மூலவர் முருகன், திருவாச்சி மற்றும் மயில் சிலைகள் ஒரே கல்லில் ஆனவை என்பது சிறப்பாகும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி 10 முதல் மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.
பொது தகவல்:
முருகன் சன்னதிக்குத் தென்புறம் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன. இச் சன்னதிகளுக்கு முன்பு இருபத்து நான்கு தூண்களைக் கொண்ட திருமண மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் உள்ள நுணுக்கமான அழகிய சிற்ப வேலைப்பாடுகள் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாய் அமைந்துள்ளது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், லிங்கத்தின் மீது பால் சொரியும் பசு, கண்ணப்ப நாயனார், பார்வதி கல்யாணம், மார்கண்டேயன், முருகன், விநாயகர் மற்றும் தசாவதார சிற்பங்கள், ஈசன் சன்னதி முன்புள்ள தூண்களில் துல்லியமாக வடிக்கப்பட்டுள்ளன. அம்மன் சன்னதி முன்பு உள்ள தூண்களில் சரஸ்வதி, லட்சுமி, காமாட்சியம்மன், காளி, மாரியம்மன், அர்த்தநாரீஸ்வரர், கோவர்த்தனகிரிதாரி, ராமர், சீதை, அனுமன், காளிங்க நர்த்தன கண்ணன் சிற்பங்களை வடித்துள்ளனர்.
பிரார்த்தனை
துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை நடத்தினால் தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கோயில் கிழக்கு நோக்கி ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது. சிவன் சன்னதி முன்பு ராஜ கோபுரமும், முருகன் கோயில் முன்பு சிறிய முகப்பும் உள்ளன. கருவறையில் முருகப் பெருமான் வள்ளி தேவசேனா சமேதராய் அருள்பாலிக்கின்றார். முருகன் மயில் மீது ஒரு முகத்துடன் நான்கு கரங்களுடன் உள்ளார். சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் பின் கைகளில் சக்தி ஆயுதமும், வச்சிரமும் இருக்க, முன் கைகளில் அபய வரத முத்திரை காட்டி காட்சி தருகிறார். மயிலின் தலைப்பகுதி இடப்புறமாக இருப்பதால் இது தேவ மயில் எனப்படும். திருவாச்சி, மயில் மற்றும் முருகன் சிலைகள் ஒரே கல்லில் ஆனவை என்பது சிறப்பாகும். தேவியர் இருவர் கரங்களில் ஒரு கரத்தில் மலர் தாங்கி மற்றொரு கரம் கை கத்ய வலம்பித முத்திரை காட்டிட உள்ளனர். கருவறையின் கல்நிலவுப் பகுதியில் எதிரெதிரே இரண்டு புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவை இக்கோயிலைக் கட்டிய சுந்தரபாண்டிய மன்னனும் அவரது மனைவியும் எனக் கூறப்படுகிறது. மகா மண்டபத்தில் நடராஜர் சிவகாமி அம்மையின் ஐம்பொன்சிலைகள் காட்சியளிக்கின்றன.
ராமர் சீதை திருவுருவங்களுக்கு வைகுண்ட ஏகாதசி மற்றும் ராம நவமியன்று தங்கக் கவசம் சாத்தி, சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிற்பக் கலை நயத்தையும், கலை நுட்பத்தையும் பிரதிபலிக்கின்ற அம்சங்கள் இம் மண்டபத்தில் நிறைய இடங்களில் காணப்படுகின்றன. கோயிலுக்கு எதிரே உள்ள மேல் விதானத்தில் தாமரை மலருடன் கூடிய பன்னிரண்டு ராசி சிற்பங்களைக் காணலாம். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யாழியின் சிற்பம் அழகு வாய்ந்தது. இதன் வாயில் தொங்கும் மூன்று வளையங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. சிவ சன்னதியின் சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர், விநாயகப் பெருமான், பைரவர் சன்னதிகளும் உள்ளன. பொள்ளாச்சி முருகன் மும்மணிக் கோவை, கந்தன் பிள்ளைத் தமிழ், பொள்ளாச்சி சுப்பிரமணியர் இரட்டை மணிமாலை ஆகிய நூல்கள் இம்முருகன் புகழ்பாடும் பாடல்களைக் கொண்டவையாகும்.
தல வரலாறு:
விவசாய வளம் கொழிக்கும் செழிப்பான ஊர் பொள்ளாச்சி. இவ்வூரின் பெயர்க் காரணங்களை இரண்டுவிதமாகக் கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ள வாரச் சந்தைகளில் பொள்ளாச்சி வாரச்சந்தை பெயர் பெற்ற சந்தையாகும். சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டும் அல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் வருவர். அப்படிப் பொருட்களின் புழக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொருள் ஆட்சி என்ற பெயர் ஏற்பட்டு அது நாளடைவில் மருவி பொள்ளாச்சி என வழங்கலாயிற்று. இவ்வூரில் மரம், செடி, கொடிகள் செழித்து வளர்ந்து சோலைகளாக பரிமளித்தது. சோலைகள் பொழில்கள் என வழங்கப்பட்டன. சிற்றூர்களை வாய்ச்சி என அழைப்பர். பொழில்களுக்கு இடையில் அமைந்த வாய்ச்சி பொழில்வாய்ச்சி என வழங்கப்பட்டு நாளடைவில் இப்பெயர் மருவி பொள்ளாச்சி என வழங்கலாயிற்று என்றும் கூறுவர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் கொங்கு சுந்தர பாண்டியன், கொங்கு திரிபுவன் சக்ரவர்த்தி விக்ரமசோழன் ஆகிய அரசர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதை கல்வெட்டு குறிப்புகள் மூலம் அறியலாம். தெற்குச் சுவரில் கொச்சி அரச பரம் பரையைச் சார்ந்த மன்னர் பெரும் படப்பு சொரூபத்தின் ஆறாம் ஆண்டு ஆட்சி கல்வெட்டு ஒன்றுள்ளது. இதில் இக்கோயிலின் பெயர் திருவகத்தீஸ்வர முடையார் கோயில் எனக் காணப்படுகிறது. எனவே இத்தலம் சிவத்தலமாக இருந்திருக்ககூடும் என்ற குறிப்பு உள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவர் முருகன், திருவாச்சி மற்றும் மயில் சிலைகள் ஒரே கல்லில் ஆனவை என்பது சிறப்பாகும்.