பழனி மலை முருகனை போகர் இந்த மலையிலிருந்து தான் உருவாக்கி பிரதிஷ்டை செய்துள்ளார். எனவே இந்த ஐவர்மலையை பழனிக்கு தாய் வீடு என்கிறார்கள்.
ஐவர் மலையில் தாமரை மலர்களுடன் சூரியபுஷ்கரிணியும், அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரிணியும் அமைந்துள்ளன. இதில் சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படி இந்த தீர்த்தங்கள் அமைந்துள்ளன.
ஆடி அமாவாசை தினத்தில் சூரிய சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைகிறது. அந்த சமயத்தில் சூரிய, சந்திரனின் கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாக கூறுகிறார்கள். எனவே ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர்.
இந்த மலைக்கு வந்து வணங்கினால் பஞ்ச பூத தலங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கிறது என்கிறார்கள். எப்படி என்றால் யோக நிலையில் துரியா என்பது மனம். இந்த துரியம் உடலை விட்டு உச்சந்தலை வழியாக வெளியேறுவதே துரியாதிதம் ஆகும். இதன் அடிப்படையில் தான் இங்கு உச்சிப்பிள்ளையார் அமைந்துள்ளார்.
இப்படி உச்சிப்பிள்ளையார் அமைந்துள்ள இடத்தில் மலையிலேயே நீர்-சூரியசந்திர புஷ்கரிணி தீர்த்தம், நிலம்- மலை (மலையே நிலத்தில் தான் அமைந்துள்ளது).நெருப்பு, காற்று-இங்கு ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம் எப்படிப்பட்ட காற்றுக்கும் ஆடாது அணையாது.
ஆகாயம்-மலைக்கு மேல் பரந்து விரிந்த ஆகாயம். இப்படி பஞ்ச பூதங்களும் ஒரு சேர இங்கு சங்கமிப்பதால் ஆடி அமாவாசையில் இங்கு வந்து வழிபட்டால் பஞ்சபூத தலங்களுக்கும் ஒன்றாக சென்று வந்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
சுமார் 150 வருடங்களுக்கு முன் நாராயணசாமி பரதேசி என்பவர் இந்த மலைக்கு வந்து பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியுடன் இங்கு தங்கியதை அறிந்து அந்த பாஞ்சாலிக்கு விக்ரகத்துடன் கூடிய கோயில் ஒன்றை நிறுவுகிறார். இவரது முக்திக்கு பின் சீடர் பத்மநாபா சுவாமிகளும் இங்கே முக்தியடைந்துள்ளார்கள்.
இவர்கள் வழியில் வந்த பெரியசாமி என்பவர் இங்கேயே தங்கி பலருக்கு தியானம் , யோகா, போன்றவற்றை கற்றுத்தந்து பின் இங்கேயே முக்தியடைந்துள்ளார். இதில் பெரியசாமிக்கு இங்கு சிலையும் அவரது சமாதி மேல் கோயிலும் அமைந்துள்ளது. இவர்களின் சீடர் தான் பழனி சாமி சுவாமிகள். இவரும் இவரது சீடர் தாண்டேஸ்வரன் என்பவரும்தான் இப்போது இம்மலையில் யோகா,தியானம் ஆகியவற்றை சொல்லி தருகிறார்கள்.
இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் நவகிரகங்கள் நீள் வட்ட பாதையில் தான் சுற்றுகின்றன என்பதற்கேற்ப இங்குள்ள நவகிரகங்கள் வட்டவடிவில் ஒன்றை ஒன்று பார்க்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது.
|