ஐந்துநிலை ராஜகோபுரம் ஏழு கலசங்களுடன் உயர்ந்து காணப்படுகிறது. அதன் வழியாகச் சென்று கொடி மரம் கடந்தால், முதலில் வருவது வாத்திய மண்டபம், அடுத்து சிறியதும் பெரியதுமாக இரண்டு பலிபீடங்கள் உள்ளன. வெளி பிராகாரத்தில் தென் மேற்குப் பக்கம் கிழக்கு நோக்கிய சன்னதியில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானை வணங்கிவிட்டு, அடுத்து சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, ஹயக்ரீவர், விஷ்வக்சேனரை தரிசிக்கிறோம்.
ஆலயத்தின் பின்புறம் கமலவல்லித் தாயார் சன்னதி அமைந்துள்ளது. நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ள தாயாரை வழிபட்ட பிறகு அருகிலேயே ஆண்டாள் திருக்கல்யாண மண்டபத்தை அடையலாம். இங்கு சொற்பொழிவுகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
கிழக்குப் பிராகாரத்தில் நான்கு சிற்பத் தூண்களோடு கூடிய ஒரு மண்டபத்தில் பெரிய திருவடிகளை வணங்கலாம். வாத்திய மண்டபத்தின் வட மேற்கில் தெற்கு நோக்கி காட்சி தரும் ஆண்டாளை வணங்கிவிட்டு கருவறை செல்கிறோம். அனந்த சயனனின் திருமுடியின் அருகில் ஸ்ரீதேவியும் திருவடியின் அருகில் பூதேவியும் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். அருகில் துவார பாலகர்களான ஜய விஜயர்களும், அபயம் அளிக்கும் நிலையில் உள்ள அவரது இடது கையில் பிரம்மாவும் எழுந்தருளியுள்ளனர். வலக்கையில் கதாயுதம் உள்ளது. அதன் அருகில் அரங்கநாதரை பிரதிஷ்டை செய்த துர்வாச முனிவர் காட்சி தருகிறார். உள் திருச்சுற்றில் பதினாறு தூண்களைக் கொண்ட மண்டபத்தைக் காணலாம், அதில் அழகிய தெய்வீகச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வாத்திய மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் வேணுகோபாலர் சன்னதி உள்ளது. கருட மண்டபம் இருபத்து நான்கு அழகிய சிற்பத்தூண்களைக் கொண்டது. கருட மண்டபத்தின் பின்புறம் நர்த்தனக் கண்ணன், அனுமன் திருவுருவம் உள்ளது. மகா மண்டபத்தில் ஜய, விஜயர் என்ற இரு துவார பாலகர்கள் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் இரண்டு பெரிய தூண்கள் உள்ளன. கிழக்குத் தூணில், தவழ்ந்து செல்லும் குழந்தைக் கண்ணன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பெரிய ஊஞ்சலும் உள்ளது. கருடாழ்வார் வணங்கிவிட்டு வெளி பிராகாரம் வந்தால் ராமானுஜர், ஆழ்வார்கள், ஆஞ்சநேயரை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம். |