காசியின் நேர்பார்வையில் இந்தக் கோயில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றன. முன் மண்டபத்தைக் கடந்து உள்ளே நுழையும்போது அழகுற அமைந்துள்ளது கொடிமரம். தென்முகம் திரும்பி அன்னபூரணி அம்மனைத் தரிசிக்கும் வண்ணம் அமர்ந்த நிலையில் நந்தீஸ்வரர். எதிரே மூலவர் காசி விஸ்வநாதர் சன்னதி. வடக்குத் திசை நோக்கி அன்னபூரணி அம்மன் சன்னதி உள்ளது. இந்த சிவாலயத்தில் நவகிரகங்கள் இல்லாமல், சப்தகன்னியர்களுடன் தட்சிணாமூர்த்தியின் தனிச் சன்னதி உள்ளது. குபேர சனி பகவான், காலபைரவர், கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகன் என பல சன்னதிகள் உள்ளன. கோயிலின் உள்ளேயே தீர்த்தக் கிணறும் அமையப்பெற்றுள்ளது.
பிரார்த்தனை
நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் உருவானதாக கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. கோயிலின் மூலஸ்தானம் கட்டி முடிந்து பல நூறு ஆண்டுகள் கழித்து சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயிலில் உள்ள நூற்றுக்கணக்கான தூண்களின் சிற்பங்களும் அருமை. காசி விஸ்வநாதர் சன்னிதிக்கும், அன்னபூரணி அம்மன் சன்னதிக்கும் கோபுரங்கள் உள்ளன. கோயிலின் அருகில் தேர்த் திருவிழா சமயங்களில் உற்சவச் சிலைகளை தேர் மீது அமர்த்துவதற்காக கல்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் எதிரே தெப்பக்குளம் அமைந்துள்ளது. ஆலயம், பாண்டியர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 1800 ஆம் வருடம் வரை இந்தக் கோயிலில் 5 கால பூஜையும், வைகாசிப் பெருவிழாவும், தேரோட்டம் நடந்ததாகவும், செவிவழிச் செய்திகள் உள்ளன. இந்தத் தேரோட்டத்தில் தென்மாவட்ட மக்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சிவன் அன்னபூரணி அம்மனுடன் இருப்பது சிறப்பு.
இருப்பிடம் : சிவகாசியிலிருந்து சங்கரன் கோவில் செல்லும் சாலையில் உள்ள, குகன் பாறை என்று ஊரிலிருந்து, சாத்தூர் செல்லும் முக்கிய சாலையில் உள்ளது சத்திரம் கிராமம்.