இத்தல மூலவர் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார். தனி சன்னதியில் அருள்பாலிக்கும் உத்திராபசுபதீஸ்வரர் தற்போதும் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 142 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6.45 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பிரகாரத்தில் புஜங்கலலிதமூர்த்தி, கஜசம்ஹாரமூர்த்தி, ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரமூர்த்தி, கங்காளமூர்த்தி, பிட்சாடனார், திரிபுரசம்ஹார மூர்த்தி, பைரவர் என வரிசையாக எட்டு சம்ஹாரமூர்த்திகள் காட்சி தருவது விசேஷம்.
இவ்வாறு அட்ட வீரட்ட தலங்களிலுள்ள சுவாமிகளையும் இங்கு தரிசிக்கலாம். தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், அசுர மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். அருணகிரியாரால் திருப்புகழ் பாடப்பெற்றவர் இவர்.
சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள துர்க்கை எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறாள். இவள் ஒரு கையில் வில்லுடன் காட்சி தருவது சிறப்பு. சிறுதொண்டரை கைலாயத்திற்கு அழைத்துச் சென்ற சிற்பம், உள்ளது.
பிரகாரத்தில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, நால்வர், சங்கநிதி, பதுமநிதியுடன் நாகர், இரட்டை பைரவர் இருக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் உயர்ந்த பீடத்தில் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை
செய்த தவறுக்கு பிராயச்சித்தம் வேண்டுபவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
தோஷம், மனக்குழப்பங்கள் நீங்கவும் இங்கு வணங்கலாம். கர்ப்பிணிகள் அம்பிகையிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமி, உத்திராபசுபதீஸ்வரர், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
உத்திராபசுபதீஸ்வரர்: மூலவர் கணபதீஸ்வரருக்கு வலப்புறத்தில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில் உத்திராபசுபதீஸ்வரர் இருக்கிறார். இவரே இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். இவரது பெயரிலேயே தலமும் அழைக்கப்படுகிறது. கைகளில் உடுக்கை, திருவோடு, திரிசூலத்துடன் இவர் காட்சி தருகிறார்.
முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த பரஞ்சோதி என்பவர், பல்லவ மன்னரின் போர்ப்படை தளபதியாக இருந்தார். சிவபக்தரான இவர், சிவனருளால் பல போர்களிலும் வெற்றி வாகை சூடினார். பரஞ்சோதியாரின் பக்தியையும், சிவத்தொண்டையும் அறிந்த மன்னன், அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அது சிவனுக்கே நேர்ந்ததாகும் என கருதி, அவரை சிவத்தொண்டு செய்யும்படி வேண்டிக்கொண்டான். அவரும் ஏற்றுக்கொண்டார். மங்கை நல்லாள் என்பவரை மணந்து, சீராளன் என்னும் மகனைப் பெற்றார். தினமும் சிவத்தொண்டர்களுக்கு உணவு படைத்தபின்பே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்த இத்தம்பதியினர், அடியார்கள் கேட்டதை இல்லை என்று சொல்லாமல் படைத்து வந்தனர்.
ஒருசமயம் சிறுத்தொண்டர் வீட்டிற்கு அடியார் யாரும் வரவில்லை. எனவே அடியாரைத்தேடி அவர் வெளியில் சென்றார். அப்போது சிவன், அடியார் வேடத்தில் அவரது இல்லத்திற்கு சென்றார். சிறுதொண்டரின் மனைவி திருவெண்காட்டுநங்கை, பணியாள் சீராளநங்கை அவரை வரவேற்று, சாப்பிட அழைத்தனர். கணவன் இல்லாத வீட்டில் சாப்பிட மறுத்த அவர், இக்கோயில் காட்டாத்தி மரத்தினடியில் இருப்பதாக சொல்லிவிட்டு இங்கு வந்தார். வீடு திரும்பிய சிறுத்தொண்டரிடம் மனைவி நடந்ததைக் கூறினார். மகிழ்ந்த சிறுதொண்டர் கோயிலுக்கு வந்து அடியாரை அழைத்தார். அவர் சிறுதொண்டரின் மகனை சமைத்து படைத்தால் மட்டுமே, உணவருந்த வருவதாக கூறினார். அவரும் ஏற்றுக்கொண்டு மகனை அறுத்து, சமைத்தார். சாப்பிடும் முன்பு அடியார், சிறுதொண்டரின் மகனையும் சாப்பிட அழைக்கும்படி கூறினார்.
திகைத்த சிறுத்தொண்டரும், மனைவியும் வெளியில் நின்று மகனை அழைக்க, அவன் ஓடி வந்தான். மகிழ்ந்த தம்பதியர் வீட்டிற்குள் சென்றபோது, அடியவர் வடிவில் வந்த சிவன், அம்பிகையுடன் காட்சி தந்து, நால்வருக்கும் முக்தி கொடுத்து அருள்புரிந்தார். இவரே இங்கு உத்திராபசுபதீஸ்வரராக காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் காட்டாத்தி மரமும், சிறுத்தொண்டர் குடும்பத்தினருடன் காட்சி தருகின்றனர்.
நான்கு அம்பாள்: முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு குழந்தை இல்லை. சிவபக்தரான அவர் புத்திரப்பேறுக்காக சிவனை வேண்டி யாகம் நடத்தினார். சிவன் அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்றார். ஒருசமயம் வேட்டையாடச் சென்றபோது மன்னர் 4 பெண் குழந்தைகளை கண்டார். அக்குழந்தைகளை வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை வாய்த்த திருகுகுழல் நாயகியாகவும், திருப்புகலூரில் கருந்தாழ்குழலியம்மை, கணபதீச்சரத்தில் சரிவார்குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார்குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள்.
தனிக்கோயில் அம்பிகை: அம்பிகையர் நால்வருக்கும், "சூலிகாம்பாள்' என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமுற்றாள். ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக் கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்பமுடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் "சூலிகாம்பாள்' என்ற பெயரும் உண்டு. "சூல்' என்றால் "கரு'வைக் குறிக்கும். பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல் வெளியில் நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது மட்டும் சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்யம் படைப்பது விசேஷம்.
வாதாபி கணபதி: ஒருசமயம் பரஞ்ஜோதி, போருக்குச் சென்றபோது அங்கிருந்த விநாயகரை வணங்கி போர் புரிந்தார், வெற்றி பெற்றார். வெற்றியின் அடையாளமாக விநாயகரை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். கஜமுகாசுரனை அழித்ததற்காக விநாயகர் தோஷ நிவர்த்தி பெற்ற இத்தலத்தில், பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகே தமிழகத்தில் விநாயகருக்கு உருவ வழிபாடு உண்டானதாக சொல்வர். எனவே இவரை "ஆதிவிநாயகர்' என்றும் அழைக்கிறார்கள். தனிச்சன்னதியில் இருக்கும் இந்த விநாயகர், இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார். சதுர்த்தி திதியில் விசேஷ பூஜை நடக்கிறது. விநாயகருக்கு சிவன் ஒரு மார்கழி மாத சதயம் நட்சத்திரத்துடன் கூடிய, சஷ்டி திதியன்று தோஷ நிவர்த்தி செய்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் மார்கழி சதய நட்சத்திரத்தன்று சுவாமிக்கு விசேஷ பூஜை, வழிபாடு மற்றும் விநாயகர் புறப்பாடு நடக்கிறது.
சிலையாய் அமைந்த சிவன்: ஒருசமயம் சிறுத்தொண்டருக்கு காட்சி தந்த சிவனுக்கு, இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சிலை வடித்தார். ஆனால், பலமுறை சிலை சரியாக அமையவில்லை. அப்போது அங்கு வந்த சிவனடியார் ஒருவர் தாகத்திற்கு நீர் கேட்டார். சிற்பிகள் சிலை அமையாத கோபத்தில், சிலை செய்ய வைத்திருந்த உலோக கலவையை கொடுத்துவிட்டனர். அதை அருந்திய அடியார், அப்படியே சிலையாக மாறினார். சிவனே, சிலையாக அமைந்ததை உணர்ந்த மன்னர் இங்கு பிரதிஷ்டை செய்தார். அப்போது அச்சிலையில் நெற்றியில் சிறிய புடைப்பு இருந்தது. அதனை சிற்பிகள் தட்டவே காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. பின்பு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைக்கவே ரத்தம் நின்றது. தற்போதும் நெற்றியில் காயத்துடனே உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார். சாயரட்சை பூஜையில் இவருக்கு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ சாத்தப்படுகிறது. சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்பு, சித்திரை பரணி, வைகாசி திருவோணம், ஐப்பசி பரணி ஆகிய விசேஷ நாட்களில் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி (சிவப்பு இரத்தம்) இப்பகுதியில் ஆறாக ஓடியதாம். எனவே இத்தலம் "திருச்செங்காட்டங்குடி' என்று அழைக்கப்படுகிறது. "ரத்தாரண்யக்ஷேத்ரம்' என்பது இத்தலத்தின் மற்றொரு பெயர்.
தல வரலாறு:
யானை முகம் கொண்ட கஜமுகாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க இத்தலம் வந்தார். சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவனை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கியருளினார். எனவே சிவன், "கணபதீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல இறைவன் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார். தற்போதும் நெற்றியில் காயத்துடனே உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார்.
இருப்பிடம் : திருவாரூரில் இருந்து 13 கி.மீ., மயிலாடுதுறையில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் சன்னாநல்லூர் உள்ளது. இங்கிருந்து 11 கி.மீ., சென்றால் திருப்புகலூரை அடையலாம்.
நாகப்பட்டினம், கும்பகோணம் செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியாக செல்கிறது. இங்கிருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. ஆட்டோ வசதி உண்டு.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
மயிலாடுதுறை, திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5