காவல் வீரர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கணபதி என்பது தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 10.45 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மிலிட்டரி கணபதி திருக்கோயில்
கிழக்கு கோட்டை, திருவனந்தபுரம், கேரளா.
பொது தகவல்:
கோயில் வளாகத்தில் துர்க்கை, ஐயப்பன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
நினைத்த காரியம் நிறைவேற இங்குள்ள கணபதியை வேண்டிச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் மூடை மூடையாக தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கி.பி. 1795 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர் பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. மகாராஜா ராமவர்மா, பத்மநாபபுரத்தில் இருந்து படை வீரர்களில் பெரும்பாலானவர்களை திருவனந்தபுரத்துக்கு அனுப்பினார். அப்போது காவல் வீரர்கள் அந்த கணபதி சிலையையும் உடன் எடுத்துச் சென்றனர். அந்தச் சிலை முதலில் பழைய ஸ்ரீகண்டேஸ்வரம் கோயிலில் ஒரு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிறகு, கிழக்குக் கோட்டையில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்தால் நாங்கள் வழிபட வசதியாக இருக்கும் என்று காவல் வீரர்களும், தளபதிகளும் மன்னரிடம் வேண்டினர். அதை ஏற்றுக் கொண்டு 1860-ஆம் ஆண்டு, ஆயில்யம் திருநாள் அன்று மகாராஜா தற்போதைய கோயிலைக் கட்டினார். இங்கு அதே கணபதி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயில் திறந்திருக்கும் நேரத்தில் இடைவிடாமல் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 25000 தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. இப்படி உடைக்கப்படும் தேங்காய்கள் ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுத்தவர் பக்தர்களின் எண்ணற்ற தேங்காய்களை வாங்கி உடைப்பதும், சிதறு தேங்காயையும் அவரே எடுத்துக் கொள்ளலாம். இங்கு ஏலம் எடுக்கக் கடும் போட்டி நிலவுகிறது.
தல வரலாறு:
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் மன்னர் ஆட்சிக் காலத்தில் பத்மநாபபுரம் கோட்டையின் நாற்புறமும் காவலர்கள் பணிபுரிவார்கள். இந்தக் கோட்டைக்கு அருகில் ஒரு யக்ஷி (மோகினி) கோயில் இருந்தது. இந்த அம்மன் மகா கோபக்காரி. நெஞ்சுரம் உள்ள காவலர்கள் மட்டுமே இந்தப் பகுதியில் காவலுக்கு நிற்க முடியும். தவிர்க்க முடியாமல், இங்கு காவல் புரிவோர் மறுநாள் காலையில் நினைவிழந்த நிலையில் மயங்கிக் கிடப்பது வாடிக்கை. நெடிதுயர்ந்த மலை.. அடர்ந்த வனப் பகுதி.. சலசலக்கும் புளிய மரக் காடுகள் நிறைந்த இந்தப் பகுதியில், அந்த அளவுக்கு மோகினியின் தொந்தரவு அதிகமாக இருந்தது. தங்கள் விதியை நொந்தபடி இங்கு காவல் காத்து வந்தனர் வீரர்கள். இந்நிலையில் ஒரு புதிய ஆசாமிக்கு அங்கு காவல் பணி தரப்பட்டது. அளவு கடந்த பக்தி கொண்ட அவர், பிள்ளையார் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பணிக்குத் தயாரானார். வள்ளியூர் ஆற்றில் ஆசை தீரக் குளித்தார். கரையேறும் வேளையில் காலில் ஏதோ தட்டுப்பட்டது. நீரில் மூழ்கி, அதை எடுத்துப் பார்த்தார். ஆச்சரியம்... அது அரையடி உயரமுள்ள சிறிய கணபதி விக்கிரகம். பக்தியுடன் அந்தச் சிலையை தன்னிடம் இருந்த ஒரு துணிப்பையில் போட்டுக் கொண்டார்.
இரவு நேரத்தில் காவல் இருந்த அவருக்குத் தொல்லை கொடுக்க முயன்றாள் யக்ஷி. ஆனால், முடியவில்லை. விநாயகப் பெருமாள், யக்ஷியை நெருங்க விடாமல் தடுத்தார். விடிந்தது ! வழக்கம் போல் இவரும் மயங்கி விழுந்திருப்பார் என்ற எண்ணத்துடன் அங்கு தொடர்ந்து காவல் புரிய வந்த மற்ற காவலர்கள் திகைத்தனர். நீ எப்படி மயக்கம் அடையாமல் இருக்கிறாய் ? என்று ஆச்சரியத்துடன் கேட்டனர். அவர், மடியில் இருந்த பிள்ளையார் தன்னைக் காப்பாற்றியதாகச் சொன்னார். காவல் வீரர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். எனவே, கோட்டையின் ஒரு பகுதியில் கோயில் கட்டி, அதில் அந்த பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர் காவல் வீரர்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:காவல் வீரர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கணபதி என்பது தலத்தின் சிறப்பு.