பொதுவாக பெருமாள் கோயில்களில் சந்தான கிருஷ்ணன், ஒரு சிறு குழந்தை வடிவில் உற்சவருக்கு அருகில் இருப்பார். ஆனால் இங்கு பாமா, ருக்மணியுடன் மூலஸ்தானத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு மணி 8 வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சந்தான வேணுகோபாலன் திருக்கோயில்,
சர்வசமுத்திர அக்ஹாரம், ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம்.
பிரார்த்தனை
குழந்தைகள் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ இங்குள்ள சந்தான வேணுகோபாலரை வேண்டிச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள வேணுகோபாலருக்கும், தாயார்களுக்கும் திருமஞ்சனம், புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
ஒருகாலத்தில், இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலேயே இருந்தது. அப்படியே குழந்தை பிறந்தாலும், சீக்கிரமே ஏதேனும் நோய் நொடியால் குழந்தை இறந்துபோனதாம். இதில் வருந்திக் கலங்கிய மக்கள், வேணுகோபாலனிடம் எங்கள் குலத்தை தழைக்கச் செய்யுங்கள்; எங்கள் வம்சத்தை வளரச் செய்யுங்கள் என வேண்டினர். இதில் மனமிரங்கிய வேணுகோபாலன், அப்படியே ஆகட்டும் என அருளினார். அதன் பிறகு, குழந்தைகள் பிறந்தன; பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்தன. எனவே, இவருக்கு சந்தான வேணுகோபாலன் எனத் திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றனர்.
தல வரலாறு:
சரசரவென விழுந்துகொண்டிருந்த அருவி நீரில், ஆனந்தமாகக் குளித்தது அந்தத் தவளை. பிறகு, ஈரம் சொட்டச் சொட்டக் கரைக்கு வந்து, அங்கேயிருந்த பாறையில் அமர்ந்து கொண்டது; மெள்ளக் கண்கள் மூடியது. உள்ளே... ஸ்ரீமந் நாராயணனின் திருநாமத்தை உச்சரித்தபடி, அவருடைய திவ்வியமான திருமுகத்தையும் திருவடியையும் நினைத்து தவத்தில் மூழ்கியது. சுதாபனாக இருந்தபோது, இதே அருவியில் குளித்துக்கொண்டே, உன் நினைப்பில் மூழ்கிவிட்டேன். நான் என்ன செய்கிறேன், எங்கே இருக்கிறேன் என்று எதுவுமே நினைவில் இல்லை. இதோ... அருவிகளும் பாறைகளும் சூழ்ந்திருக்கும் இந்தப் பகுதியில், உன்னையே நினைந்து அனுதினமும் தவமும் பூஜையுமாக இருந்து வருவது, உனக்குத் தெரியாதது அல்ல. அப்போது உன் திருவடியில் இடம் கேட்டுத் தவம் செய்து வந்தேன். இப்போது, துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து விமோசனம் வேண்டும் என்று தவமிருக்கிறேன். என்னை ஆட்கொள்வாயா, இறைவா ?! என்று பிரார்த்தனை செய்தது அந்தத் தவளை. அழகிய வனம்; அதைச் சுற்றிலும் பாறைகள்; மலைகள். வனத்தில் பொலபொலவென விழுந்துகொண்டே இருக்கும் அருவி.
ஸ்ரீமந் நாராயணனான உன்னை வழிபடுவதற்கு ஏற்ற இடம் இது என அறிந்து உணர்ந்து, இங்கு ஆஸ்ரமம் அமைத்து அனவரதமும் உன்னையே நினைத்து வந்தேன். வனத்தின் வனப்பு குறித்து துர்வாச முனிவருக்கு எவரோ சொன்னார்களாம்; தேடிக் கண்டுபிடித்து இங்கு வந்துவிட்டார். நீராடிவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி, அவரை ஆஸ்ரமத்தில் அமரச் செய்துவிட்டு, அருவியில் நீராடுவதற்காக வந்துவிட்டேன். நாசியில் துளைத்தெடுத்த செண்பக மலர்களின் வாசனைகளாலும் அருவி நீரில் கலந்திருந்த மூலிகையின் நறுமணத்தாலும் மகிழ்ச்சியில் திளைத்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக, மனத்தை மலரச் செய்யும் உன்னுடைய திருநாமத்தைச் சொல்லத் துவங்கியதும், என்னையே நான் மறந்தேன். என் ஐயனே ! இது குற்றமா? இதோ வருகிறேன் என்று சொல்லிச் சென்ற என்னை வெகு நேரம் காணாததால் கோபமாகிவிட்டார் துர்வாச முனிவர். நான் ஆஸ்ரமத்துக்குச் சென்றதும், அவர் கடும் கோபத்துடன் என்னைப் பார்த்து, தவளைதான் தண்ணீரிலேயே கிடக்கும். நீ மனுஷனா அல்லது தவளையா? நான் உனக்காகக் காத்திருப்பதை மறந்து, தண்ணீரில் ஆட்டம் போட்டுவிட்டு, ஆற அமர வருகிறாய் என்றால், என்னை இளப்பமாக நினைக்கிறாய் என்றுதானே அர்த்தம்? உனக்கு எதற்கு இந்த ஆஸ்ரமம்? நீ தவளையாகவே மாறி, தண்ணீரிலேயே ஆனந்தமாக இரு என்று சாபமிட்டார். சுதாபனாக இருந்த நான், இப்போது மண்டூகமாக (தவளை) மாறிவிட்டேன். அவரிடம் சாபவிமோசனம் கேட்டுக் கெஞ்சினேன். இந்த அருவியில் நீராடி, அனுதினமும் இறைவனை வணங்கித் தவம் செய். ஸ்ரீவேணுகோபாலன் காட்சி தந்தருள்வார் என்று அருளினார்.
ஸ்ரீமந் நாராயணா, ஆவினங்களுக்கெல்லாம் வேணுகானம் பாடி தரிசனம் தந்தவன்தானே நீ ! இதோ... மகரிஷியாக இருந்தவன் மண்டூகமாகிக் கிடக்கிறேன். மண்டூகமாக இருந்தாலும், உனது திருவடியே கதி என்று வேண்டுகிறேன். எனக்கு அருளமாட்டாயா? அடியேனுக்கு தரிசனம் தந்து, விமோசனமும் பரமபதமும் தரமாட்டாயா? என்று மனம் கசிந்து பிரார்த்தனை செய்தது தவளை. அப்போது ஒரு கருடன், மண்டூகத்துக்கு அருகில் வந்து, உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் தருணம் நெருங்கிவிட்டது. சற்று தொலைவில், வேணுகானம் கேட்கிறது. வா, போகலாம் என்று சொல்லிப் பறந்தது. தவளை வேக வேகமாகத் தாவித் தாவி ஓடியது. குறிப்பிட்ட இடத்தை நெருங்கியதும், அந்தக் கருடன் வானில் வட்டமடித்தபடியே இருக்க, அங்கே... செண்பக மலர்களின் நறுமணம் நாசியைத் துளைக்க, செவிகளில் வேணுகானம் முழங்க, ருக்மிணி சத்தியபாமா சமேதராகத் காட்சி தந்தார் வேணுகோபாலன். தவளை அப்படியே நமஸ்கரித்தது. அந்த நிமிடம், சுதாப முனிவராக பழைய உருவத்துக்கு மாறியது இதனிடையே, கருடன் வட்டமிடுவதை அறிந்த தேவர்களும் முனிவர்களும் அங்கு வந்தனர். கிட்டத்தட்ட அந்த இடம் சமுத்திரங்களின் சங்கமம்போல் நிரம்பியதாம் ! இதன் அடிப்படையில் இங்கு கோயில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பொதுவாக பெருமாள் கோயில்களில் சந்தான கிருஷ்ணன், ஒரு சிறு குழந்தை வடிவில் உற்சவருக்கு அருகில் இருப்பார். ஆனால் இங்கு பாமா, ருக்மணியுடன் மூலஸ்தானத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.