சதுரவடிவ கருவறையில் தேவி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பதும், தேவியின் விக்ரகம், கடுகு சர்க்கரையுடன் இன்னும் ஒரு விசேஷக் கலவை சேர்த்து செய்யப்பட்டிருப்பதும் தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை மணி 5 முதல் மணி 9.30 வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பனமோடு தேவி திருக்கோயில்,
ராஜீவ் காந்தி சந்து, வள்ளக்கடவு,
திருவனந்தபுரம்,
கேரளா.
பொது தகவல்:
கருவறையின் அருகில் ஒரு பனைமரமும் ஒரு சூலமும் காணப்படுகிறது. பனைமரத்தின் அடிப்பாகத்தருகே ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்திருக்கிறார்கள். கருவறையின் பின்னால் பழமையான வெள்ளை மகிழம்பூ மரம் உண்டு. அரசமர மேடையில் நாகர்கள் வீற்றிருக்கிறார்கள். ஆயில்ய பூஜை விசேஷமாக நடத்தப்படுகிறது. கணபதி, முருகன், மாடனுக்கு தனித்தனி மண்டபங்கள் உள்ளன. இந்தக் கோயில் வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் மட்டும் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. அது தவிர மலையாள மாசத்தின் முதல் தேதியன்றும், விஜயதசமியன்றும் கோயில் திறந்திருக்கும்.
பிரார்த்தனை
திருஷ்டிதோஷம், ராகுதோஷம் மற்றும் நோய் நொடிகள் அகல பனமோடு தேவியை தரிசனம் தரிசியுங்கள்.
நேர்த்திக்கடன்:
ராகுதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அகல் விளக்கேற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
அழகான சூழ்நிலையில் கோயில் அமைந்துள்ளது, கோயிலின் நுழைவாசல் அருகே கம்பவிளக்கு காணப்படுகிறது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் ஒரு மண்டபம் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து சதுர வடிவமான கருவறை. கருவறையின் முன்பக்க சுவரின் இரு பக்கமும் துவாரபாலகிகள் புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றன. அதற்கு முன்பு உள்ள இடத்தில் தீபாராதனை சமயத்தில் ஏராளமான அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. கருவறையில் தேவி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். தேவியின் விக்ரகம், கடுகு சர்க்கரையுடன் இன்னும் ஒரு விசேஷக் கலவை சேர்த்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சாதாரணமாக கடுக சர்க்கரையால் செய்யப்பட்ட விக்கிரகத்திற்கு அபிஷேகம் கிடையாது. இந்த விக்கிரகத்தில் இன்னொரு கலவையும் சேர்ந்திப்பதால் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள். இங்கு குழந்தைகளுக்கு ஏற்படும் திருஷ்டி தோஷம் விலக விசேஷ பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.
அதுபோல் ராகுதோஷம் விலக செவ்வாய்க்கிழமைகளில் அங்கு நடத்தப்படும் சடங்கு மிகவும் வித்தியாசமனது. கடல்நீரை ஒரு கலசத்தில் கொண்டு வைத்து, அதன் நடுவே ஒரு வாழைப்பூவைப் பொருத்தி வைத்து அதில் 27 சிறிய தீப்பந்தங்களைச் செருகி வைக்கிறார்கள். 27 தீப்பந்தங்கள் 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது என்கிறார்கள். பிறகு அந்தக் கலசத்தை எடுத்துக்கொண்டு கோயிலை மூன்று முறை சுற்றி வந்து கலசத்தில் உள்ள நீரை பிரசாதமாகத் தருகிறார்கள். அந்த நீரை பாத்திரங்களில் வாங்கி கொண்டு வீட்டிற்குச் சென்று குளிக்கும் நீருடன் சேர்த்துக் குளித்தால் சருமநோய்கள் தீரும் என்றும் ராகுதோஷம் நீங்கும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கை!
தல வரலாறு:
நூற்றாண்டுகள் பழமை கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, திருவனந்தபுரத்தில் வள்ளக்கடவு என்ற இடத்திலுள்ள பனமேடு தேவி ஆலயம். வள்ளம் என்பது படகு. கடவு என்பது படித்துறை ஒரு காலத்தில் படகுகள் தங்கி இருந்ததால் அந்த இடம் வள்ளக்கடவு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் உருவாவதற்குக் காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. இந்தப் பிரதேசத்தில் ஒரு காலகட்டத்தில் கடுமையான நோய்கள் பெருகி மக்களை வாட்டிக் கொண்டிருந்ததாம். அதைப் பார்த்து மனம் நொந்த ஒரு மூதாட்டி, அங்கிருந்த கால்வாயின் கரையில் நின்று கொண்டு அது வழியாகச் சென்று கொண்டிருந்த திருவல்லம் ஆலயதலைமை அர்ச்சகரைப் பார்த்து, பனமோடு ஆலயத்திற்கு வந்து, பூஜை செய்யும்படி கேட்டுக்கொண்டாராம். அவரோ, தனக்கு நேரம் இல்லையென்றும், வேறு யாரையாவது ஏற்பாடு செய்யும்படியும் கூறியுள்ளார். அச்சமயம் ஒரு ஒளி தோன்றி, அந்த மூதாட்டியின் உருவம் திடீரென மறைய, அப்போதுதான், அந்த மூதாட்டியின் உருவில் வந்தது பனமேடு தேவி என்பதை உணர்ந்து தேவியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் பூசாரி. அதோடு திருவல்லம் பரசுராம சேத்திரத்தில் பூஜையை முடித்துவிட்டு திரும்பி வரும்போது, பனமோடு தேவி ஆலயத்திற்கு பூஜை செய்யும் வருவதாகவும் கூறினார்.
திருவல்லம் கோயில் பூஜையை முடித்துவிட்டு திரும்பி வரும்போது, கால்வாய்க் கரையில் காத்திருந்த மூதாட்டி, தனியாக இரு இடத்தில் காணப்பட்ட ஒற்றைப் பனைமரத்தையும் அதன் அருகில் காணப்பட்ட சிறிய கோயிலையும் காண்பித்து, அந்த தேவிக்குத்தான் பூஜை செய்ய வேண்டும் என்றும்; அங்கு வாழும் மக்களின் நோய்கள் விலக, தகுந்த பரிகாரங்கள் கூற வேண்டும் என்றும் அவரிடம் கூறி மீண்டும் மறைந்துவிட்டார். அன்று முதல், பனமோடு கோயில் இருந்த இடத்திலேயே தங்கி, தேவிக்கு பூஜை செய்து வந்தார். அந்த பூசாரி. கோயிலுக்கு வரும் பக்தர்களின் நோய்களையும் அவர்களின் மனக்குறைகளையும் தகுந்த பரிகாரங்கள் கூறி, தீர்த்தும் வைத்தார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சதுரவடிவ கருவறையில் தேவி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பதும், தேவியின் விக்ரகம், கடுகு சர்க்கரையுடன் இன்னும் ஒரு விசேஷக் கலவை சேர்த்து செய்யப்பட்டிருப்பதும் தலத்தின் சிறப்பு.