மகா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை. இது தவிர ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்மதியம் 12-2.30 மணிவரை சிறப்பு பூஜை நடைபெறும்.
ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜை இங்கு சிறப்பு பெற்றது. ஆகஸ்ட் மாதத்தில் வருஷாபிஷேகம் நடைபெறும்.
தல சிறப்பு:
இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணியிலிருந்து மாலை 6.30 வரை தொடர்ச்சியாக கோயில் திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
தளி - திருமூர்த்தி மலை,
உடுமலைப்பேட்டை- 642 112.
கோயம்புத்தூர் மாவட்டம்.
போன்:
+91-4252 - 265 440
பொது தகவல்:
தல விநாயகரின் திருநாமம் சுந்தர கணபதி. முருகனின் திருநாமம் பாலசுப்பிரமணியன், இத்தலத்தில் வாழ்ந்த முனிவர் அத்திரி மகரிஷி.
பிரார்த்தனை
குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்தில் நீராடி சப்த கன்னி மார்களை வழிபட்டு பின் மும்மூர்த்திகளை வழிபட்டால் குழந்தை நிச்சயம் என்பது ஐதீகம். இது தவிர முகம் மற்றும் உடலில் மரு உள்ளவர்கள் இங்குள்ள தோணி ஆற்றில் நீராடி பின் அதில் உப்பு, மிளகு வாங்கி போட்டால் மரு நீங்கி விடும்.
நேர்த்திக்கடன்:
குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்குள்ள விநாயகர் கோயில் முன் உள்ள வரடிகல் என்ற கல்லின் அமர்ந்து அந்த கல்லின் மீது தேங்காய், பழம் வைத்து அந்த கல்லை இரு கைகளால் பிடித்து மனம் ஒன்றி வழிபட வேண்டும். அப்படி செய்யும் போது அந்த தேங்காய் பழத்தை அவர்கள் அறியாமல் தொட்டு விட்டால் குழந்தைப்பேறு நிச்சயம் என கூறப்படுகிறது.
திருமணம் ஆகாதவர்கள், இளைஞர்களின் சிறந்த படிப்பு, வேலை, மன நிம்மதி வேண்டுபவர்கள் இறைவனுக்கு தேங்காய், பழம் வைத்து வழிபட்டால் சிறந்த பலன் உண்டு என்பது நம்பிக்கை.
தலபெருமை:
சிவனுக்கு மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், அமணலிங் கேஸ்வரர் என்ற திருநாமங்கள் உள்ளன. அத்திரி மகரிஷியின் மனைவி அம்மணமாக வந்து மும்மூர்த்திகளுக்கு உணவு அளித்த தலமாதலால் இத்தல இறைவன் அமண லிங்கேஸ்வரர் ஆனார். சந்தன வழிபாடு என்பது இங்கு சிறப்பு. இங்குள்ள மும்மூர்த்திகளுக்கு பக்தர்கள் சந்தனத்தை வாங்கி அவர்கள் மீது எறிந்து வழிபாடு செய்கிறார்கள். அப்படி சந்தனம் எறியும் போது மும்மூர்த்திகளின் நெற்றியில் சந்தனம் விழுந்தால் நாம் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது ஐதீகம். இங்கு சிவன் ஞான குருவாக விளங்குகிறார். எனவே இங்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. அத்திரி மகரிஷியும் அவரது மனைவி அனுசுயாவும் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபட்டு வந்துள்ளார்கள்.இன்னமும் அவர்கள் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபடுவதாக கூறப்படுகிறது.
இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகளும் வந்து தங்கியதாக கூறப்படுகிறது. இங்கு மும்மூர்த்திகளும் குழந்தையாக விளையாடிய போது அருகிலுள்ள கஞ்ச மலையிலிருந்த கல் ஒன்று உருண்டு வந்தது. அப்போது பட்டாரசி, தேவகன்னி, பத்மகன்னி, சிந்து கன்னி, அகஜாகன்னி, வனகன்னி, சுமதிகன்னி என்ற சப்த கன்னியர் ஏழு விரளி மஞ்சளை வைத்து உருண்டு வந்த கல்லை தடுத்து நிறுத்தி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை காப்பாற்றினர். அப்படி உருண்டு வந்த கல்லிலேயே மும்மூர்த்திகள் ஐக்கிய மாகி விட்டனர். தடுத்து நிறுத்திய விரளி மஞ்சளிலேயே சப்த கன்னியர் ஐக்கியமாகி விட்டனர். இங்கு இந்த சப்த கன்னியருக்கு தனி சன்னதி உண்டு.
கோவை மாவட்டம் உடுமலையில் இருந்து தெற்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பெருந்தொடர்களில் தென்திசை நோக்கி பரவியுள்ள ஆனைமலைகளில் ஒன்றாகத் திகழ்வது திருமூர்த்திமலை இந்த மலையின் அடிவார கோயிலில் இருந்து தென்மேற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிற்றோடை யாகத் தோன்றுகின்ற தோணி நதி என்றும் பாலாற்றங்கரையில்தான் அமணலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கின்றார். அமணன் என்றால் குற்றமற்றவன் என்பது பொருள். குற்றங்களில் இருந்து நீங்கிய இறைவனே அமணலிங்கம் அமணலிங்கம் என்றால் அழகிய லிங்கம் என்றும் பொருள்படும். ஒரு காலத்தில் இங்கு சமணர்கள் வாழ்ந்த சுவடுகள் காணப்படுவதால் சமணலிங்கமே காலப் போக்கில் அமணலிங்கம் என மருவியது என்போரும் உண்டு. வடக்கு நோக்கி லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள ஒரு பாறைதான் அமணலிங்கேஸ்வரர் இந்தப் பாறையில் மும்மூர்த்திகளின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
பாறையைக் குடைந்து கருவறை அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மன், சிவன், விஷ்ணு உற்சவ மூர்த்திகளாக கருவறையில் காட்சி தருகின்றனர். நீரினால் சூழப்பட்டுள்ள அமணலிங்கத்தை சுற்றி வருகையில் கன்னிமார்களை வணங்குகிறோம். அனுசுயா தேவி, தன் கற்புத் திறத்தால் ஆடையின்றி வந்து, உணவு பரிமாற வேண்டும் என்ற தம்மிடம் கேட்ட மும்மூர்த்திகளை சிறு குழந்தைகளாக்கி அமுதம் படைத்த இடமே திருமூர்த்திமலை என்ற புராண வரலாறும் உண்டு. இங்கு விநாயகர், சுப்ரமணிய சுவாமி, நவக்கிர சன்னிதிகளும் உள்ளன. அமணலிங்கேஸ்வரர் கோயிலின் முன்புள்ள முப்பதடி உயரமுள்ள தீபகம்பம் சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. கம்பத்தின் அடிப்பாகத்தில் அட்டதிக்குகளை நோக்கியவாறு பத்ரகாளி, வனதுர்க்கா தேவி, விசாலாட்சி, ஊர்த்துவ தாண்டவர், அகோர வீரபத்திரர், ராமாவதாரம், நரசிம்ம அவதாரம், வேணு கோபாலர் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் மகாசிவராத்திரி உற்சவம் இக்கோயிலில் சிறப்பான விழாவாகும். குறுமிளகையும் உப்பையும் திருமூர்த்திமலை மீது இட்டு வேண்டிக் கொண்டால், தங்களது குறைகள் நீங்குகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தல வரலாறு:
எல்லாம் வல்ல இறைவன் உறைகின்ற திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். அகத்திய முனிவர் இறைவனின் திருமணக்கோலத்தை பொதிய மலையில் கண்டு களித்ததை மீண்டும் ஒரு முறை காண வேண்டி அதற்கான இடத்தை இறைவன் குறிப்பால் உணர்த்திய இடமே திருமூர்த்தி மலை. கைலாயத்தில் நடந்த இறைவனின் திருமண கோலத்தை குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே “பஞ்சலிங்கம் என வழங்கப்படுகிறது. கைலாய காட்சியை இறைவன் இங்கும் காட்டியதால் இத்தலம் தென் கைலாயம் என்று ம் சிறப்பு பெறுகிறது.
மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்திரி மகரிஷியின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவரது மனைவி அனுசூயையின் கற்பின் மகிமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பியும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர்.
ஒரு முறை அத்திரி மகரிஷி வெளியே சென்ற போது மும்மூர்த்திகளும் அனுசூயை தேடி வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசூயையும் தன் கணவனை மனதால் நினைத்து தீர்த்தத்தை அவர்கள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர். பின் அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த தலமே திருமூர்த்தி மலை.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.
இருப்பிடம் : இத்திருக்கோயில் கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ. தூரத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து 900 மீட்டர் உயரத்தில் பஞ்ச லிங்கம் அமைந்துள்ளது.
இங்கு செல்ல உடுமலைப்பேட்டையிலிருந்தும் தாராபுரத்திலிருந்தும் தளி வழியாக நிறைய பஸ் வசதி உள்ளது.