றிய அம்மன் என்ற பெருமை கொண்ட தலம் இது.
தல வரலாறு:
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கணபதியில் மோர் மார்க்கெட் எனும் பகுதியில் மோர் விற்பனை மிக ஜோராக நடக்கும். அதாவது, ஊரின் எல்லைப்பகுதியில் சுமை தாங்கி கல் மீது மிகப்பெரிய மண் பானை வைக்கப்பட்டு, அதில் சில்லென்ற மோர் வைக்கப்பட்டு இருக்கும். இது வியாபாரம் நோக்கமின்றி வைக்கப்பட்டு இருந்தாலும், வீணாக போக கூடாது என்பதற்காக ஒரு அணா, இரண்டு அணா என்று காசை கூடையில் போட்டு, மோர் வாங்கி குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த மோரை குடிப்பதற்காக அப்பகுதியில் சிறுவர்கள் கூட்டம் என்றும் அலைமோதும். ஒருநாள் அப்பகுதியில் சிறுவர்கள் குப்பை மேட்டில் விளையாடி கொண்டிருந்த போது, அவர்கள் காலில் கருப்பாக ஒரு கல் தட்டுப்பட, சிறுவர்கள் அதை விளையாட்டு மாரியம்மன் கிடைத்துள்ளார் என கூறி, அருகில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் வைத்து, மாலை அணிவித்து பூஜிக்க துவங்கினர். இதை பார்த்த அப்பகுதி பெரியவர்களும் சிறு மேடை அமைத்து, அந்த சுயம்பு அம்மனுக்கு அருகில் வேல்கள் மற்றும் மணிகள் நடப்பட்டு வணங்க துவங்கினர். நாளடைவில் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்டதால், குப்பமண் மாரியம்மன் என இப்பகுதியில் அழைக்கப்பட்ட அம்மனின் புகழ் எங்கும் பரவியது. இந்த அம்மனை வணங்கிய பக்தர்களுக்கும் குறைகள் உடனே நீங்கியதால், பக்தர்கள், பொதுமக்கள், தொழிலதிபர்கள், கொடையாளர்கள் உதவியுடன் 1999 ம் ஆண்டு கோயிலாக உருவெடுத்து கும்பாபிேஷக விழா நடந்தது. விழாவை பேரூர் சாந்தலிங்க அடிகள் சுவாமிகளும், சிரவணபுரி குமரகுருபர அடிகளும் முன்னின்று நடத்தினர். பின் மீண்டும் ஆலயம் புதுபிக்கப்பட்டு, உப தெய்வங்களும் அமைக்கப்பட்டு, 2013 ம் ஆண்டு மறு கும்பாபிேஷகம் செய்யப்பட்டு, இன்று அப்பகுதியில் சிறப்பு மிக்க கோயிலாக விளங்கிவருகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:குப்பை மேட்டில் சிறுவர்கள் மூலம் தோன்றிய அம்மன் என்ற பெருமை கொண்ட தலம் இது.