இத்தலத்தில் தினசரி பூஜையுடன் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் சிறப்பு அலங்கார ஆராதனைகள் உண்டு. வருடத் திருவிழா ஆவணியில் வரும் “விநாயகர் சதுர்த்தி” பெருவிழாவாகும். மாலையில் திரவிய பஞ்சாமிர்த அபிஷேகங்களுடன் சிறப்பான மலர் அலங்காரத்தில் ஆராதனைகள் நடைபெறும். கோயிலே அன்று திருவிழா கோலம் பூண்டிருக்கும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பொன்னேரி விநாயகர் விநாயகர் திருக்கோயில்
சின்ன தடாகம், கோயம்புத்துார்
போன்:
+91 94876 62282, 98946 63666
பொது தகவல்:
பரந்து விரிந்த பொன்னி ஏரியின் கிழக்கு கரை மீது உயர்ந்த நிலையில் கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. கருவறை மற்றும் முன் மண்டபத்துடன் உள்ளது. மண்டபத்தின் மேல் விநாயகப் பெருமானின் சுதைச் சிற்பம் அலங்கரிக்கின்றது. கருவறை மீது அமைந்த ஏக விமானத்தின் நான்கு பக்கங்களில் விநாயகர், பிரம்மா, முருகன் மற்றும் தட்சிணா மூர்த்தியின் சுதைச் சிற்ப்பங்கள் நேர்த்தியான முறையில் காட்சியளிக்கின்றன. கருவறையில் கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் பொன் ஏரிவிநாயகர் எனும் திருநாமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றார். எதிரே மிக அருகில் அவரது மூஷிக வாகனம் அமைந்துள்ளது. பொதுவாக மூலவருக்கும் வாகனத்திற்கும் இடையே கடந்து செல்லக்கூடாது என்பதற்காக இவ்வாறு அமைக்கும் முறை ஏற்பட்டது.
பிரார்த்தனை
இவ்விநாயகரிடம் உத்தரவு பெற்று செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறுவதாகச் சொல்லப்படுகின்றது. தேர்வுக்குச் செல்லும் பள்ளிக் குழந்தைகள் இவரை வேண்டிச் சென்று நல்ல மதிப்பெண் பெறுகின்றனராம்.
நேர்த்திக்கடன்:
விநாயகருக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
தல வரலாறு:
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக மைசூர் இருந்தது. திப்பு சுல்தான் ஆட்சி புரிந்து வந்தான். அவனுடைய கொடுங்கோல் ஆட்சியில் வாழமுடியாமல் ஒருபகுதி மக்கள் மைசூரில் இருந்து குடிபெயர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் ஓரத்தில் கால் நடையாகப் பயணித்து, இறுதியில் சின்னத் தடாகமாகிய இப்பகுதியை அடைந்தனர்.
இங்கு வந்து தங்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட விவசாயத் தொழிலிலும், கால் நடைகளை வைத்து பால் வியாபாரம் செய்தும் பிழைப்பு நடத்தி வந்தனர். மழை பொய்த்து விட்டதால் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது.
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், இப்பகுதியில் சென்ராயக் கவுண்டர் என்ற ஜமீன் வசித்து வந்தார். இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கிஸ்தியை வசூலிக்கும் பொறுப்பை இச் ஜமீன் தாரிடம் ஒப்படைத்தனர். இதே கால கட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் போதுமானதாக இல்லை.
குடிப்பதற்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டதால் பேரூரில் உள்ள நொய்யல், ஆற்றிலிருந்து நீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது. சின்ன தடாகத்தில் வசித்த மக்கள் சென்ராய கவுண்டரிடம் சென்று முறையிட்டனர். இப்பகுதியில் ஒரு குளம் வெட்டி நீரை சேமித்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் இப்பகுதியும் செழிப்புறும். எனவே ஆங்கிலேயரிடம் கூறி குளம் வெட்ட ஏற்பாடு செய்யும்படி கூறினர்.
இவர்கள் கோரிக்கை நியாயமான தாகப்பட்டது. ஆங்கிலேயர் உடனடியாக இவ் வேலையைச் செய்ய மாட்டார்கள். யோசித்தான், தன்னிடம் கிஸ்தி வசூலித்த பணம் இருந்தது. அதை வைத்து குளத்தை வெட்டி விடலாம் என முடிவு செய்தார். 16 ஏக்கர் பரப்பளவில் குளத்தையும் வெட்டி நீர் வழிப்பாதையையும் அமைத்தார். மழை காலத்தில் நீர் பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக குளத்துக்கு நீர் வந்தது, குளத்தில் நீரை சேமித்தனர். அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீண்ட நாளாக கஜானாவுக்கு கிஸ்தி பணம் வராததால் ஆங்கிலேயர் சென்றாய கவுண்டர் மீது கோபம் கொண்டு கைது செய்து அழைத்து வரும்படி உத்தரவிட்டனர். இச்சேதியை அறிந்த ஜமீன் தன் மனைவி பொன்னம்மாளுடன் ஓடி அருகில் உள்ள குருடி மலையில் ஒளிந்து கொண்டார். வீரர்கள் தேடி இவர்கள் இடத்தை கண்டுபிடித்து விட்டனர். வீரர்கள் வந்தால் கைது செய்து அழைத்துச் சென்று விடுவார்கள். இவர்கள் கையில் சிக்கினால் அவமானம் எனக் கருதி, இருவரும் உயரமான இடத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். தற்போதும் அவர் உயிர் நீத்த இடம் சென்ராயன் வரை (வரை - சரிவு என பொருள்) என வழங்கப்பெறுகிறது. அவர் வெட்டிய ஏரி அவரது மனைவி பெயரால் “பொன்னி ஏரி” என வழங்கப்படுகிறது. அரசாங்க பதிவேட்டிலும் இப்பெயரே காணப்படுகிறது.
ஊர்மக்கள் சீரோடும் சிறப்போடும் செழிப்புடன் வாழ வேண்டுமெனில் ஒரு கோயில் அவசியம் என்று உணர்ந்த மக்கள், “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பழமொழிக்கேற்ப முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு பொன்னி ஏரி கரை மீது உயர்ந்த உயரத்தில் கோயில் அமைக்க முடிவு செய்தனர். மாசீர் குடும்பத்தினர் கோயிலை அமைக்க முன் வந்து, அழகிய கோயிலை அமைத்தனர். விநாயகப் பெருமான் ‘சங்க விநாயகர்’ என அழைக்கப்பெற்றார். நாளடைவில் பொன் ஏரி விநாயகர் என மாறிவிட்டது. இக்கோயில் 150 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
கிராமப் புறங்களில் விநாயகப் பெருமான் சிலையை வேறு இடத்திலிருந்து திருடி எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தால் அவருக்கு ஆற்றலும் சக்தியும் அதிகம் என்ற கருத்து நிலவுகிறது. இருமுறை இக்கோயிலில் இருந்த சிலை திருடு போய்விட்டது. சிறிது காலம் பூஜை நடக்காமல் இருந்தது அச்சமயத்தில் கோயிலைப் பராமரித்து வரும் குடும்பத்தில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்ததை ஒட்டி பிரசன்னம் பார்த்ததில் விநாயகர் கோயிலில் பூஜை தடை பெற்றதே மூல காரணம் என தெரிய வந்தது.
உடனடியாக செயல்பட்டு புதிய சிலை செய்யப்பட்டதுடன், வலுவிழந்து சிதில மடையும் நிலையில் இருந்த கோயிலையும் மாற்றி அமைக்க முடிவு செய்து, 5 மாதத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் சீரோடும் சிறப்போடும் நடந்தேறியது. கோயிலில் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. கிராமமும் சுபிக்ஷம் அடைந்தது.
இருப்பிடம் : கோவை தடாகம் சாலையில் 15 கி.மீ. தொலைவில் சின்ன தடாகம் பிரிவு உள்ளது. இப்பிரிவிலிருந்து 1 கி.மீ. தொலைவில் பெருமாள் கோயில் உள்ளது. இக் கோயில் கன்னி மூலையில் உயர்வான இடத்தில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. காந்திபுரம் - ஆனைகட்டி பேருந்து மூலம் கோயிலை அடையலாம். ஆட்டோ /டாக்ஸி வசதிகள் உண்டு.