|
சுயம்பாக தோன்றிய கல் வடிவ அம்மன் மூலஸ்தானத்தில் உள்ளது. குழந்தைகளுடன் முதன் முதல் பேசிய அம்பாள் என்பதால், குழந்தை வடிவத்தில் அம்மன் சிலை வடித்து, கல்லின் அருகில் பிரதிஷ்டை செய்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன் சிருங்கேரி சாரதா பீடாதிபதி அபிநய வித்யா தீர்த்த சுவாமிகளின் கனவில், இந்த அன்னை தோன்றியதால், அவரும் இங்கு வந்து வழிபட்டார். பின்னர் டவுன் மாரியம்மன் என்ற பெயர் நீங்கி, சாரதா மாரியம்மன் என்றழைக்கப்படுகிறது. சுவாமிகள் அன்னையின் மூலஸ்தானத்தில் அமர்ந்து வழிபடும் போது, நீர் எனக்கு பூஜை செய்யும் போது பயன்படுத்திய இரண்டு தேங்காய்களை அங்கேயே வைத்துவிட்டு செல்லவும், என ஓர் அசரீரி ஒலித்தது. அதன்படி தான் பூஜித்த இரு தேங்காய்களை அன்னையின் பாதத்தில் வைத்து சென்றார். அந்த இரண்டு தேங்காய்களும் 40 ஆண்டுகளாக சிறிது நிறம் கூட மாறாமல் அப்படியே உள்ளது. இந்த தேங்காய்களுக்கு செவ்வாய், வெள்ளிகிழமை மற்றும் அமாவாசை தினங்களில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, வடை, பாயாசம் நைவேத்யம் செய்து பூஜிக்கப்படுகிறது.
திருமண உறுதி: திருமணம் நிச்சயிக்கப் பட்டதும், திருமாங்கல்யம் செய்வதற்குரிய தங்கத்தை அம்பாளின் திருவடியில் வைத்து திருமாங்கல்யம் செய்வதற்கு வழங்குகின்றனர். நிச்சயதார்த்தம் செய்வதற்கு இரு வீட்டாரும் இரு கூடைகளில் உப்பு, வெற்றிலை, பாக்கு வைத்து பூஜித்து, அவற்றை மூன்று முறை மாற்றிக் கொண்டு உறுதி செய்கின்றனர்.
கறந்தபாலில் அபிஷேகம்: திருவிழா காலங்களில், இங்குள்ள வாய்க்காலில் பசுமாட்டையும், கன்றையும் குளிப்பாட்டி, புதிய வஸ்திரங்கள், மாலைகள் அணிவித்து கோமாதா பூஜை செய்கின்றனர். பின்னர் பால் கறந்து அந்தப்பாலை குடத்தில் ஊற்றி, ஊர்வலமாக வருகின்றனர். அதுவே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியத்துக்கும் வெள்ளி, செவ்வாய் ராகு காலத்தில் தீபம் ஏற்றுகின்றனர்.
கணவருக்கு பூஜை: இங்கு நடக்கும் பூச்சாட்டு திருவிழாவின் ஏழாம் நாள் பால்மரம் என்று கூறப்படும் ஆலமரத்தின் இரு கிளை கொண்ட ஒரு பாகத்தை வெட்டி எடுத்து வருகின்றனர். அதில் துளையிட்டு அம்மன் திருவுருவம் செதுக்குகின்றனர். அக்கம்பத்தை அருகில் உள்ள தெப்பக்குளத்திற்கு எடுத்து சென்று புனித நீர் ஊற்றி, பூஜை செய்து மீண்டும் கோயிலில் வந்து நடுகின்றனர். அக்கம்பம் மகாமாரியம்மனின் கணவர் என்று கூறப்படுகிறது. தினமும் காலை, மாலை பெண்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பூசி, மாலையிட்டு சுற்றி வந்து வேண்டுதல் செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் திருமணத்தடை, பிள்ளைப்பேறு வேண்டுவோர்க்கு பலன் கிடைக்கிறது என்பது நம்பிக்கை.
பூவோடு: பூவோடு என்றால் மண் சட்டியில் அக்னி வளர்த்து அதில் வேப்பங்குச்சிகளை போட்டு வெறும் கையினால் பூஜாரி எடுத்து வருவார். அந்த சட்டி சூடு இல்லாமல் பூப்போல் மென்மையாக இருப்பதால் பூவோடு என்று பெயர் வந்தது. பூவோடு பூஜையில் பங்கேற்றால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மறைந்து ஒளிமயமான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் என்பது நம்பிக்கை. இந்த அம்பாளுக்கு சரஸ்வதியின் மற்றொரு பெயரான சாரதா என்ற பெயர் இருப்பதால், குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக இவளை வணங்கி வரலாம். அம்மை குணமாக அம்பாளுக்கு வேப்பிலை வைத்து நீர் ஊற்றி வழிபடலாம்.
|
|