ஆடிப்பூரம், புரட்டாசி சனிக்கிழமைகளில் சுவாமி புறப்பாடு
தல சிறப்பு:
மூலவர் அழகிய சாந்த மணவாளப்பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தி கிழக்கு நோக்கியுள்ளார். ஒரு கை அபய ஹஸ்தமாகவும், மற்றொரு கை கதாயுதத்தை பிடித்தநிலையிலும் இருப்பது சிறப்பு. இங்கு இரண்டு கருடாழ்வார்கள் உள்ளனர். ஒருவர் பெருமாளை சுமந்து புறப்பட தயார் நிலையில் நின்ற கோலத்திலும், மற்றொருவர் பெருமாளை வணங்கிய நிலையில் அமர்ந்த கோலத்திலும் இருப்பது மற்றொரு சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அழகிய சாந்த மணவாளப் பெருமாள் திருக்கோயில், அர்ஜுனாபுரம்,
வத்திராயிருப்பு-626 132,
விருதுநகர் மாவட்டம்
பொது தகவல்:
கோயிலின் உள்ளே அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஏகாதசி மண்டபம், கொடிமரம் ஆகியவை உள்ளன. பத்மாவதி தாயார் அர்த்தமண்டபத்தில் வீற்றிருக்கிறார். விஷ்வக்சேனர், ஆழ்வார்கள், ராமானுஜர், சக்கரத்தாழ்வாருக்கும் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
தங்களது இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் தங்குதடையின்றி நடைபெற இங்குள்ள பெருமாளை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பாண்டியரின் திருப்பணிகள்: 14ம் நூற்றாண்டில் தென்காசியைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த, வீரபாண்டிய மன்னன், இக்கோயிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தியதாக கல்வெட்டில் செய்தி இடம்பெற்றுள்ளது. அதன்பின் வீரபாண்டியன், பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியன் ஆகியோரும் திருப்பணி செய்துள்ளனர். உச்சிக்கால நைவேத்யம் மற்றும் திருவிழாக்களுக்காக பராக்கிரம பாண்டியன் தானமாக நிலங்கள் வழங்கியதையும் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.
இறங்காக்கிணறு: வெளிப்பிரகாரத்தில் நக்கன் மற்றும் சொக்கன் வில்லி என்பவர்களால் வெட்டப்பட்ட கிணறு உள்ளது. இதற்குள் இறங்கினால் உயிர் போகும் என்பதால் ""இறங்காக்கிணறு'' என்று பெயர் உண்டானது. இக்கிணற்றின் அருகில் புளியமரம் ஒன்று இருந்துள்ளது. இம்மரத்திற்கு ""உறங்காப்புளி'' என்று பெயர். இம்மரத்தின் இலைகள் சூரியன் மறைந்த பின்னும் மூடாமல் இருந்ததாக கூறுகின்றனர். இப்போது அந்த மரம் இல்லை.
குலதெய்வம்: நூறு ஆண்டுகளுக்கு முன் வரை இப்பெருமாள் கோயிலில் வழிபாடு நடந்து வந்துள்ளது. கோயிலைச் சுற்றி மக்கள் குடியிருந்து வந்துள்ளனர். அர்ஜுனா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் தற்போதைய வத்திராயிருப்பு பகுதிக்கு குடிவந்துவிட்டனர். மணவாளப் பெருமாள் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருந்து வந்துள்ளார். கோயிலின் உற்சவமூர்த்திகள் இங்குள்ள சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உற்சவர் மணவாளப் பெருமாள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருவீதியுலா வருகிறார்.
தல வரலாறு:
வத்திராயிருப்பு பகுதியை புராணகாலத்தில் தர்மாரண்ய சேத்திரம் என்று அழைத்தனர்.இங்குள்ள மலைப்பகுதி "தர்மாத்ரி' என்று குறிக்கப்படுகிறது. அர்ஜுனன் தீர்த்தயாத்திரை செய்தபோது, இப்பகுதிமக்கள் வறட்சியால் நீரின்றி தவித்ததைக் கண்டு வருந்தினார். உடனே, தன் வில்லை எடுத்து பூமியை நோக்கி அம்பு தொடுத்தார்.அந்த இடத்தில் அழகிய பொய்கை உருவானது. அப்பொய்கை அர்ஜுன பொய்கை என்றும், அங்கிருந்து உற்பத்தியான நதி ""அர்ஜுனாநதி'' என்றும் பெயர் பெற்றது. ரிஷிகளிடம் ஸ்ரீதேவியான லட்சுமி தாயார், ""பூலோகத்தில் தவம் செய்வதற்கு சிறந்த இடம் எது?'' என்று கேட்டாள். அவர்கள் இத்தலத்தைப் பற்றி சொன்னதும், அங்கு வந்தாள்.இடத்தைப் பார்த்தவுடனேயே அவள் முகம் மலர்ந்தது. "லட்சுமி முகம் மலர்ந்த இடம்' என்பதால் ""ஸ்ரீவக்தரம்''
(திருமகள் திருமுகம்) என்னும் பொருளில் இத்தலம் அழைக்கப்பட்டுவந்தது. பின்னாளில் ""ஸ்ரீ வக்த்ரபுரம்'' என்றாகி வத்திராயிருப்பு என்று மருவியதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீதேவி தாயார் இவ்வூரில் தவம் செய்து, திருத்தங்கல் என்னும் திருத்தலத்தில் மகாவிஷ்ணுவை திருமணம் செய்ததாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவர் அழகிய சாந்த மணவாளப்பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தி கிழக்கு நோக்கியுள்ளார். ஒரு கை அபய ஹஸ்தமாகவும், மற்றொரு கை கதாயுதத்தை பிடித்தநிலையிலும் இருப்பது சிறப்பு. இங்கு இரண்டு கருடாழ்வார்கள் உள்ளனர். ஒருவர் பெருமாளை சுமந்து புறப்பட தயார் நிலையில் நின்ற கோலத்திலும், மற்றொருவர் பெருமாளை வணங்கிய நிலையில் அமர்ந்த கோலத்திலும் இருப்பது மற்றொரு சிறப்பு.