புத்திரப்பேறு இல்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. கடன் தொல்லையில் இருப்பவர்கள் விஷ்ணுதுர்காலட்சுமி, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை வணங்குகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
தலபெருமை:
கிரக வஸ்திர பூஜை: முருகப்பெருமான் இக்கோயிலில், பால வடிவில் நின்ற கோலத்தில் அருளுகிறார். மயில் விமானத்தின் கீழ் காட்சி தருவதால், மூலஸ்தானத்தில் மயில் இல்லை.
விசேஷ நாட்களில் இவரது கன்னத்தில் மச்சம் உள்ள இடத்தில், குங்குமம் வைத்து அலங்காரம் செய்கின்றனர். அப்போது மட்டுமே மச்சத்தைப் பார்க்க முடியும். மற்ற நாட்களில் இவருக்கு எண்ணெய்க்காப்பு செய்வதால், மச்சத்தைக் காண முடியாது.
ஒவ்வொரு நாளும், அந்தந்த கிரகங்களுக்குரிய நிறத்தில் வஸ்திரம் அணிவித்து அலங்காரம் செய்வது மற்றொரு சிறப்பு. கிரக தோஷம் உள்ளவர்கள், அந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில், கிரகத்திற்குரிய நிறத்தில் முருகனுக்கு வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கிருத்திகை உச்சிக்காலத்தில் முருகனுக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அன்று மாலையில் சுவாமி புறப்பாடாகிறார்.
ஸ்ரீசக்ர விநாயகர்: முருகன் சன்னதிக்கு வலப்புறம் வலம்புரி விநாயகர் காட்சி தருகிறார். விநாயகர், அம்பிகையிலிருந்து தோன்றியவர் என்பதால் இவரை சக்தி அம்சமாக கருதுகின்றனர். இதன் அடிப்படையில், அம்பாளுக்குரிய ஸ்ரீசக்ரம் இவரது சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. எனவே, "ஸ்ரீசக்ர விநாயகர்' என்று இவர் அழைக்கப்படுகிறார். பிரகாரத்தில் சீதை, லட்சுமணனுடன் ராமர், யோக ஆஞ்சநேயர், சனீஸ்வரர், விஷ்ணு துர்க்கா லட்சுமி ஆகியோர் உள்ளனர்.
கடன் நிவாரண பூஜை: இங்கு பைரவியுடன் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் உள்ளார். பைரவர் கையிலுள்ள கும்பத்தில் மகாலட்சுமி சிற்பம் உள்ளது. அஷ்டமி திதியன்று உச்சிக்காலத்தில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. கடன் தொல்லையிலிருந்து விடுபட துர்க்கை மற்றும் பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
தல வரலாறு:
வேடர் குலத்தலைவன் நம்பிராஜனின் மகளாக அவதரித்த வள்ளி, தினைப்புனம் நிறைந்த திருத்தணியில் தோழியருடன் தங்கியிருந்தாள். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இறைவனுக்கு கிடையாது. ஏற்கனவே உயர் இனத்து தெய்வானையை மணம் முடித்த முருகப்பெருமான், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த வள்ளியையும் ஆட்கொள்ள முடிவு செய்தார்.
மனிதனாகப் பிறந்தவர்கள் இந்த உலக இன்பங்கள் நிரந்தரமானதென்றும், நிஜமானதென்றும் கருதி, மரணத்தைப் பற்றியே அக்கறையே இல்லாமல், இங்கேயே மூழ்கிக் கிடக்க எண்ணுகிறார்கள். தினைப்புனம் என்பது உலக இன்பத்தைக் குறிக்கும். அதில் மூழ்கிக் கிடந்தாள் வள்ளி. இவ்வாறு அறியாமல் மூழ்கிக் கிடக்கும் உயிர்களையும் தானே வலியத் தேடிச்சென்று ஆட்கொள்ள வருகிறான் இறைவன். முருகனும் வள்ளியை ஆட்கொள்ள வலிய வந்தார்.
இறை சிந்தனையே இல்லாத உயிர்கள் அவனைச் சிந்திப்பதே இல்லை. இது முருகனைக் கண்டு வள்ளி ஒதுங்கி ஓடியதைக் குறிக்கிறது. பின்னர் விநாயகர் உதவியுடன் அவளை மணந்தார். இது கந்தபுராணக்கதை, ஆனால், கர்ண பரம்பரையாக மற்றொரு செய்தி கூறப்படுகிறது.
முருகன் முதியவர் வடிவில் வள்ளியைத் தேடிச்சென்ற போது. ""கிழவரே! கன்னியர் இருக்கும் இடத்தில் உமக்கென்ன வேலை?'' என்று கேட்டாள். முருகனும் திரும்பிவிட்டார். மறுநாள் அழகிய இளைஞன் வடிவில் சென்றார். அவரிடம், ""என்ன முதியவரே! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தில் வருகிறீரே! நேற்று கிழவன், இன்று இளைஞனா? வந்ததன் காரணம் என்னவோ?'' என்றாள்.
தான் வேடம் மாறி வந்தது வள்ளிக்கு எப்படித் தெரிந்தது என முருகனுக்கு ஆச்சரியம்! தன்னைக் கண்டுபிடித்தது எப்படி? என அவளிடமே கேட்டார். அவள் முருகனின் வலது கன்னத்தைச் சுட்டிக்காட்டி, ""உம்மை இந்த மச்சம்தான் காட்டிக் கொடுத்தது!'' என்றாள். வள்ளியின் ஞானத்தை மெச்சிய முருகப்பெருமான், அவளை பாராட்டினார். இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு முருகப்பெருமான், வலது கன்னத்தில் மச்சத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர், "மச்சக்காரன்' என்று அழைக்கப்படுகிறார். இத்தகைய அமைப்பில் முருகனைக் காண்பது அபூர்வம்.
இருப்பிடம் : சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவேற்காடு செல்லும் வழியில் 10 கி.மீ., தூரத்தில் வானகரம் உள்ளது. இங்கிருந்து இடப்புறம் பிரியும் சாலையில் 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். வானகரத்திலிருந்து ஆட்டோ உண்டு.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
சென்னை எழும்பூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை மீனம்பாக்கம்
தங்கும் வசதி : சென்னை தாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101 தி பார்க் போன்: +91-44-4214 4000 கன்னிமாரா போன்: +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525 அசோகா போன்: +91-44-2855 3413 குரு போன்: +91-44-2855 4060 காஞ்சி போன்: +91-44-2827 1100 ஷெரிமனி போன்: +91-44-2860 4401, 2860 4403 அபிராமி போன்: +91-44-2819 4547, 2819 2784 கிங்ஸ் போன்: +91-44-2819 1471 சன் பார்க் போன்: +91-44-4263 2060, 4264 2060.