மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில், பாலாறு, நீராறு ஒன்றாக சேரும் ஆற்றங்கரை ஓரத்தில் நீர் காத்த அய்யனார் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார்.
இவருக்கு வலது புறம் பூர்ணா, இடதுபுறம் புஷ்கலா தேவியார் வீற்றிருக்கின்றனர்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல், மாலை மணி 5 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நீர் காத்த அய்யனார் திருக்கோயில்
ராஜபாளையம்.
விருதுநகர் மாவட்டம்.
போன்:
-
பொது தகவல்:
பழங்காலத்திலிருந்தே தமிழக மக்கள் விடாது வணங்கி வரும் வீரத்தெய்வங்களுள் மிகச் சிறப்பு மிக்க காவல் தெய்வமாக கருதப்படுவது அய்யனார் ஆகும். அய்யனார் ஊர் மக்களை தீயசக்திகளிலிருந்து காப்பதற்காக எப்போதும் இரவு நேரங்களில் குதிரை மீது சவாரி போவார் என்று மக்கள் நம்புகிறார்கள். அய்யனார் நாட்டுப்புறத் தெய்வங்களில் மேல்நிலை ஆக்கத் தெய்வமாக மதிக்கப்படுகிறார். இவர் பல ஊர்களில் பல்வேறு பெயர்களில் வழிபடப்படுகிறார். அய்யனாரை ஐயனார் என்றும் எழுத்து மொழியில் எழுதுவோம். ஐ என்றால் தலைமை, அழகு, வியப்பு, அரசன், ஆசான், கடவுள், தந்தை என பல பொருள்படும்.
பிரார்த்தனை
குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளையும், குறைகளையும் போக்கவும் இங்கு வந்து வழிபடலாம்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
தலபெருமை:
ராஜபாளையம் நகரின் நீர் வளத்திற்கும், நில வளத்திற்கும், தொழில் வளத்திற்கும் ஆதார தெய்வமாக நீர் காத்த அய்யனார் விளங்குகிறார். அத்துடன் தன்னை வேண்டி வரும் பக்தர்களின் குறைகளை கேட்டு வரம் வழங்கம் சத்திய முர்த்தியாகவும், இந்நகர் மக்களின் செழுமைக்கும், நீர் உற்பத்தி ஆதாரமாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உற்ற துணையாக காத்த முர்த்தியாக காக்கும் கடவுளாக, அருள்மழை பொழிபவராக அய்யனார் அருள்பாலிக்கிறார். மேலும் இந்தக் கோயிலில் வனலிங்கம், தலைமைசுவாமி, பெருமாள் , லட்சுமி, சின்ன ஓட்டக்காரசாமி, பெரிய ஓட்டக்காரசாமி, வனகாளி, மாடம், மாடத்தி, ரக்காச்சி அம்மன், வனப்பேச்சியம்மன், கருப்பசாமி, தர்மராஜர், சப்தகன்னிமார் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள்.
ஒரு முறை மீனாட்சி கோயில் கொடிமரத்திற்காக சின்ன ஓட்டக்காரன், பெரிய ஓட்டக்காரன் என்ற இருவரும் ராஜபாளையம் வந்தார்கள். இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் அய்யனாரின் கட்டுப்பாட்டில் உள்ள மரங்கள் மீனாட்சியின் கொடி மரத்திற்கு சரியாக இருக்கவே அதனை ஆட்களை கொண்டு வெட்டினார்கள். அப்போது வெட்டிய இடத்திலிருந்து ரத்தம் வடிந்தது. இதனால் சின்ன ஒட்டக்காரன், பெரிய ஒட்டக்காரன் இருவரும் பதறிப் போனார்கள். இந்த விஷயம் அய்யனாருக்கு தெரிந்தது.
கோபமடைந்த அய்யனாரிடம் மதுரை மீனாட்சி கோயில் கொடி மரத்திற்காகத்தான் மரம் வெட்டினோம் எங்களை மன்னித்து விடுங்கள் என்று மன்றாடினார்கள். அய்யனாரும் இவர்களை மன்னித்து நீங்கள் செய்த குற்றத்திற்கு கொடி மரத்தை சேர்த்து விட்டு வந்து எனக்கு காவல் தெய்வங்களாக இருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி விடுகிறார்.
மதுரை மீனாட்சி கோயிலில் கொடிமரம் நட்டு விட்டு கிளம்பியபோது, மீனாட்சி இவர்களை போகவேண்டாம் என்கிறார். இதனால் மீண்டும் கோபம் கொண்ட அய்யனார் மதுரை மக்கள் அனைவருக்கும் உடல்நலமில்லாமல் போக செய்து விடுகிறார். இதனால் மீனாட்சி இவர்கள் இருவரையும் அழைத்து, அய்யனாரின் விருப்பப்படி அவருக்கு காவல் தெய்வங்களாக இருங்கள். வருடம் ஒரு முறை மூன்று மாலைகளுடன் வந்து உங்களை பார்க்கிறேன் என்று கூறி அய்யனாரிடம் அனுப்பி விடுகிறார். இன்றும் கூட அய்யனாருக்கு சின்னஓட்டக்காரன், பெரிய ஓட்டக்காரன் இருவரும் தான் காவல் தெய்வங்களாக இருக்கிறார்கள்.
தல வரலாறு:
வெகு காலத்திற்கு முன்பே தமிழகத்தில் அய்யனார் வழிபாடு இருந்து வந்தாலும், கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் அய்யனாருக்கு கோயில் அமைக்க முதலாம் ராஜராஜ சோழன் ஏற்பாடு செய்திருக்கிறான்.
இதன்பின்னர் தான் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் அய்யனார் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ராஜபாளையம் நீர்காத்த அய்யனார் கோயிலும் அந்த காலக்கட்டத்தில் கட்டப்பட்டது தான்.
பராக்கிரம பாண்டியன் என்பவனது ஆட்சியில் நாட்டின் மேற்குப்பகுதியான இந்த அய்யனார் கோயில் பகுதியை கேரள பந்தள தேச மன்னன் ஆக்கிரமிப்பு செய்தான். அவனை விரட்டியடிக்க பாண்டிய மன்னன், சின்னையா தேவன் என்பவனது தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தான். அந்த வீரர்கள் மதுரையிலிருந்து கிளம்பி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக மேற்கு தொடர்ச்சி மலை சென்று பந்தள மன்னனின் படைகளை விரட்டி அடித்தனர்.
இதன்பின் பாண்டிய மன்னனின் படைவீரர்கள் தங்களது நாடு திரும்ப அய்யனார் கோயில் அருகே உள்ள ஆற்றின் வழியாக வரும்போது, திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த வெள்ளத்தில் சிக்கி கொண்ட பாண்டிய படை வீரர்கள் தங்களை காத்து அருளும்படி அய்யனாரை வேண்டிக் கொண்டனர். அப்போது ஆற்றின் கரையில் இருந்த ஒரு பெரிய மரம் திடீரென கீழே விழுந்து ஆற்றை கடக்க உதவும் பாலம் போல இருந்தது. பாண்டியன் படைவீரர்களும் அந்த ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தின் மேல் நடந்து உயிர் தப்பினர். இவ்வாறு நீரை காத்து பாண்டியன் படையை காத்ததால் இந்த அய்யனார் நீர் காத்த அய்யனார் என அழைக்கப்பட்டார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில், பாலாறு, நீராறு ஒன்றாக சேரும் ஆற்றங்கரை ஓரத்தில் நீர் காத்த அய்யனார் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார்.
இவருக்கு வலது புறம் பூர்ணா, இடதுபுறம் புஷ்கலா தேவியார் வீற்றிருக்கின்றனர்.
இருப்பிடம் : ராஜபாளையம் நகருக்கு எல்லா ஊர்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.
ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து நீர்காத்த அய்யனார் கோயிலுக்கு அரசு பஸ் வசதியும், மினி பஸ் வசதியும் உள்ளது.