பாதத்திற்கே முதல் பூஜை: ஞானப்பழத்திற்காக பெற்றோரிடம் போபித்துக்கொண்டு பழநியில் குடி கொண்ட முத்துக்குமாரசுவாமி இந்த பொன்மலையில் பாதம் பதித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.எனவே இங்கு மூலஸ்தான முருகனுக்கு பூஜை நடத்தும் முன்பாக, பாறையிலுள்ள முருகனின் பாதத்திற்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
700 ஆண்டுகள் முன் மைசூர் அரண்மனை திவானுக்கு காலில் கொடிய புண் ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் புண் குணமாகவில்லை. திவானின் கனவில் முருகன் தோன்றி, ""கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோயிலுக்கு வா, மருந்து தருகிறேன்''. என்று கூறி மறைந்தார். அதே சமயத்தில் கோயில் அர்ச்சகர் கனவிலும் முருகன் தோன்றி, "" திவானின் புண்ணுக்கு இந்த மலையிலுள்ள மூலிகையை வைத்து கட்டினால் குணுமாகிவிடும்''. என்று கூறி மறைந்தார். திவானும் இத்தலத்திற்கு வர அர்ச்சகரும் மூலிகை வைத்து கட்ட புண் இரண்டே நாளில் குணமாகி விட்டது. இந்த விஷயத்தை திவான் மைசூர் மன்னரிடம் தெரிவித்தவுடன், முருகனுக்கு பொன்மலையில் கோயில் கட்டியதாக செப்பேடு கூறுகிறது. இந்தக்கோயிலில் உள்ள தீபமங்கள ஜோதியின் வெளிச்சத்தில் வேலாயுத சுவாமியின் அழகிய திருமுடியையும், திருவதனத்தையும், திருவடியையும் காண "நாலாயிரம் கண் அந்த நான் முகன் படைத்திலேனே' என்று மனமுருகி பாடியுள்ளார் அருணகிரிநாதர்.
தல வரலாறு:
பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையம் ஜமீன்தார் விரதமிருந்து பழநி சென்றார். பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். ஆயக்குடி சென்ற இவர், "பழநி முருகனை தரிசிக்காமல் விருந்துண்ண மாட்டேன்,'' என்று கூறிவிட்டு ஏதோ காரணத்தால், புரவி பாளையத்திற்கே திரும்ப வேண்டியதாயிற்று. "ஆயக்குடி வரை சென்றும் பழநி முருகனை தரிசிக்காமல் வந்து விட்டோமே' என்பதை நினைத்தே ஜமீன்தாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அன்றிரவே முருகப்பெருமான் ஜமீன்தாரின் கனிவில் தோன்றி, கிணத்துகடவு என்ற ஊரில் உள்ள மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்கு பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார்.
மறுபடியும் முருகன் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றி, அதே தோற்றத்தில் மலைமீது மூலவர் பிரதிஷ்டை செய்து சன்னதி அமைக்க வேண்டும் என்று கூற, சன்னதியும் அமைக்கப்பட்டது. கையில் வேலுடன் மூலவர் அமைக்கப்பட்டதால் இங்குள்ள முருகன் "வேலாயுத சுவாமி' என அழைக்கப்பட்டார்.
இருப்பிடம் : கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில் 20 கி.மீ., தூரத்தில் கிணத்துகடவு அமைந்துள்ளது. கோவையிலிருந்தும், பொள்ளாச்சியிலிருந்தும் அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கிணத்துக்கடவு,கோயம்புத்தூர்.