தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 102வது தலம்.
திருவிழா:
நவராத்திரி 9 நாட்களும் திருவிழா கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திரம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 165 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில்,
கோயில் வெண்ணி போஸ்ட்- 614403,
நீடாமங்கலம் தாலுகா,
திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91- 98422 94416
பொது தகவல்:
கிழக்கு நோக்கிய கோயில். எதிர்புறம் சூரியதீர்த்தம் . மூன்று நிலைராஜககோயிலின் உள்ளே நந்தி, பலிபீடம் உள்ளன.
பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை. ஆகியோர் உள்ளனர். கருவறை அகழி அமைப்புடையது.
பிரார்த்தனை
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையையும், ரவையையும் சம அளவில் கலந்து பிரகாரத்தை வலம் வந்து எறும்புக்கு உணவாக இடுகிறார்கள். இதனால் சர்க்கரை நோய் குணமாகிறது என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து விநியோகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
மிகவும் பழமையான இத்தலத்து இறைவனை 4 யுகங்களிலும் வழிபாடு செய்யப்பட்டுள்ளதாக தலவரலாறு கூறுகிறது.
இறைவனின் திருமேனி அதாவது பாணத்தில் கரும்புக்கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கிறார்.
சங்க காலத்தில் இவ்வூரில் வெண்ணிக்குயத்தியார் என்ற பெரும்புலவர் அவதரித்தார். இவர் பாடிய புறநானுற்றுப்பாடல் கரிகாற் சோழனின் வெண்ணிப்போரைக்கூறுகிறது.
கரிகாற்சோழன் தன் 18வது வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு சேர, பாண்டிய மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றுள்ளான். கரிகாற்சோழன் பெற்ற இந்த வெற்றியே மாபெரும் வெற்றியாக கல்வெட்டு கூறுகிறது.
இந்த பிடாரி அம்மனை வழிபடுபவர்களுக்கு எதிரி பயம் இருக்காது என்பது ஐதீகம்.
தான் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதத்தில் கரிகாற்சோழனும், முசுகுந்த சக்கரவர்த்தியும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளதாக தெரிகிறது.
தல வரலாறு:
முற்காலத்தில் இத்தலம் முழுவதும் கரும்புக்காடுகளால் சூழப்பட்டிருந்தது. ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரை மேற்கொண்டபோது இத்தலம் வந்தனர். அப்போது இந்த கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனியை கண்டு தொழுதார்கள். அவர்களில் ஒருவர் இத்தலத்தின் தலவிருட்சம் கரும்பு என்றும், மற்றொருவர் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவர்த்தம் என்றும் வாதிட்டனர்.
இறைவன் அசரீரியாக தோன்றி,""எனது பெயரில் கரும்பும், தலவிருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும்,'என்றருளினார். அன்று முதல் இறைவன் கரும்பேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.
இதுவே வடமொழியில் ரசபுரீஸ்வரர் ஆனது. தல விருட்சத்தின் பெயரால் இத்தலம் வெண்ணியூர் என்றழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி கோயில் வெண்ணி ஆனது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.