புற்று வழிபாடு: இக்கோயில் நான்கு பகுதிகளிலும் வயல்கள் சூழ்ந்து நடுவில் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. பொதுவாக அம்பாள் கோயில்கள் வடக்கு பார்த்துதான் இருக்கும். ஆனால், இக்கோயிலில் அம்பாள் தெற்கு நோக்கியிருப்பது விசேஷம்.
இக்கோயிலுக்கு எதிரேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கோயில் கொண்டுள்ள கண்ணகி, வடக்கு நோக்கியிருக்கிறாள். இதனை இரு அம்பாள்களும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இங்கு அம்பாளைவிட புற்று விசேஷமானதாக கருதப்பட்டு வணங்கப்படுகிறது.
பெருமாளின் தங்கை: இவ்வூருக்கு அருகில் கம்பத்தில் உள்ள கம்பராய பெருமாளுக்கு, சாமாண்டி அம்மன் தங்கை முறை என்று பாவித்து வருகின்றனர். கம்பராய பெருமாள் கோயில் தேர் இழுக்கும் போது 9 நாட்கள் சாமாண்டியம்மன் அக்கோயிலுக்குச் சென்று அண்ணனிடம் சீர் கேட்கிறாள். அவர் சீர் குறைத்துக் கொடுத்ததால், கோபித்துக் கொண்டு சாமாண்டிபுரத்திற்கு அம்மன் சென்று விடுவதாகவும் ஐதீகம்.
தல வரலாறு:
முன்னொருகாலத்தில் வளையல்காரர் ஒருவர், இவ்வழியாக வியாபாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, இவ்விடத்தில் இருந்த புற்றில் இருந்து ஒரு பெண்ணின் கை மட்டும் வெளியே நீண்டது. வளையல்காரரோ அதிர்ந்து விட்டார். அப்போது, ""ஐயா! என் கையில் வளையல் போடுங்கள்!'' என்று ஒரு அசரீரி ஒலித்தது. பயந்த வளையல்காரர் இங்கிருந்து ஓடிவிட்டார்.
அவர் இவ்வழியாக திரும்பி வரும்போதும், அதேபோலவே கை நீண்டு தனக்கு வளையல் அணிவிக்கும்படி கேட்டது. வளையல்காரரும் பயத்திலேயே கையில் அணிவித்தார். பின் ஊருக்குள் வந்த வளையல்காரர் நடந்ததைக் கூறவே, மக்கள் இங்கு வந்தனர். அப்போது ஒரு பக்தர் வாயிலாக தோன்றிய சாமுண்டீஸ்வரி, தானே புற்றில் குடியிருப்பதாக கூறினாள். எனவே, மக்கள் இங்கு சாமுண்டீஸ்வரிக்கு கோயில் கட்டினர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலத்தில் அம்பிகை புற்று வடிவில் அருள்பாலிக்கிறாள், இத்தலத்தில் வளையல் பிரசாதமாக தரப்படுகிறது.