*பங்குனி - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் திருவிழா - கொடி ஏற்றம் தீர்த்தவாரியுடன் நடக்கும். விழா நாட்களில் பத்து வாகனங்களில் சுவாமி வீதி உலா
*கார்த்திகை மாதம்- கடைசி ஞாயிறு மிகவும் விசேசம் - இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் சிம்மகுளத்தில் புனித நீராடுவர்.
*ஆடிப்பூரம் , சிவராத்திரி, நவராத்திரி ஆகியவை கோயிலின் மிக விசேசமான நாட்கள் ஆகும்.அந்த நாட்களில் பக்தர்கள் பெருமளவில் கூடுவர்.
*பவுர்ணமி, அன்னாபிசேகம், பிரதோசம், அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, விசாகம், தைபூசம் சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை தீபம் ஆகியவை இத்தலத்தின் சிறப்பான நாட்கள் ஆகும்.
தவிர வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் கோயிலில் சுவாமிக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.
தல சிறப்பு:
சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாய்ந்த மகா லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியகதிர்கள் விழுகின்றன.
இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இது கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ளது.இது ஒரு அதிசய பனைமரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கறுப்பாக இருக்கிறது.மறுவருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக இருக்கிறது.
மூலவருக்கு மேல் ருத்ராட்சப் பந்தல் இருப்பது விசேசம்.
ஸ்ரீ மத் அப்பய்ய தீட்சிதர் பிறந்த இடம் இது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
13ம் நூற்றாண்டுக் கோயில் என்றும் சோழ ராஜாக்களால் நிர்மாணம் செய்யப்பட்டதென்றும் தெரிகிறது.
பிரார்த்தனை
*குழந்தை வரத்துக்கு மிகவும் பெயர் பெற்ற கோயில் இது.
*கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று முதலில் ஆற்றில்(பாலாறு) குளித்து விட்டு பின்பு பிரம்ம தீர்த்தத்திலும் சிம்ம குளத்திலும் சுவாமி வலம் வந்தால் குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கிறது என்பது இத்தலத்தில் வழிபடும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
* திருமணம் வரம் கிடைக்கவும் பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள்.
*இத்தலத்தில் வழிபட்டால் பேய் பிசாசு தொல்லைகள் நீங்குவதால் அந்த பிரார்த்தனைகளுக்காகவும் இத்தலத்துக்கு நிறைய பக்தர்கள் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
*சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.
*உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.
*நெய்தீபம் ஏற்றலாம்.
*சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.
*கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
*கார்த்திகை மாதத்தில் சங்காபிசேகம் நடத்துகிறார்கள்.
*வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.
தலபெருமை:
*மூலவர் சற்று ஈசாணிப்பக்கம் சாய்ந்துள்ளார்.பிரம்மனுக்கு முடி சாய்த்து கொடுத்ததால் அவ்வாறு உள்ளது. *திருவண்ணாமலையில் அடிமுடி காண்பதில் பொய் சொன்ன பிரம்மா இத்தலத்தில் பூஜை செய்து திருமுடி கண்டிருக்கிறார். *பாலகனாகத் தோன்றிய பிரம்மா இத்திருத்தலத்தில் சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார். *விரிஞ்சன் என்று பிரம்மாவுக்கு பெயர். பிரம்மா பூஜை செய்ததால் விரிஞ்சிபுரம் என்று பெயர் வந்தது. *மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியகதிர்கள் விழுகின்றன. *தனபாலன் என்ற வணிகனுக்கு வேடுவராய் சிவபெருமான் வழித்துணை வந்தருளிய தலம்.இதனாலேயே வழித்துணை நாதர் என்ற பெயரும் சுவாமிக்கு உண்டு *திருமூலர்,பட்டினத்தார் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. *மூலவருக்கு மேல் ருத்ராட்சப் பந்தல் இருப்பது விசேசம் *ஸ்ரீ மத் அப்பய்ய தீட்சிதர் பிறந்த இடம் இது. *சிற்பக்கலைக்கு சிறந்த சான்றாகத் திகழும் தலம் இது.
கடைஞாயிறு திருவிழா: திருவண்ணாமலையில் சிவபிரானின் முடி தேடி அன்னமாகப் பறந்த பிரம்மன் தாழம்பூவைக் கொண்டு திருமுடியைக் கண்டதாகப் பொய் சொன்னதும், தண்டனைக்கு ஆளானதும் பலரும் அறிந்த புராணம். அந்தப் பிரம்மன், இந்த விரிஞ்சிபுரப் பெருமானை ஆராதிக்கும் சிவநாதன்-நயினாநந்தினி தம்பதிக்கு மகனாகப் பிறந்தான். மைந்தனுக்கு உபநயனமும், சிவ பூஜைக்கான தீட்சையும் செய்து வைக்கும் முன்பே, தந்தை இறந்துவிட்டார். உரிய பருவம் வந்ததும், அவற்றை தம் மகனுக்குச் செய்விக்கும்படி அன்னை நயினாநந்தி உறவினர்களிடம் கேட்டாள். அவர்கள் அதற்கு மறுத்ததுடன் பூஜா உரிமையையும் சொத்துக்களையும் தமக்கே எழுதித்தரக் கூறினர். வேறு வழியற்ற அவள் பெருமானைச் சரணடைந்தாள்.
அவள் கனவில் தோன்றிய ஈசன், பிரம்ம தீர்த்தக் கரையில் நாளை அதிகாலை உன் மகனை நீராட்டிவை என்று சொன்னார். ஈசன் சொன்னது கார்த்திகை மாத சனிக்கிழமை. மறுநாள் அதிகாலை ஈசன் சொன்னபடியே தன் மகனுடன் காத்திருந்தாள். வயோதிக அந்தணராக வந்த ஈசன், சிறுவனுக்கு பிரும்மோபதேசமும், சிவ தீட்சையும் செய்வித்தார். கரையேறி வந்தவர் மகா லிங்கமாக மறைந்துவிட்டார். ஈசன் கனவில் சொன்னபடியே சிறுவனை யானை மீது திருமஞ்சனக் குடத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர் மன்னர்கள். ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆயலக் கதவு திறந்துகொண்டது.
குடத்துடன் உள்ளே சென்ற சிறுவனோ, மரவு வழுவாமல் முறைப்படி பூஜைகளைச் செய்ய முற்பட்டான். அப்போதுதான், அபிஷேகம் செய்ய தன்னுடைய உயரம் போதாமையால் வருந்தினான். சிறுபாலனின் வருத்தம் அறிந்த பெருமான். பாணத்தைச் சாய்த்து, அந்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். சிருஷ்டிகர்த்தாவாக விளங்கும்போது பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, சிறுவனாக வந்து வருந்தியபோது காட்டி, அந்த அபிஷேகத்தையும் ஏற்றருளிய நாள் கார்த்திகை கடைஞாயிறு. கடைஞாயிறன்று கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு, விசேஷ வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் ஆலயத்தின் திருக்குளத்தில் நீராடி கோயிலில் உறங்குகிறார்கள். அவர்கள் கனவில் பெருமான் காட்சி தந்தால் அடுத்த வருடமே கட்டாயம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தல வரலாறு:
திருவண்ணாமலையில் ஈசனின் முடி காண முடியாமல் ஈசனாரின் திருமுடியில் இருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு ஈசனாரின் முடி கண்டதாக கூறி அதனால் அவதியுற்ற பிரம்மா, தேவரூபத்தில் காட்சி தரக்கூடாது என்று ஈசன் கருதியதால் விரிஞ்சிபுரத்தில் உள்ள இக்கோயில் குருக்கள் மகனாக பிறந்து சிவசர்மன் என்ற பெயரோடு வளர்ந்தான். கொஞ்ச காலத்தில் தந்தையார் மறைந்ததால் சிவசர்மன் சிவபெருமானுக்கு பூஜை செய்ய சிறுவன் தயாரானான்.சுவர்ண கணபதியை ஆராதித்த பின் கையில் திரு மஞ்சன குடத்துடன் பகவானுக்கு அபிசேகம் செய்ய எத்தனிக்கையில் மகாலிங்கம் உயரமாக இருந்ததால் (சிவசர்மன் சிறு பாலகனாக இருந்ததால்) திருமுடி எட்டவில்லை.அது கண்டு எந்தையே எனக்கு எட்டவில்லையே நும்முடி என்று உருகி நிற்க அவனது பக்திக்கு இரங்கி ஈசனார் தம் திருமுடியை வளைத்தார். பெருமான் திருமுடி வளைந்து சிறுவன் முறைப்படி செய்த பூஜைகளை ஏற்றுக்கொண்டார். அதே கோலத்தில் இன்றும் முடி சாய்ந்த மகா லிங்கமாக ஸ்ரீ மார்க்கபந்தீசுவரராக காட்சி அளிக்கிறார் என்று வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாய்ந்த மகா லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியகதிர்கள் விழுகின்றன. இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இது கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ளது.இது ஒரு அதிசய பனைமரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கறுப்பாக இருக்கிறது.மறுவருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக இருக்கிறது.