ஒவ்வொரு வருடமும் நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை உலகம் முழுவதும் உள்ள மக்களின் தேக ஆரோக்கியம் கருதி தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் நடைபெறுகிறது.
தல சிறப்பு:
தன்வந்திரி பகவானுக்கு தனி கோயில் அமைந்திருப்பதே சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில்
தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
கீழ்ப்புதுப்பேட்டை- 632 513,
வாலாஜாபேட்டை,வேலூர் மாவட்டம்.
போன்:
+91- 4172 230033, 94433 30203
பொது தகவல்:
இங்கு சஞ்சீவி ஆஞ்சநேயர், முனீஸ்வரர், மேதா தட்சிணாமூர்த்தி, நவ கன்னிகைகள், அத்ரி பாதம், விநாயகர், மஹிஷாசுரமர்த்தினி, கார்த்தவீர்யார்ஜுனர், சுதர்சன ஆழ்வார், ஒரே கல்லில் அமைந்த ராகு - கேது, வாணி சரஸ்வதி, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், அஷ்ட நாக கருடன், வேதாந்த தேசிகருடன் லட்சுமி ஹயக்ரீவர், ஸ்வர்ண அன்னபூரணி, காயத்ரி தேவி, வள்ளலார், காஞ்சி மகா ஸ்வாமிகள், ஷீர்டி பாபா, மகா அவதார் பாபா, ராகவேந்திரர், லிங்கத் திருமேனியில் எழுந்தருளும் 468 சித்தர்கள், கார்த்திகை குமரன், நவநீதகிருஷ்ணன், மரகதாம்பிகை சமேத மரகத லிங்கேஸ்வரர், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, குழந்தையானந்த மகா ஸ்வாமி, பட்டாபிஷேக ராமர், வாஸ்து பகவான் - இத்துடன் மணம் கமழும் மூலிகை வனம், கவலைகள் போக்கும் காலச் சக்கரம் (27 நட்சத்திரங்களுக்கும், 12 ராசிகளுக்கும், 9 கிரகங்களுக்கும் தனித் தனி விருட்சம் உள்ளது). இருபத்திநான்கு நேரமும் புகைந்து கொண்டிருக்கும் யாக சாலை, சுவாஹா பீடம், பஞ்ச தீபம் (அகண்ட தீபம்), பித்ரு தோஷம் நீக்கும் பாதம், திருவருள் அளிக்கும் குரு பிரார்த்தனை போன்ற சன்னதிகளும் அமையப் பெற்றுள்ளன.
பிரார்த்தனை
பக்தர்கள் உடல் நலம் சம்பந்தப்பட்ட நோய்கள், திருமணத் தடை, குடும்பப் பிரச்சனை, வழக்குகள் போன்றவற்றுக்கு இங்கு பிரார்த்தனைகள் செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள மூலவருக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
வேதங்கள் நான்கு. அவையாவன: ரிக், யஜுர், சாமம், அதர்வணம். இவற்றோடு ஐந்தாம் வேதம் ஒன்றும் உண்டு. அதுதான்-ஆயுர்வேதம். எண்ணற்ற மகரிஷிகள், நம்மிடம் இருக்கும் மருத்துவ முறைகளை ஆராய்ந்து ஏராளமான மருத்துவ நூல்களை எழுதி இருக்கிறார்கள். இதன் தொகுப்பே ஆயுர்வேதம். அதாவது, மூலிகைகளை வைத்தே பல வியாதிகளைக் குணப்படுத்தும் முறைதான் இது. மனிதர்களின் ஆரோக்கியம் சிறந்து விளங்குவதற்கான பல நல்ல பயனுள்ள வழிமுறைகள் இந்த ஆயுர்வேதத்தில் உள்ளன. யுத்த சாஸ்திரத்தை (சஸ்திர சாஸ்திரம்) ரண வைத்தியம் எனவும் அழைப்பதுண்டு. அதாவது, போரில் காயம் பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள காயங்களை ஆற்றுவது சஸ்திர சாஸ்திரம் எனப்படும். தனுஷ் என்றால், யுத்தம், யுத்த சாஸ்திரம், சஸ்திர சாஸ்திரம் என்ற பொருட்களும் உண்டு. இந்த சாஸ்திரத்தை முழுமையாக அறிந்தவர் தன்வந்திரி பகவான். தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு. எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம். பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான். இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக, முதலில் சூரிய பகவானுக்கு உபதேசித்தார் பிரம்மன். சூரிய பகவானும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார். சூரிய பகவானிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது, சூரிய பகவானே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது. தன்வ என்ற பதத்துக்கு ஆகாயம் என்று பொருள். தன்வன் என்றால் ஆகாய லோகத்தில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம். எனவே, இவரையே சூரியன் என்றும் சொல்வார்கள். ஸூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரிய பகவானையே குறிப்பிடுகிறது. தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தை சிருஷ்டித்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரியை வைத்திய ராஜா, ஆதர்ச மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது.
சுமார் ஏழடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்த பகவானின் திருமார்பில் வலப்பக்கம் தங்கத்தால் ஆன லட்சுமிதேவியின் ரூபம் இருக்கிறது. சற்றுக் கீழே கஜலட்சுமி காட்சி தருகிறாள். வலது மேல் கரத்தில் சக்கரம், வலது கீழ்க் கரத்தில் அமிர்த கலசம், இடது மேல் கரத்தில் சங்கு, இடது கீழ்க் கையில் சீந்தல் கொடி. வலது தொடையில் வெள்ளியால் ஆன அட்டைப்பூச்சி. வெள்ளியால் ஆன ஸ்டெதாஸ்கோப்பும் கைக்கடிகாரமும் வைத்து கத்தியும் இடுப்பில் பெல்ட்டுமாக தலைமை அலோபதி வைத்தியராகத் தரிசனம் தருகிறார் இந்த தன்வந்திரி பகவான். இவர் பிரதிஷ்டை ஆகி இருக்கும் பீடத்தில் தன்வந்திரி மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தன்வந்திரி பகவான் சாதாரணமாக பிரதிஷ்டை ஆகவில்லை. மிகவும் கோலாகலமாக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சுமார் இரண்டு லட்சம் கி.மீ. தொலைவு பயணம் செய்து அதன் பின்தான் பிரதிஷ்டை ஆகி உள்ளார். தவிர 46 லட்சம் பக்தர்களால் 13 மொழிகளில் 147 நாட்டு மக்களால் எழுதித் தரப்பட்ட 54 கோடி தன்வந்திரி மந்திரம் இந்த விக்கிரகத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரதிஷ்டைக்கு முன்பே நூற்றுக்கும் மேற்பட்ட தன்வந்திரி ஹோமம் இந்த இடத்தில் செய்யப்பட்டது. தற்போது தினமும் தன்வந்திரி ஹோமம் நடந்து வருகிறது. தீபாவளி தினத்தில் இந்த தன்வந்திரி பகவானுக்கு டாக்டர் கோட் அணிவித்து, டாக்டர் தன்வந்திரி என்று பொறிக்கப்பட்ட பேட்ஜையும் அணிந்து ஸ்பெஷலாகத் தரிசனம் தருவார். தன்வந்திரி ஜயந்தி ஐப்பசி திரயோதசி என்பதால், அன்றைய தினம் திரளான பக்தர்கள் கூடி இருக்கும்போது தன்வந்திரியின் மகா மந்திரங்களைச் சொல்லி, நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம் இவை கலந்து தயாரித்து நிவேதிக்கப்படும் மருந்து தீபாவளியன்று ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. மற்றபடி சாதாரண தினங்களில் சுக்கு, வெல்லம் மட்டுமே பிரசாதம். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை உலகம் முழுதும் உள்ள மக்களின் தேக ஆரோக்கியம் கருதி தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் நடைபெறுகிறது. தன்வந்திரி பகவான் மூலிகைகளோடு சம்பந்தப்பட்டவர் என்பதால், சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் மூலிகைச் செடிகள் பிரமாண்டமாக வளர்க்கப்பட்டுள்ளது. பார்க்கும் இடமெல்லாம் பச்சை மயம். மூலிகை வாசம்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், சித்தி-புத்தி விநாயகர் திருக்கல்யாணம், முருகன் தெய்வானை-வள்ளி திருக்கல்யாணம், சீதா ராமசந்திர மூர்த்தி திருக்கல்யாணம், ஆரோக்கிய லட்சுமி-தன்வந்திரி திருக்கல்யாணம் என ஐந்து உத்ஸவங்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. திருமணமாகியும் புத்திரப் பேறு இல்லாமை மற்றும் குடும்ப நலத்துக்காக இந்த உத்ஸவத்தை ஜானவாஸம் தொடங்கி, மாங்கல்ய தாரணம் வரை விமரிசையாக நடத்த இருக்கிறார்கள் வாலாஜாபேட்டையில் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் எழுந்தருளி இருக்கும் தன்வந்திரி பகவானை தரிசித்து, நோய் இல்லா பெருவாழ்வு வாழ்வோம் !
தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அவதாரம். உலகையே காத்து ரட்சிக்கும் மகாவிஷ்ணு, தன்வந்திரியாக அவதாரம் எடுக்க என்ன காரணம்? அசுரர்களுடன் எப்போதும் போராடி வருபவர்கள் தேவர்கள். அசுரர்களோடு ஏற்பட்ட மோதலில் பல சந்தர்ப்பங்களில் தேவர்கள் பலம் இழந்து போனார்கள். உயிர்ப் பயம் ஏற்பட்டு விட்டது அவர்களுக்கு. எனவே, பிரம்மதேவனிடமும், தங்களின் தலைவனான இந்திரனிடமும் இது குறித்துக் கவலையுடன் முறையிட்டார்கள். இதன் விளைவாக, தேவர்களுக்குப் பூரண வாழ்வை வழங்குவதற்காகத் திருப்பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலில் இருந்து தன்வந்திரி பகவான் அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறும். இவர் தன் திருக்கரத்தில் வைத்திருக்கும் கலசத்தில் இருந்து வழங்கிய அமிர்தத்தை உண்டதனால்தான் தேவர்கள் பூரண ஆயுளைப் பெற்றார்கள். எனவே, தன்வந்திரி பகவானை மருத்துவத் துறையின் பிதாமகர் என்பர். ஆயுர்வேத வைத்தியத்தை ஆராய்ந்து பல சிகிச்சை முறைகளை நமக்கு அருளியவர் தன்வந்திரி பகவான்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தன்வந்திரி பகவானுக்க தனி கோயில் அமைந்திருப்பதே சிறப்பு.
இருப்பிடம் : சென்னையில் இருந்து வேலூர், பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சுமார் 115 கி.மீ. தொலைவில் இருக்கிறது வாலாஜாபேட்டை. அங்கிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் தன்வந்திரி பகவான் ஆரோக்கிய பீடம் அமைந்துள்ளது.