மார்ச் மாதத்தில், சூரியன் அஸ்தமனமாகும் மாலை வேளையில் இரண்டு நாட்கள் சுவாமியின் மீது, தன் ஒளியைப்பரப்பி பூஜை செய்கிறார். அப்போது ஒளியானது சுவாமியின் பாணம் முழுதும் விழுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில்,
பாரியூர் - 638 476.
ஈரோடு மாவட்டம்.
போன்:
+91- 4285 - 222 010, 222 080.
பொது தகவல்:
இக்கோயில் முழுக்கமுழுக்க பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. நவக்கிரக சன்னதியில் சூரியன் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். பிரகாரத்தில் சிவன், மீனாட்சி இருவரும் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கின்றனர். பைரவர், துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், பஞ்சலிங்கங்கள், அறுபத்துமூவர் ஆகியோரும் உள்ளனர். இக்கோயிலுக்கு அருகிலேயே பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலவிநாயகர்: அனுக்கை விநாயகர்.
பிரார்த்தனை
எதிரிகளால் தொல்லை உள்ளவர்கள் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். இதனால் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை.
இத்தலம் போன்ற சோமாஸ்கந்த தலங்களில் வேண்டிக் கொண்டால் திருமண, புத்திரதோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு அதிகளவில் தோஷ பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. தந்தை, மகன்கள் இங்கு வேண்டிக்கொள்ள அவர்களுக்குள் ஒற்றுமை, அன்பு கூடும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கிறார்கள்
தலபெருமை:
சுவாமியை அதிகாலை வேளையில் தேவர்களும், சூரியனும் வழிபடுவதாக ஐதீகம். எனவே, இக்கோயில் தினமும் சூரிய உதயத்திற்கு பின்புதான் திறக்கப்படுகிறது. சிவன், எப்போதும் தன்னை வணங்குவதை விட, தனது அடியார்களை வணங்குவதையே விரும்புகிறார். இதன் அடிப்படையில் இங்கு வருபவர்கள் முதலில் சூரியனை வழிபட்டுவிட்டு, அதன்பின்பே சுவாமியை வழிபடும் வழக்கம் உள்ளது. சூரிய வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இக்கோயில் அமைந்துள்ளது சிறப்பு. சூரியனை வணங்கி சிவனை வணங்கினால் கிரகதோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சிவனது கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி, தெற்கு பார்த்தபடி கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவருக்கு எதிரில் முருகன் கருவறை கோஷ்டத்தில் உள்ள பாலசுப்பிரமணியர், ஆறு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். முருகன், சிவனுக்கே குருவாக இருந்து "ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தார். முருகனுக்கு தந்தையாக இருந்தாலும், அவரை குரு ஸ்தானத்தில் வைத்த சிவன் பணிவாக மந்திரப்பொருளை கேட்டுக் கொண்டார். இவ்விடத்தில் தந்தை குரு தெட்சிணாமூர்த்தியாக இருப்பதால், அவருக்கு மரியாதை கொடுக்கும்படியாக எதிரே முருகன் நின்றகோலத்தில் இருக்கிறார். சிவன், முருகன் இவ்விருவரையும் இவ்வாறு எதிரெதிரே பார்ப்பது அரிது.
கருவறையில் சிவன் மேற்கு பார்த்தபடி இருக்கிறார். ஆவுடையார் வலதுபுறத்தில் இருக்கிறது. அம்பாள் சவுந்திரவல்லி, சுவாமிக்கு இடது புறத்தில் தனிச்சன்னதியில் நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவ்விருவரின் சன்னதிகளுக்கு நடுவே சண்முகசுப்பிரமணியர் இடது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன், அருளுகிறார். அருகில் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர். இதனை "சோமாஸ்கந்த' அமைப்பு என்பர். சுப்பிரமணியரின் கோஷ்ட சுவரில் கார்த்திகேயன், பாலசுப்பிரமணியர், தண்டாயுதபாணி, குமார சுப்பிரமணியர், பாலமுருகன் என முருகனின் ஐந்து வடிவங்கள் உள்ளன. முருகனின் ஆறு கோலங்களை இங்கு ஒரே இடத்தில் தரிசிப்பது விசேஷம்.
தல வரலாறு:
தேவர்களை தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். தேவர்களால் அசுரர்களை எதிர்க்க முடியவில்லை. எனவே, அவர்கள் சிவனை சரணடைந்து தங்களை அசுரர்களிடம் இருந்து காத்தருளும்படி வேண்டினர். சிவன் தன்னை வேண்டி தவம் செய்யும்படி கூறினார். அதன்படி தேவர்கள் இவ்விடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, சிவனை வேண்டி தவமிருந்து வழிபட்டனர். அவர்களுக்கு காட்சி தந்த சிவன், அசுரர்களை அழித்து தேவர்களை காத்தருளினார். தேவர்களுக்காக அசுரர்களை அழிக்கும் பணியைச் செய்த சிவன் என்பதால், "அமரபணீஸ்வரர்' என்ற பெயரும் பெற்றார். தேவர்களுக்கு அமரர்கள் என்ற பெயரும் உண்டு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மார்ச் மாதத்தில், சூரியன் அஸ்தமனமாகும் மாலை வேளையில் இரண்டு நாட்கள் சுவாமியின் மீது, தன் ஒளியைப்பரப்பி பூஜை செய்கிறார். அப்போது ஒளியானது சுவாமியின் பாணம் முழுதும் விழுகிறது.