ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையில் சரபேஸ்வரர், விநாயகருக்கு விசேஷ அபிஷேக பூஜை நடக்கும்.
சிவன் கவுதம மகரிஷிக்கு ஒரு பவுர்ணமி நாளில் காட்சி தந்தார். இதன் அடிப்படையில் பவுர்ணமியன்று மாலையில் சிவனுக்கு ஏழு வகையான அபிஷேகமும்,கவுதமருக்கு பாலபிஷேகமும் செய்கிறார்கள்.
தல சிறப்பு:
வேலூர் நகரை சுற்றி க்ஷடாரண்யம் என்னும் ஏழு சிவாலயங்கள் உள்ளன. சிவராத்திரியன்று ஒரே நாளில் இந்த ஏழுதலங்களையும் தரிசிப்பது சிறப்பு. இவற்றில் நோய் நீக்குபவராக அருளும் இந்த சிவனை "வைத்தியர்' என்றழைக்கிறார்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். முன்கூட்டியே அர்ச்சகரை தொடர்பு கொண்டால், வசதிப்படி சிவனைத் தரிசிக்கலாம்.
முகவரி:
அருள்மிகு காரை கவுதமேஸ்வர் திருக்கோயில்,
காரை -
வேலூர் மாவட்டம்.
போன்:
+91- 97901 43219, 99409 48918.
பொது தகவல்:
இது சிறிய கோயில். கோபுரம், கொடிமரம் கிடையாது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர் இருக்கிறார். சுவாமி விமானத்தில் தெட்சிணாமூர்த்தி, கிருஷ்ணரின் சுதை சிற்பங்கள் மட்டும் உள்ளன.
பிரார்த்தனை
கவுதமேஸ்வரர் இங்கு தீராத நோய்களை தீர்த்து வைப்பவராக அருளுகிறார். எனவே இவரை பக்தர்கள், "வைத்தியர்' என்று அழைக்கிறார்கள். தீராத நோய் உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம், வில்வ இலை மாலை அணிவித்து சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட மருந்துப்பொருட்கள் சேர்ந்த கலவையை படைத்து வழிபடுகின்றனர். இந்த மருந்தையே பிரசாதமாக பெற்று சாப்பிடுகிறார்கள்.
சிவசக்தி தரிசனம்: அம்பாள்கிருபாம்பிகை சிவன் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் காட்சி தருகிறாள். ஒரே சமயத்தில் சிவன், அம்பிகை இருவரையும் தரிசிக்கும் வகையில் கோயிலின் அமைப்பு இருக்கிறது. கோயில் முகப்பில் கவுதம மகரிஷி அமர்ந்த நிலையில் உள்ளார்.
சரபேஸ்வரர் சிறப்பு: சரபேஸ்வரர் தனிச்சன்னதியில் உக்கிர மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரைக் குளிர்விப்பதற்காக அருகில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளனர். பைரவருக்கும் சன்னதி இருக்கிறது.
சிவராத்திரி தரிசனம்: உற்சவர் அம்பிகையுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். பிரதோஷ வேளையில் இவரை தரிசிப்பது விசேஷ பலன் தரும். பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலம் காரை மரங்கள் நிறைந்திருந்ததால், "காரைமரைக்காடு' என்றழைக்கப்பட்டது. தற்போது இப்பெயரே "காரை' என்று சுருங்கிவிட்டது.
பக்தர்கள் சிவராத்திரியன்று இத்தலத்தையும், மேலும் இப்பகுதியிலுள்ள மேல் விஷாரம், வேப்பூர், புதுப்பாடி, குடிமல்லூர், வன்னிவேடு, அவரக்கரை ஆகிய தலங்களையும் தரிசிப்பர். இதற்காக இக்கோயில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
தல வரலாறு:
தன் மனைவி மீது ஆசை கொண்ட இந்திரனை கவுதம முனிவர் சபித்து விட்டார். இச்சம்பவம் அவரது மனதை மிகவும் பாதித்தது. மன அமைதிக்காக லிங்க வழிபாடு செய்தார். அபிஷேகம் செய்வதற்காக கங்கையை இவ்விடத்தில் பொங்கச்செய்தார். கவுதமரின் வேண்டுதலுக்காக வந்த இந்நதி, "கவுதமி' என பெயர் பெற்றது. காலப்போக்கில், பாலாற்றில் இந்த நதி ஐக்கியமாகி விட்டது. கவுதமர் பூஜித்த சிவன் இங்கு "கவுதமேஸ்வரர்' என்ற பெயரில் அருளுகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வேலூர் நகரை சுற்றி க்ஷடாரண்யம் என்னும் ஏழு சிவாலயங்கள் உள்ளன. சிவராத்திரியன்று ஒரே நாளில் இந்த ஏழுதலங்களையும் தரிசிப்பது சிறப்பு. இவற்றில் நோய் நீக்குபவராக அருளும் இந்த சிவனை "வைத்தியர்' என்றழைக்கிறார்கள்.
இருப்பிடம் : வேலூரில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள ஆற்காடு சென்று, அங்கிருந்து 5 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். ஆற்காட்டில் இருந்து பஸ் வசதி குறைவு.