|
ஜலதாரை வழிபாடு: சுவாமியின் மேல் தாரா பாத்திரம் கட்டப்பட்டு உள்ளது. இதில் தீர்த்தம், பால் அல்லது நெய் நிரப்பப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருள் சொட்டு சொட்டாக சுவாமி மீது விழுகிறது, இந்த அபிஷேகத்தால் தங்கள் மனக்குறை தீரும் என பக்தர்கள் நம்புகின்றனர். திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வியில் மேம்படுவதற்கும், 108 கலசம் தீர்த்தம் அபிஷேகம் செய்கின்றனர்.
அம்மன் இல்லாத கோயில்: இந்தக் கோயிலில் அம்மன் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இவ்வாறான கோயில்களில் இருக்கும் சிவனை ஆதிசிவன் என்பர். சாக்தம் எனப்படும் அம்பாள் வழிபாடு துவங்குவதற்கு முன்பே, இங்குள்ள சிவன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். கர்ப்பகிரகத்தை சுற்றி வரும் பழக்கமும் இல்லை. ஏனெனில், சுவாமியின் ஜடாமுடி பின்பக்க பிரகாரத்தில் பரந்து விரிந்துகிடக்கும் என்பதும், அதை மிதிக்கக்கூடாது என்பதும் ஐதீகம். சாஸ்தா, விநாயகர், நாகர் சந்நிதிகள் உள்ளன.
நகரும் நந்தி: இந்த கோயிலில் உள்ள நந்தி சுவாமிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருந்தார். இது மெல்ல மெல்ல நகர்ந்து திசை மாறி சென்று கொண்டிருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். கருவறையை ஒட்டிய மேடைக்கும், நந்திக்கும் இடையே ஒரு காலத்தில் பெரிய இடைவெளி இருந்துள்ளது. தற்போது, மேடையை நோக்கி நகர்ந்து நெருக்கமாக வந்துவிட்டது. இன்னும் சிறிது நாட்களில் நந்தி மேடையோடு முட்டிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார் கோயில் அர்ச்சகர்.
நந்திக்கு மணிச்சரம்: கால்நடைகளுக்கு நோய் வந்தால் இங்குள்ள நந்திக்கு மணிச்சரம் கட்டி, பயறு மற்றும் காய்கறி, பழங்கள் இவற்றால் நைவேத்தியம் செய்கின்றனர். இவ்வாறு செய்தால் நோய் குணம் அடைவதுடன், விவசாயம் செழிப்படைவதாக நம்பிக்கையுள்ளது. இப்பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் நந்தியை அடித்து விளையாடியுள்ளான். அன்று இரவு நந்தி கனவில் வந்து சிறுவனைப் பயமுறுத்தியது. பயந்து போன அவனுக்கு விடாமல் காய்ச்சல் அடித்தது. தேவபிரஸ்னம் பார்த்ததில் சிறுவன் நந்தியை துன்புறுத்தியது தெரியவந்தது. பரிகாரமாக, அதன் கழுத்தில் மணிச்சரம் கட்டியதும், காய்ச்சல் குணமாகி விட்டது. சிறுவனைத் தண்டிக்க வேண்டுமென்பது நந்தியின் நோக்கமல்ல. நான் உயிரோட்டமாக உள்ளேன் என்பதை நிரூபிக்கவே, நந்தி இவ்வாறு செய்தார்.
|
|