சித்திரையில் முதல் வாரம், கார்த்திகையில் மகாதீபம், அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி ஆகிய நாட்களில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
பிரதோஷம் மற்றும் சிவனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகிறது.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இத்தலம் சைவ-வைணவ ஒற்றுமை தலமாக விளங்குகிறது.
திறக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல்12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பரமசிவன் மலைக்கோயில், போடிநாயக்கனூர் - 625 513,
தேனி மாவட்டம்.
போன்:
+91-96008 35111
பொது தகவல்:
சிவனுக்கு வலது புறத்தில் லட்சுமி நரசிம்மரும், இடது புறத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகனும், மலை அடிவாரத்தில் பாலகணபதியும் தனித்தனி சன்னதிகளில் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
இத்தலவிநாயகர் செல்வவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைக்கின்றனர்.
பிரார்த்தனை
இத்தலத்தில் வேண்டிக்கொள்ள குழந்தை இல்லாதோருக்கு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன, திருமணத்தடை நீங்குகிறது, ஐஸ்வர்யங்கள் பெருகி, தொழில் விருத்தி அடைகிறது, கால் சம்மந்தப்பட்ட நோய்கள் தீருகின்றன, தோஷங்கள் விலகுகின்றன என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
ஆண் குழந்தை வரம் பெற்றோர் பரமசிவனுக்கு நைவேத்யம் படைத்து சிறப்பு அபிஷேகம் செய்து, குழந்தைகளை கோயிலில் உள்ள ஊஞ்சலில் தாலாட்டி வழிபடுகின்றனர்.
தொழில் விருத்தியடைந்தோர் லட்சுமி நரசிம்மரை பிரதோஷ காலங்களில் சிறப்பு வழிபாடு செய்து, பூஜை பொருட்கள் படைக்கின்றனர்.
தலபெருமை:
முன்பு பெரிய அளவில் இருந்த இக்கோயில் காலப்போக்கில் நந்தி சிலையுடன், லிங்கம் போன்ற தோற்றத்துடன் சிறுகல்லாக உள்ள இடமாக மட்டுமே காட்சி தருகிறது. "தென்திருவண்ணாமலை' என்றழைக்கப்படும் இத்தலத்தில் பரமசிவனுக்கு திருத்தலம் அமைக்க முற்பட்ட போது கிடைத்த சுயம்பு லிங்கமாகவும், கோயிலின் பின்புறம் அமைந்துள்ள கூவலிங்க மலையில் தினமும் மாலையில் ஜோதி வடிவிலும் காட்சி தருகிறார்.
இவ்விடத்தில் தினமும் உச்சிகால பூஜை நடைபெறும் நேரத்தில் இத்தலத்திற்கு வரும் வெள்ளைக் கழுகு ஒன்று சுயம்புவிற்கு மேலே மூன்று முறை சுற்றிவிட்டுச் செல்வதாக நேரில் கண்ட பக்தர்களும், பூசாரிகளும் தெரிவிக்கின்றனர்.
இத்தலத்தின் வட கிழக்கில் மரக்காலிங்கம், தென்மேற்கில் ஜோதி லிங்கம், தென்கிழக்கில் மல்லிங்கேஸ்வரர், வடமேற்கே மேலசொக்கையா என நான்கு திசைகளிலும் சுயம்பு லிங்கங்கள் மலைகளில் அமைந்ததுடன், மலைகளே லிங்கம் போல காட்சி தரும் அதிசயங்களின் நடுவே, பரமசிவன் காட்சி தருவது சிறப்பு. இங்கு பவுர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.
தல வரலாறு:
ஒரு முறை இப்பகுதியில் வசித்த சிவபக்தர் தனக்கு குழந்தை வரம் வேண்டி, காசி, ராமேஸ்வரம் சென்று இறைவனை வழிபட்டார். இறைவனின் அருளால் அவருக்கு பிறந்த குழந்தை நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்து போனது. இதனால் இறைவனின் மீது அவருக்கு ஏற்பட்ட வெறுப்பால், பூஜைப்பொருள்களை ஆற்றில் போட முடிவு செய்து விட்டு படுக்கச் சென்றார். அன்று இரவில் அவர் கண்ட கனவில் ஊருக்கு மேற்கே உள்ள மலையில் இருந்த துறவியுடன் இறந்துபோன தனது மகன் இருந்ததைக் கண்டார். உடன், அவர் தனது மகனை அழைக்க அவன் தந்தையிடம் வராமல் துறவியிடமே சென்று படுத்துக்கொண்டான்.
தனது மகனை தன்னிடம் அனுப்பி வைக்கும்படி துறவியிடம் தந்தை கேட்க, அவன் தனக்கு சேவை செய்ய வந்தவன் என்றும், அவனைப் போன்று இன்னொரு மகன் அவருக்கு பிறப்பான் என்றும் கூறினார். அப்போது , "என் மகனை சேவைக்காக எடுத்துக் கொண்ட தாங்கள் யார்? என துறவியிடம் அவர் கேட்டார். அச்சமயத்தில் மேற்கே உள்ள கூவலிங்கன் மலையில் நட்சத்திர வடிவில் ஜோதி தோன்ற, துறவி வடிவில் இருந்த பரமசிவன் பார்வதி சமேதராக காட்சி தந்தார். நடந்ததைப்பற்றி அவர் மறுநாள் காலையில் ஊர் மக்களிடம் கூற, மக்கள் அனைவரும் சிவன் காட்சி தந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு இரண்டு ஜோடி பாதசுவடுகளும் அதைச்சுற்றி மலர்களும் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அதன்பின், அங்கு கோயிலை எழுப்பி தொடர்ந்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் வட கிழக்கில் மரக்காலிங்கம், தென்மேற்கில் ஜோதி லிங்கம், தென்கிழக்கில் மல்லிங்கேஸ்வரர், வடமேற்கே மேலசொக்கையா என நான்கு திசைகளிலும் சுயம்பு லிங்கங்கள் மலைகளில் அமைந்ததுடன், மலைகளே லிங்கம் போல காட்சி தரும் அதிசயங்களின் நடுவே, பரமசிவன் காட்சி தருவது சிறப்பு.
இருப்பிடம் : தேனியில் இருந்து 16 கி.மீ., தூரத்தில் போடிநாயக்கனூர் அமைந்துள்ளது. அங்கிருந்து மூணாறு செல்லும் வழியில் 4 கி,மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
போடியில் இருந்து பஸ் வசதி இல்லாததால் ஆட்டோ அல்லது வாடகை கார்களில் தான் செல்ல முடியும்.