சித்திரைத்திருவிழா,ஆடி,தை அமாவாசை,மாத அமாவாசை மற்றும் பவுர்ணமி.
தல சிறப்பு:
இத்தல வேலப்பர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இப்பகுதியில், கோயிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாக பொங்கிக்கொண்டே இருக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
தற்போது வேலப்பர் குடிகொண்டிருக்கும் பகுதி முழுமையும், ஆதியில் மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இப்பகுதியில், கோயிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாக பொங்கிக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு, மாமரத்தின் அடியில் ஊற்று பொங்கிக்கொண்டிருப்பதால் இப்பகுதி "மாவூற்று' என்றும், இத்தல முருகன் "மாவூற்று வேலப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தலவிநாயகர் மாவூற்று விநாயகர் என்ற திருநாமத்தடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.
நினைத்த காரியம் நிறைவேற வேலப்பருக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீரால் சிறப்பு அபிஷேகங்கள் செய்து, பால்குடம் மற்றும் காவடி எடுக்கப்படுகிறது.
தலபெருமை:
எழில் பொங்கும் இயற்கை அன்னையின் மடியில் அமைந்துள்ள இந்த ஊற்றில் நீராடி வேலப்பரை மனமுருக வேண்டிக்கொள்ள தீராத பிணிகளும், மனக்குறைகளும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலம் அமைந்துள்ள தெப்பம்பட்டியில் பெரிய தெப்பம் ஒன்று உள்ளது. இத்தெப்பத்திற்கும், இத்தலத்திற்கும் சுரங்கத்தொடர்புகள் இருப்பதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் எனும் முதுமொழிக்கேற்ப இம்மலைக்குன்றில், வேலப்பராக முருகன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். குகைகள் நிறைந்துள்ள இம்மலையில் பல சித்தர்கள், தவயோகிகள் இன்றும் தவம் புரிவதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். வேலப்பர் அருள்பாலிக்கும் குன்றின் மீது மாவூற்று விநாயகர், சப்தமாதாக்கள், அடிவாரத்தில் சக்தி கருப்பணசாமி ஆகியோர் அமைந்திருந்தும் பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர்
தல வரலாறு:
பல்லாண்டுகளுக்கு முன்பு மலைப்பகுதியாக உள்ள இப்பகுதியில் வசித்து வந்த பழியர் இனத்தவர்கள் வள்ளிக்கிழங்கினை பயிரிட்டு அதனை தமது உணவாக உண்டுவந்தனர். ஒருமுறை, அவர்கள் தற்போது கோயிலில் வேலப்பர் எழுந்தருளியுள்ள பகுதியில் முளைத்திருந்த வள்ளிக்கிழங்கினை தோண்டினர். அதிக ஆழத்திற்கு தோண்டியும் அக்கிழங்கினை எடுக்க முடியாமல் அதன் வேர் மட்டும் நீண்ட தூரம் சென்று கொண்டேயிருந்தது. தொடர்ந்து தோண்டிய அவர்கள் வேரில் முடிவில் வேலப்பர் சுயம்புவாக வீற்றிருந்ததைக் கண்டனர். பின், அவர்கள் இப்பகுதியை ஆண்ட கண்டமனூர் ஜமீன்தாரிடம் சுயம்புவாக வேலப்பர் இருந்ததைக் கூற, பிற்காலத்தில் இவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல வேலப்பர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . இப்பகுதியில், கோயிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாக பொங்கிக்கொண்டே இருக்கிறது.
இருப்பிடம் : முக்கிய ஊர்களில் இருந்து தூரம்:
தேனியில் இருந்து 32 கி.மீ., ஆண்டிபட்டியில் இருந்து 18 கி.மீ., மதுரையில் இருந்து 98 கி.மீ.
ஆண்டிபட்டியில் இருந்து காலை, மாலையில் மட்டும் பஸ்கள் செல்கின்றன. மாதஅமாவாசை, திருவிழா தினங்களில் ஆண்டிபட்டியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.