ஆடி 18. இந்நாளில் பெரிய நாயகி அம்மன் இங்கு எழுந்தருளி சேர்ந்திருப்பதாக ஐதீகம். இந்த நாளில் பெண்கள் தாலிச்சரடு மாற்றுவார்கள்.
ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, மாத பிரதோஷம், தமிழ்வருடப்பிறப்பு , ஆனி மாத ஜேஷ்டாபிஷேகம் , ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்,கார்த்திகை சம்வத்சராபிஷேகம், சங்காபிஷேகம், தனுர் மாத பூஜை, தை அமாவாசை ஆகியவை இங்கு முக்கிய திருவிழாக்கள்.
தல சிறப்பு:
லிங்கத்தின் அம்பு பட்ட தழும்பு அபிஷேகத்தின் போது இப்போதும் காணலாம்.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் மாலை 6 மணி மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில்,
மானூர்- 624 618
திண்டுக்கல் மாவட்டம்.
போன்:
+91- 4545 - 242 551.
பொது தகவல்:
இங்குள்ள இறைவனைச் சுற்றிலும் கோஷ்ட தேவதைகளாக பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் அமைந்திருப்பதும் கோயிலின் சிறப்பம்சமாகும். மேலும் தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக இங்கு வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
பிரார்த்தனை
மேற்கு பார்த்த சிவாலயம். மிக சக்தி வாய்ந்தவர். அனுக்கிரக மூர்த்தி. எந்த வித பிரச்னையிலிருந்தும் காப்பாத்தக்கூடியவர். இது தவிர இத்தல இறைவனை வழிபட்டால் தடைபட்ட திருமணம், குழந்தைப்பேறு, தகுதியான வேலை, பித்ரு சாபம் நீங்குதல், எதிரிகள் தொல்லை நீங்குதல் தன்னம்பிக்கை, மன தெளிவு, கிடைக்கிறது. ஆயுள் ஆரோக்கியத்திற்காக ஆயுஸ்யஹோமம், மிருத்தியஞ்சய ஹோமம் இங்கு செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர்.
தலபெருமை:
கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காமல் விநாயகருக்கு கிடைத்து விடுகிறது. இதனால் கோபம் கொண்ட முருகன் பழநி மலைக்கு வந்து விடுகிறார். முருகனைத் தேடிக்கொண்டு சிவனும் சக்தியும் பூலோகத்தில் பழநி மலைக்கு அருகில் வந்து இறங்குகிறார்கள். அப்படி இறங்கிய இடத்தின் இயற்கை எழிலை கண்ட பரமேஸ்வரன் அங்கேயே வீற்றிருந்து அருள்பாலிக்க நினைத்துவிட்டார். ஆனால் உமையவளோ தன் மகன் முருகனை காண பழநிக்கே செல்ல அனுமதிக்கும் படி சிவனிடம் வேண்ட சிவனும் சம்மதிக்கிறார். பிரிய மனமில்லாமல் நாயகி விடை பெற்றதால் அன்னை பிரியா நாயகி என்றும், விடை கொடுக்க மனமில்லாமல் சிவன் விடை கொடுத்ததால் பிரியா விடையார் என்றும் அழைக்கப்பட்டார்கள். இதுவே காலப்போக்கில் மருவி பெரியாவுடையார் - பெரியநாயகி ஆனது.
பார்வதி முருகனை தேடி சென்று விட்டதால் இங்கு அம்மனுக்கென தனி சன்னதி எதுவும் கிடையாது. இருந்தாலும் சக்தி வேறு சிவம் வேறு என இல்லாமல் இரண்டும் ஒன்றானதால் இங்குள்ள சிவனை வழிபட்டாலே சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.
கோயிலின் சிறப்பம்சம் : இக்கோயிலின் சிறப்பம்சமாக கோயில் மேற்கு பார்த்து அமைந்திருப்பதும், சிவனின் பீடம் சதுரமாக அமைந்திருப்பதும் ஆகும். மூர்த்தியும், தலமும் இங்கு சிறப்பு. அதே போல தீர்த்தமும் இங்கு மிகவும் சிறப்பு. வடக்கு நோக்கி ஓடும் சண்முகாநதி தீர்த்தம் மிகவும் சிறப்பு. இந்நதியில் குளித்த சிவனை வழிபட்டால் ஏழேழு ஜென்ம பாவமும் விலகும் என புராணம் கூறுகிறது.
பழநி முருகனை தரிசிக்க வருபவர்கள் முருகனை தரிசிக்கும் முன் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனை தேடி வந்த தந்தையான பெரியாவுடையாரை தரிசனம் செய்த பின் பழநி முருகனை தரிசனம் செய்தால் தான் முழுப்பலன் கிடைக்கும் என கூறுகிறார்கள். கோயிலின் மற்றுமொரு சிறப்பு இங்குள்ள பரிவார மூர்த்திகளும், பிரதோஷ நாயனாரும் ஆகும். பொதுவாக பிரதோஷ மூர்த்தி அம்பாளுடன் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் இருக்கும். ஆனால் இங்குள்ள பிரதோஷ மூர்த்தி தாண்டவ நிலையில் ஒருகாலைத்தூக்கி கையில் டமருகத்துடன் காணப்படுகிறார்.
இங்குள்ள நடராஜரும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். எப்படி என்றால் உடல் முழுக்க கருப்பு வண்ணமும், முகம் மட்டும் வெள்ளை வண்ணமும் கூடிய நிலையில் கல்லால் ஆன நடராஜர். அருகில் சிவகாமி அம்மனும் கிடையாது. இங்குள்ள இறைவனைச் சுற்றிலும் கோஷ்ட தேவதைகளாக பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் அமைந்திருப்பதும் கோயிலின் சிறப்பம்சமாகும். மேலும் தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக இங்கு வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
தல வரலாறு:
பழநி நகரில் எழுந்தருளி பெரியநாயகிக்கு நாயக்கர் காலத்தில் கோயில் கட்டப்பட்டது. ஆனால் சிவபெருமானோ தன்னை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட திருவிளையாடல் புரிந்தார். விராட மகாராஜாவுக்கு வேட்டையாடுவது என்றால் மிகவும் விருப்பம். ஒருநாள் சிவன் மான் உருவம் கொண்டு மன்னன் முன்பு தோன்றினார். மானின் அழகில் மயங்கிய மன்னன் அதைப்பிடிக்க வேண்டி துரத்தினான். மானும் மன்னனின் பிடியில் சிக்காமல் லிங்க வடிவில் வீற்றிருக்கும் புதர் அருகில் வந்து மறைந்து கொண்டது. மானை காணாததால் கோபம் கொண்ட மன்னன் வில்லில் அம்பேற்றி புற்றில் செலுத்தினான். அங்கு ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அம்பு செலுத்திய புற்றிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பயந்து போன மன்னன் புதரை விலகி பார்த்த போது, அம்பு புதருக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டு ரத்தம் வடிந்தது.
இறைவனிடம் மண்டி போட்டு, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிக்கும் படி வேண்டினான் மன்னன். இறைவனும் அசரீரியாக தம்மை வெளிப்படுத்தவே இப்படி திருவிளையாடல் புரிந்தோம் என்று கூறினார். இறைவனின் கட்டளைப்படியே மன்னனும அந்த இடத்தில் கற்ப கிரகம் அமைத்து பூஜை செய்து வந்தான். மன்னன் மானைத்துரத்தி வந்ததால் இந்த ஊர் மானூர் ஆனது. லிங்கத்தின் அம்பு பட்ட தழும்பு அபிஷேகத்தின் போது இப்போதும் காணலாம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:லிங்கத்தின் அம்பு பட்ட தழும்பு அபிஷேகத்தின் போது இப்போதும் காணலாம்.
இருப்பிடம் : பழநியிலிருந்து வடக்கு நோக்கி 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதுமானூர்.
இத்தலத்திற்கு பழநியிலிருந்து மானூர் வழியாக அலங்கியம் செல்லும் பஸ்சில் சென்று மானூர் ஸ்டாபில் இறங்கி செல்ல வேண்டும் இத்தல இறைவனை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணிவரை தரிசிக்கலாம்.