சிலர் பாலில் தண்ணீர் கலக்கிறார்கள். சிலர் பால்மாவில் சுண்ணாம்பு பவுடரையே கலக்குகிறார்கள். நெய்யில் டால்டாவைக் கலப்பது, எருமை நெய்யை பசுநெய் என கூறி விற்பது.. இப்படிப்பட்டவர்களெல்லாம் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பலாம். ஆனால், இறைவனின் பார்வையிலிருந்து தப்பமுடியாது. அதிலும் ஈரோடு மாவட்டம் அத்தாணி சந்திரசேகரரிடம் புகார் சொல்லி விட்டால் போதும். மிகப்பெரிய தண்டனை யைக் கொடுப்பார் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
அத்தாணி ஒரு காலத்தில் அடர்ந்த வனங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. சடையப்பர் என்ற விவசாயி மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
ஒருநாள் புலி ஒன்று பசுவை கடுமையாக தாக்கியது. சடையப்பர் புலியுடன் சண்டை போட்டு விரட்டினார். இருப்பினும் காயமடைந்தார். வெகுநேரமாகியும் சடையப்பரும், பசுவும் வராததால் இவர்களைத் தேடி ஊரார் காட்டுக்கு புறப்பட்டனர். பசு அவரை சுமந்து கொண்டு, இப்போது கோயில் இருக்கும் இடத்தின் அருகில் கொண்டு வந்து சேர்த்தது. சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இது கண்ட பசுவும் இறந்தது. ஊரார் மனம் வருந்தினர். பசு இறந்த இடத்தில் ஒரு மேடை கட்டி நந்தியை வைத்தனர். பிறகு அருகிலுள்ள ஓடையில் இருந்து ஒரு மூர்த்தியை எடுத்து வந்து அதை சுயம்பு மூர்த்தியாக பிரதிஷ்டை செய்து மாதேஸ்வரன் கோயில் என்று திருநாமம் சூட்டினர். இந்தக் கோயிலே சடையப்பர் கோயில் என்றும் வழங்கலாயிற்று.
காரணம் என்ன : இப்பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் தவறான வழியில் சென்றனர். இதற்காகவே ஈசன், புலிவடிவில் வந்து சடையப்பரைக் கொன்று மற்றவர்களை ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதற்காக ஈசன் இந்த தண்டனையை அளித்ததாக ஊரார் கருதினர். எனவே, ஈசனை சாந்தப்படுத்த வேண்டும் என்று நினைத்தனர். அதன்படி ஈசனின் அவதாரமாகிய சந்திரசேகர மூர்த்தியை உருவாக்கி, கோயிலில் பிரதிஷ்டை செய்தனர். பிற்காலத்தில் சந்திரசேகர மூர்த்திக்கு இடப்பக்கம் ஆனந்தவல்லி அம்பிகை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சந்திரசேகருக்கு முன்புறம் உள்ள லிங்கத்தை சுற்றி ஐந்து தலையுடைய நாகம் உள்ளது. இவ்வாறு இருப்பதால் இத்தலம் சர்ப்பதோஷ நிவர்த்தி தலமாக உள்ளது. சந்திரசேகர் ஆனந்தவல்லியுடன் காட்சி தருவதால் தடைபட்ட திருமணங்கள் நிறைவேறுகிறது. பிரதோஷம் சிறப்பாக நடக்கிறது. விவசாயத்தில் லாபம், கால்நடை வளர்ப்பவர்களுக்கு மேன்மையை சந்திரசேகரர் தருகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இருப்பிடம் : பவானியில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்திலும், கோபியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும், ஈரோட்டிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திலும் இக்கோயில் அமைந்துள்ளது. இம்மூன்று நகரங்களில் இருந்தும் அடிக்கடி பஸ் உள்ளது