மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் சித்திரை மாதம் தான் இங்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கிறது.
கந்த சஷ்டி, திருக்கார்த்திகையும் முக்கிய திருவிழாக்களாகும்.
தல சிறப்பு:
சூரியனும் சந்திரனும் இங்கு அருகருகே அருள்பாலிக்கின்றனர். இது போன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது.எனவே இங்கு தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்கின்றனர்.
சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதால், இத்தலம் சோமாஸ்கந்த அமைப்பு கோயிலாகும். எனவே இத்தலத்தை வழிபட்டால் கைலாயத்தை வழிபட்ட பலன் கிடைக்குமாம்.
இத்தல விநாயகரின் திருநாமம் "கோடி விநாயகர்' என்பதாகும். இவரை ஒரு தடவை கும்பிட்டால் கோடி விநாயகரை கும்பிட்ட பலன் கிடைக்கும்.
பழநி திருவாவினன்குடியைப் போலவே இங்கும் முருகன் வடக்கு பார்த்த மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த முருகனை தரிசித்தால் பழநி முருகனை தரிசித்த பலன் கிடைக்கும்.
பொதுவாக தட்சிணாமூர்த்தி பாதத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் நால்வர் அருள்பாலிப்பர். ஆனால் இங்குள்ள "வீராசன தட்சிணாமூர்த்தி' பாதத்தின் கீழ் சப்த ரிஷிகள் அருள்பாலிக்கின்றனர். இது போன்ற அமைப்பை மிகவும் அரிதாகவே தரிசிக்க முடியும்.
இங்கு சிவனின் பின்புற கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவரின் அருகே பிரம்மா, விஷ்ணு இருவரும் அருள்கின்றனர். இந்த இடத்தில் நின்று தரிசனம் செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அருளும் ஒன்றாக கிடைக்கும். இதுபோன்ற அமைப்பை திருவதிகை வீரட்டேஸ்வரர் கோயிலிலும் காணலாம்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ,
கடைவீதி, ஆண்டிபட்டி-625 512,
தேனி மாவட்டம்.
போன்:
+91 4546 -243242, 9940142676, 9842649189
பொது தகவல்:
பிரமாண்டமான ஏழு நிலை ராஜகோபுரம் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.மூலவர் சுந்தரேஸ்வரர் கிழக்கு பார்த்தும், அம்மன் மீனாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.
கோயில் பிரகாரத்தில் கோடி விநாயகர், சந்தான விநாயகர், நாகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி, நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
ஆண்டிபட்டியை சுற்றியுள்ள ஊர்களில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் இத்தலத்தில் வழிபாடு செய்த பின்னரே தொடங்கும்.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியத்திற்காக வழிபாடு செய்வதற்கு நாட்டில் பல கோயில்கள் இருந்தாலும், குழந்தை பிறந்து பிறந்து இறப்பவர்களின் குறை தீர்ப்பதற்காக ஒரு சில கோயில்களே உள்ளது. அதில் முதன்மையான கோயில் இது.
குழந்தை பிறந்து, பிறந்து இறக்கும் தோஷம் உளளவர்கள், இங்குள்ள சிவன், முருகன், அம்மன் மூவருக்கும் பாலபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி பிறந்த குழந்தைகள் இறக்காது என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள சந்தான விநாயகரை வழிபடுவது சிறப்பு.
தீராத வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் இங்கு தினமும் மாலை வேளைகளில் விளக்கு போட்டு வழிபடுவது நல்லது.
உணவு சாப்பிடுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், உணவு செறிமானம் ஆகாமல் வயிற்று வலியால் அவதிப்படுபவர்களும், இங்குள்ள சிவனுக்கு சுத்தன்னம் நைவேத்தியம் படைத்து அந்த பிரசாதத்தை சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.
நேர்த்திக்கடன்:
நமது தேவைகளையெல்லாம் இறைவன் கொடுக்கின்றான். அவன் அருள்பாலிக்கும் கோயிலில் நடைபெறும் திருப்பணிக்கு தேவையான பொருட்களை நாம் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவோம்.
தலபெருமை:
மதுரை மீனாட்சி கோயில் போல, மிகவும் பழமையான இத்தலத்தில் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.
மன அமைதி வேண்டுபவர்கள், தியானம் செய்பவர்கள், யோகாசனம் பயில்பவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
பல காலகட்டத்தில் பல சித்தர்கள் ஆண்டிகள் வேடத்தில் இங்கு தங்கியிருந்தனர். இவர்களில் சிவனாண்டி என்ற சித்தரும் ஒருவர்.
இவர் பல காலம் இங்கு தங்கி சித்து விளையாட்டுக்கள் செய்து வந்தார். இவரது ஜீவ சமாதி இங்குள்ளது. இந்த சமாதிக்கு மேல் இத்தலத்தின் விருட்சமான வில்வமரம் அமைந்துள்ளது. தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இத்தலவிருட்சத்தின் கீழ் தரப்படும் விபூதியை பூசினால் நாள்பட்ட நோய்கள் விரைவில் குணமாகிவிடும் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
பஞ்சம், பட்டினியின்றி ஊர் செழிப்புடன் வாழ, வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் இங்குள்ள வெள்ளி வேலுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் எந்தவித குறைபாடும் இன்றி திருப்தியாக வாழலாம் என்பதால் சுற்றியுள்ள ஊர்மக்களில் பெரும்பாலானோர் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
தல வரலாறு:
இந்த பூமியில் ஆன்மிக சக்தியை அதிகப்படுத்துவதற்காக சிவனடியார்களாகவும், சிவனின் அம்சமாகவும் தோன்றியவர்கள் சித்தர்கள். இவர்களில் 18 சித்தர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சித்தர்களில் பலர் நம்நாட்டில் பல சிவத்தலங்களை தரிசித்திருந்தாலும், மதுரை மீனாட்சியிடமும், சுந்தரேஸ்வரரிடமும் மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டிருந்தனர். எனவே இவர்கள் நினைத்த போதெல்லாம் அன்னை மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தரிசிக்க விரும்பினர். பாண்டியர்களின் தலைநகராக மதுரை விளங்கியதால், இரவும் பகலும் மக்கள் நடமாட்டத்துடன் இருந்தது. இதனால் சித்தர்களால் மதுரையில் அமைதியாக தங்கி மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்க இயலவில்லை.
எனவே இவர்கள் மதுரைக்கு அருகில் அமைதியான சூழ்நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இருப்பதை அறிந்தனர். உடனே அவர்கள் ஆண்டிகள் கோலத்தில் அங்கு சென்று தங்கி, தியானம் செய்வது, சிவபூஜை செய்வது என்ற சிவத் தொண்டில் ஈடுபட்டனர். அத்துடன் தாங்கள் விரும்பிய நேரத்தில் எல்லாம் மதுரைக்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்து வந்தனர். ஆண்டிகளாக சித்தர்கள் இங்கு வந்து தங்கியதால், இத்தலத்திற்கு ஆண்டிபட்டி என்ற பெயர் ஏற்பட்டதாக தலவரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சூரியனும் சந்திரனும் இங்கு அருகருகே அருள்பாலிக்கின்றனர். இது போன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது.எனவே இங்கு தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்யலாம்.
பொதுவாக தட்சிணாமூர்த்தி பாதத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் நால்வர் அருள்பாலிப்பர். ஆனால் இங்குள்ள "வீராசன தட்சிணாமூர்த்தி' பாதத்தின் கீழ் சப்த ரிஷிகள் அருள்பாலிக்கின்றனர். இது போன்ற அமைப்பை மிகவும் அரிதாகவே தரிசிக்க முடியும்.
இங்கு சிவனின் பின்புற கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவரின் அருகே பிரம்மா, விஷ்ணு இருவரும் அருள்கின்றனர். இந்த இடத்தில் நின்று தரிசனம் செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அருளும் ஒன்றாக கிடைக்கும். இதுபோன்ற அமைப்பை திருவதிகை வீரட்டேஸ்வரர் கோயிலிலும் காணலாம்.