இத் தலத்தில் கேரளா தாந்திரீக முறைப்படி நான்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. சனிக்கிழமை, சஷ்டி, கிருத்திகை, வெள்ளிக்கிழமை, பிரதோஷம், ஆயில்யம் நட்சத்திரம் ஆகிய தினங்களில் மாத பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வருட திருவிழாக்களில் விஷு கனி ,ஆடி வெள்ளி, ஓணம் ஆகியவை கொண்டாடப்பட்டாலும் , ஐயப்பன் பிறந்த தினமான பங்குனி உத்திரம் , மண்டல கால பூஜைகள், மகர ஜோதி பூஜை மற்றும் ஆனி மாத மக நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் பிரதிஷ்டா தினம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்த பிரதான வைபவங்கள் ஆகும்.
தல சிறப்பு:
ஈசானியத்தில் மேற்கு நோக்கியவாறு சிவ பெருமான் லிங்க ரூபமாக எழுந்தருளி உள்ளார்.
திறக்கும் நேரம்:
காலை 5.30 - 10.00 , மாலை 5.30 - 8.00 ( சனிக்கிழமைகளில் கூடுதலாக 0.30 நேரம் திறந்திருக்கும் )
முகவரி:
ஐயப்ப சுவாமி கோயில், பெரியநாயக்கன்பாளையம், கோவை
பொது தகவல்:
தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் எண்ணற்ற ஐயப்பன் கோயில்கள், ஒவ்வொரு விதத்தில் சிறப்பு பெற்றிருப்பதை காணலாம். அனைத்து கோயில்களும் ஒரே மாதிரியான சாநித்தியம் மிக்கவைகளாக இருப்பதில்லை என்பதே உண்மை. காரணம் கோயில் அமைப்பு, அமைந்துள்ள இடம், பூஜை முறைகள் என காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அனைத்து ஐயப்பன் கோவில்களிலும் பூஜை முறைகள் கேரள தாந்திரீக முறைப்படிதான். அவ் வரிசையில் எல்லா வகையிலும் சிறப்புமிக்க ஓர் அற்புத ஐயப்பன் கோயில் பெரியநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
இவ்வாலயத்தில் குழந்தைகளுக்கு சோறூட்டல் ( அன்னப் பிராசம்) மிக முக்கியமான நிகழ்வாகும். மேலும் ஐயப்பனை வணங்கினால் அனைத்து பேறுகளும் கிட்டும் என்பது பொதுவான நம்பிக்கை. திருமணத்தடை நீங்க சுயம்வர புஷ்பாஞ்சலி, குடும்ப ஒற்றுமைக்கு பாக்ய ஹுக்தம் ,காரிய சித்திக்கு நீராஞ்ஞன பூஜை என பல்வேறு பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிறந்தநாள் மற்றும் திருமண நாள் ஆகிய தினங்களில் இத் தலத்தில் கணபதி ஹோமம் செய்வதால் நல்ல பலனும் முன்னேற்றமும் கிடைக்கின்றதாம். அனைத்து வேண்டுதல் விளக்கும் செவி சாய்த்து அருள் புரிகின்றார் இத்தல ஐயப்பன் என்பதே நிதர்சனம்.எல்லாவற்றிக்கும் மேலாக ஸ்ரீ கோயிலின் எதிரே உள்ள மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யும் போது அங்கு வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை நன்கு உணர முடியும்.
தலபெருமை:
பக்தர்களின் பங்களிப்புடனும் ஐயப்பன் திருவருளாலும் முன் ( நுழைவு ) மண்டபம் மிகச் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு 21.12.2017 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது எல்லா வகையிலும் முழுமை பெற்ற ஒரு கோயிலாக திகழ்கிறது.
கோயில் அஸ்திவாரம் தோண்டும்போது நீண்ட ஓடுகள், அஸ்திவாரக் கல்,செங்கல்கள் போன்றவை தென்பட்டன. முன் மண்டப அஸ்திவாரம் தோண்டும்போது படித்துறை கற்கள், மணற்பாங்கான தரை ஆகியவற்றை காண முடிந்தது. இதிலிருந்து பிரசன்னத்தில் கூறியவை அனைத்தும் உண்மையே என நிரூபணமானது.
கிழக்கு நோக்கிய முன்மண்டபத்தின் எதிரே உள்ள அரசமரத்தடியில் ஸ்ரீ கோயிலை நோக்கியவாறு விநாயகப் பெருமான் எழுந்தருளி உள்ளார். முன்மண்டபம் என்பது தமிழக கோயில் கலாச்சாரத்தின் படி ராஜ கோபுரமாகும். உள்ளே நுழைந்தால் நாம் காண்பது கூர்மத்தின் மீது அமைந்த தீபஸ்தம்பம் ஆகும். கூர்மம் மகாவிஷ்ணுவின் அம்சம், தீபம் மஹாலட்சுமியின் அம்சம். இதை அடுத்து பலிக்கல் மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் அமைந்துள்ளது.
சுற்றம்பலத்தின் கன்னி மூலையில் செல்வ விநாயகர் சன்னதி, வாயு மூலையில் வள்ளி தேவயானை சமேத முருகன் சன்னதியும், மூகாம்பிகை சன்னதியும் அமைந்துள்ளன. ஈசானியத்தில் மேற்கு நோக்கியவாறு சிவ பெருமான் லிங்க ரூபமாக எழுந்தருளி உள்ளார். சுற்றம்பலத்தின் மையத்தில் ஸ்ரீ கோயில் எனப்படும் கருவறை மூன்று கலசங்களை தாங்கியவாறு கேரள சிற்ப சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் பல்வேறு சர விளக்குகள், நிலை விளக்குகளுக்குகளின் பேரொளி வீச, வெள்ளி கவசத்துடன் கூடிய அலங்காரத்தில் காக்கும் கடவுளாக ஐயப்பன் எழுந்தருளி அருளாட்சி புரிகின்றார். சுற்றம்பலத்தின் வெளிப்பிரகாரத்தில் கன்னி மூலையில் நாகராஜா மற்றும் நாக யக்ஷி சன்னதி உள்ளது. வடக்குப் பகுதியில் குருவாயூரப்பன் எழுந்தருளியுள்ள முன் மண்டபத்துடன் கூடிய தனிச் சன்னதியும், எதிரே நவகிரஹ சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன.
தல வரலாறு:
சபரிமலை பிரபலமாகி தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து பெருமளவில் சபரிமலைக்கு செல்ல தொடங்கினர். சபரிமலை செல்பவர்கள் மாலை அணிந்து, ஐயப்பனுக்கு பூஜை செய்து பஜனை மேற்கொள்ளும்போது அவர்களுக்கென ஒரு ஆலயம் தேவைப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஏதாவது ஒரு கோயிலில் ஐயப்பன் படத்தை வைத்து பூஜித்து வந்தனர். கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் புகழ்பெற்ற ஒரு தொழிற்சாலையில் வேலை செய்த 25 பேர் ஒரு குழுவாக சேர்ந்து 1980 வது ஆண்டில் ‘ ஐயப்பா பூஜா சங்கம் ‘ என்ற அமைப்பை தொடங்கி சபரிமலைக்கு சென்று வந்தனர். கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் கூடியதை அடுத்து 1995 ல் ‘ ஐயப்பா சேவா சங்கம் ‘ என்ற அமைப்பை தொடங்கி முறைப்படி பதிவு செய்தனர். தொடர்ந்து மண்டல காலங்களில் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று வந்தனர். தங்களுக்கென ஒரு கோயில் வேண்டும் என்பது அனைத்து பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. 2005 ல் கோயில் கட்டுவதற்கான 25 சென்ட் பரப்பளவுள்ள விசாலமான இடத்தை தேர்வு செய்து விலைக்கு வாங்கினர்.
கோயில் கட்டுவதற்கான வரைபடத்தை கேரளாவில் புகழ்பெற்ற ( காணிப்பையூர் கிருஷ்ணன் நம்பூதிரி ) ஒருவர் தயாரித்துக் கொடுத்தார். நல்ல முகூர்த்த நாளில் பூமி பூஜை போடப் பட்டு கட்டிட வேலைகளை ஆரம்பித்தனர். கட்டட வேலைகளில் நல்ல முன்னேற்றம் கண்ட நிலையில் திடீரென ஸ்தம்பித்து நின்று விட்டது. என்ன காரணம் என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அனைத்து முயற்சிகள் செய்தும் பயனில்லை . கட்டிட குழுவினரின் ஏகோபித்த முடிவின்படி பிரசன்னம் பார்க்க ஏற்பாடு செய்து ( பாடூர் ராதா கிருஷ்ண பணிக்கர் ) ஒருவரை கூட்டி வந்தனர்.பிரசன்னம் பார்க்கும் போது , சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் விஷ்ணு மற்றும் அம்பாள் கோயில் இருந்திருக்க வேண்டும். மேலும் தற்போது கோயில் அமைக்கும் இடத்திற்கு அருகில் ஒரு ஆறு இருந்திருக்க வேண்டும் எனக் கூறினார். அத்துடன் குருவாயூரப்பனுக்கென ஒரு தனி கோயில் கட்ட ஆலோசனை வழங்கினார். இவ்வாறு செய்தால் எல்லா பணிகளும் விரைவாக முடிவுறும் என உறுதியளித்தார்.அவர் கூறியபடியே பணிகள் மேற்கொள்ளப்பட்டது ஆலயத்தின் அனைத்து கட்டிட வேலை மற்றும் இதர பணிகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவடைந்தன. அதேநேரம் கோயிலுக்கு தேவையான சிலைகளும் வந்து சேர்ந்தன.
ஸ்ரீ கோயில் ( மூலவர் கருவறை ), 8X8X8 அடி அளவில் குழி வெட்டி அதில் மணலை நிரப்பி, ஆதி சிலை எனப்படும் சதுர பீடம் அமைத்தனர். அதன்மீது கல்லாலான நிதி கும்பம் ( பானை போன்ற அமைப்பு ) நிறுவி அதில் பஞ்ச உலோகம், நவரத்தினங்கள் ஆகியவற்றை நிரப்பி கல்லாலான பத்மத்தினால் மூடி , அதன் மீது கூர்மம் அமைத்து யோக நாளம் எனும் செப்பு குழாய் பதித்து அதன்மீது பத்ம பீடம் அமைத்தனர் . இதன் மீதுதான் ஸ்ரீ கோயில் எனும் கருவறை கட்டப்படும். இவை அனைத்தும் கோயில் தட்சு சாஸ்திர முறைப்படி துல்லியமாக அமைக்கப்படும் முறைதான் ஷடாதார பிரதிஷ்டை என்பதாகும்.
திருப்பணிகள் முழுமையடைந்த நிலையில் 25.06.2012 அன்று முதல் கும்பாபிஷேகம் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகத்தில் பிரசித்தி பெற்ற தந்திரி ( KCP பட்டத்திரி பாடு ) அவர்கள் தலைமையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் ,பொதுமக்கள் கலந்து கொள்ள வெகு கோலாகலமாக நடந்தேறியது. பிரதான கோயில் முழுதும் முடிவடைந்த நிலையில் முன்மண்டபம் இல்லையே என்ற குறை அனைவரது மனதிலும் மேலோங்கி நின்றது.
தகவல் : வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பிறந்தநாள் மற்றும் திருமண நாள் ஆகிய தினங்களில் இத் தலத்தில் கணபதி ஹோமம் செய்வதால் நல்ல பலனும் முன்னேற்றமும் கிடைக்கின்றதாம்.
இருப்பிடம் : பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை ரோட்டில் உள்ள அண்ணாநகர் வழியே சென்று கோயிலை அடையலாம் .ஒரு கிலோ மீட்டர் தொலைவு. காந்திபுரத்தில் இருந்து தடம் எண்4D , 6A ,27,32.