விநாயகர் சதுர்த்தி, மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், மார்கழி மாதம் முழுவதும், மகாசிவராத்திரி, தேய்பிறை அஷ்டமி, தனுர் மாதம், ஆடி முழுவதும், வரலட்சுமி நோன்பு, சனி பிரதோஷம்.
தல சிறப்பு:
மூலவர் வலம்புரி விநாயகராக இருப்பதும், தும்பிக்கையில் பிரம்ம கலசம் வைத்திருப்பதும் சிறப்பு. தமிழகத்தில் சோமாஸ்கந்தருக்கும், ஆஞ்சநேயரின் அன்னையான அஞ்சனா தேவிக்கும் குறிப்பிட்ட சில இடங்களில் சன்னதி இருப்பதை போல் இங்கும் சோமாஸ்கந்தருக்கும், அஞ்சனா தேவிக்கும் சன்னதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் சாஸ்திரப்படி மிகச் சிறந்த முறையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 4.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வெள்ளி, சனி கிழமைகளில் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பெத்தாக்ஷி விநாயகர் திருக்கோயில்
பெரிய குளம் ரோடு, ரயில்வே கேட் அருகில்
தேனி-625 531.
போன்:
+91 99948 77505, 98945 04141
பொது தகவல்:
மூலவர் பெத்தாக்ஷி விநாயகர் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் பிரம்மாண்டமாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வடக்கு நோக்கிய விஷ்ணுதுர்க்கை அருகே சரஸ்வதி. கிழக்கு நோக்கிய கன்னிமூல கணபதி அருகே நாகர். விநாயகர் கோஷ்டத்தில் தெற்கே மகாலட்சுமி, மேற்கே முருகன், வடக்கே நர்த்தன விநாயகர். சோமாஸ்கந்தர் கோஷ்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே மகாவிஷ்ணு, வடக்கே பிரம்மா சன்னதிகள் உள்ளன. நகரபிரமுகர்கள், வியாபார பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இக்கோயில் நடைபெற்றுவருகிறது.
பிரார்த்தனை
தொழில் சிறக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், திருமணம், புத்திர பாக்கியம் கிடைக்க, இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியவுடன் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
தேனியில் எந்த நல்ல செயல்கள் ஆரம்பித்தாலும் மக்கள் பெத்தாக்ஷி விநாயகரை
வழிபட்டுத்தான் ஆரம்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மார்கழியில்
சபரிமலைக்கு மாலை அணியும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோர் இங்கு மாலை
அணிவர். புதிய வாகனங்கள் யாவையும் இக் கோயில் முன்பு நிறுத்தப்பட்டு பூஜை
செய்து அதன்பின் உபயோகிப்பது வழக்கம். தலவிருட்சமாக வன்னி மரமும், வில்வ
மரமும் அமைந்துள்ளது. இதில் வன்னி மரத்தின் கீழ் நாகர் அருள்பாலிக்கிறார்.
மார்கழி மற்றும் ஆடி மாதங்களில் இக்கோயிலின் அர்ச்சகரான ராமச்சந்திரன் விநாயகருக்கு அன்னாபிஷேகம், சொர்ண புஷ்பம், காய்கறி, கலர்ப்பூக்கள், தேங்காய் ஆகியவற்றால் அலங்காரம்செய்து அழகு படுத்தினால் பக்த கோடிகளுக்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3மணி முதலே கோயிலின் பக்த குழுவினர் வீதி வீதியாக சென்று பக்தி பாடல்களை பாடி ஆன்மிக சேவை செய்வதும், திங்கள் கிழமை தோறும் மாலை 6 மணிக்கு சோமவார பஜனை செய்வதும் சிறப்பு. அத்துடன் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வித்யாக ஹோமம் செய்வது கோயிலின் தனி சிறப்பாகும்.
கோயிலில் கன்னி மூலையில் அருள்பாலிக்கும் கன்னிமூல கணபதி தான் இக்கோயிலில்
முதலில் சுயம்புவாக தோன்றியவர். எனவே, இவருக்குத்தான் வைதீகக முறைப்படி
முதல் பூஜை. அடுத்து தான் மூலஸ்தான விநாயகருக்கு பூஜை. விநாயகரின்
இடதுபுறம் சோமாஸ்கந்தர் சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மேலே சிவன்,
பார்வதிக்கு நடுவில் முருகன் அமர்ந்த கோலமாக சோமாஸ்கந்தர் அமைப்பும் அதன்
கீழ் சோமசுந்தரேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். இவருக்கு எதிரில் நந்தி
அமைந்துள்ளது. இதுபோன்ற சிவக்குடும்ப கோயிலை பார்ப்பது மிகவும் அரிது.
இங்கு பிரதோஷ வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை
சோமவாரத்தில் நூற்றியெட்டு சங்கு அபிஷேகம் நடைபெறுவது சிறப்பு.
சோமாஸ்கந்தர் சன்னதியின் வடக்கு பிரகாரத்தில் ஆஞ்சநேயரும் அவரது அன்னை அஞ்சனா தேவியும் தனி சன்னதியில் உள்ளனர். தமிழகத்தில் அஞ்சனா தேவிக்கு குறிப்பிட்ட ஓரிரு இடங்களில் தான் சன்னதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஞ்சநேயருக்கும் அஞ்சனா தேவிக்கும் அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புபவர்கள் பாடபுத்தகங்களை கல்விக்கு அதிபதியான அஞ்சனா தேவியின் முன்பு வைத்து பூஜை செய்கின்றனர் இதனால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. இங்குள்ள கால பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி தினங்களில் இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. கோயிலில் ஈசான்ய பகுதியில் நவகிரக சன்னதி அமைந்துள்ளது.
தல வரலாறு:
இந்த கோயில் 200 வருடம் பழமையானது. ஆரம்ப காலத்தில் சுயம்புவாக தோன்றிய கன்னி மூலையில் உள்ள கணபதியைத்தான், பிரதானமாக வைத்து பூஜை செய்து வந்தனர். இவருக்கு பின்புறம் மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. சுமார் 90 வருடங்களுக்கு முன்பு பெத்தாக்ஷி அம்மா என்பவர் இந்த சுயம்பு விநாயகருக்கு அபிஷேகம் ஆராதனை செய்து வந்தார். அத்துடன் இங்கு வரும் பக்தர்களுக்கும் சேவை செய்து வந்தார். அவரது காலத்திற்கு பின், இந்த விநாயகரை யாரோ எடுத்து சென்று விட்டனர். மறுபடியும் சில நாட்கள் கழித்து இருந்த இடத்திற்கே விநாயகர் திடீரென வந்து விடுவார். இதுபோன்று அடிக்கடி நடைபெற்று வந்ததால் கோயிலின் நிர்வாகத்தினர் தற்போதுள்ள மிகப் பெரிய விநாயகரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய ஆரம்பித்தனர். பெத்தாக்ஷி அம்மா நினைவாகவும், பெத்தாக்ஷி என்றால் பெரிய அளவில் ஆட்சி புரிபவர் என்பதன் அடிப்படையிலும் இங்குள்ள விநாயகருக்கு பெத்தாக்ஷி விநாயகர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவர் வலம்புரி விநாயகராக இருப்பதும், தும்பிக்கையில் பிரம்ம கலசம் வைத்திருப்பதும் சிறப்பு. தமிழகத்தில் சோமாஸ்கந்தருக்கும், ஆஞ்சநேயரின் அன்னையான அஞ்சனா தேவிக்கும் குறிப்பிட்ட சில இடங்களில் சன்னதி இருப்பதை போல் இங்கும் சோமாஸ்கந்தருக்கும், அஞ்சனா தேவிக்கும் சன்னதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் சாஸ்திரப்படி மிகச் சிறந்த முறையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.