இங்கு மகா சிவரத்திரி அன்று இரவு மயான பூஜை நடக்கும். இரவு அங்காள அம்மனின் கரகம் ஜோடிக்கப்பட்டு நொய்யல் கரையில் இருக்கும். அச்சமயம் இக்கோவிலில் எலும்புக்கடி விழா நடைபெறும். எலும்புக்கடி விழா முடிந்ததும் பூசாரிகள் நொய்யலுக்கு சென்று ஜோடிக்கப்பட்ட அங்காளம்மனை எடுத்து அங்காளம்மன் கோவிலுக்கு செல்வர். இந்த மாசாணியம்மன், அங்காளம்மனின் காவல் தெய்வம் என்பதால், இவ்விழா நடப்பதாக முன்னோர்கள் தெரிவித்தனர்.
சித்திரைக் கனி, ஆடி அமாவசை, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்க்கிழமைகள், ஆடி 18 ஆகிய விழாக்கள், இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் முக்கியத்திருவிழாவாகும். சித்திரைக்கனி அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இந்நாட்களில் வேண்டினால், வேண்டுதல் கைக்கூடும் என மக்கள் முழுமையாக நம்புகின்றனர். சித்திரைக்கனியன்று பக்தர்களுக்காக நடை, சற்று தாமதமாக சாத்தப்படுகிறது.
தல சிறப்பு:
இந்த அம்மன் சுயம்புவாக மண்ணால் தானாக உருவாகியது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மகா சக்தி மாசாணியம்மன் திருக்கோயில்,
சிறுவானி மெயின் ரோடு,
பேரூர், கோவை- 641010
போன்:
+91 90033 33943
பொது தகவல்:
தற்போது கிழக்கு பார்த்து இருக்கும் வாசலை வடக்கு பார்த்து மாற்றியமைக்கவும் உள்ளனர். இக்கோவிலில் உள்ள மாசாணியம்மன் தான் பேரூரில் உள்ள அங்காளம்மனின் காவல் தெய்வமாகவும் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு இடதுபுறம் மயானமும், கோவிலுக்கு பின்பு சொட்டையாண்டி குட்டையும், வலது புறம் நொய்யல் ஆறும் ஓடுகிறது. மொத்தத்தில் இக்கோவில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் மிகவும் இயற்கையாக, பேரூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
கடன் வாங்கியவர்கள் திரும்பக் கொடுக்காவிட்டால், அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் அக்காரியம் கை கூடுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பணம் தராமல் ஏமாற்றியவர்கள் பற்றி உண்மையாக வேண்டுதல் வைத்தால் வேண்டுதல் நிறைவேறுகிறது. பக்தர்களின் கடன் பிரச்சனைகள் மட்டுமின்றி அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக பக்தர்கள், மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதும் நேர்த்திக்கடனாக சிலை வைக்கப்படுகின்றனர். அந்த நேர்த்திக்கடன் சிலையின் மேல் மிளகாயை அரைத்து தடவினால், தங்களின் வேண்டுதல்கள் கட்டாயம் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதை தவிர பக்தர்கள் தங்களால், இயன்ற அளவிலான பூஜை பொருட்கள் மற்றும் கோயிலுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
ஆடி அமாவாசை காலத்தில் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் இருக்கும். பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகில் உள்ளதால், அங்கு வரும் பக்தர்களின் கூட்டம் இக்கோவிலுக்கும் வருவார்கள் என்றால் மிகையல்ல. ஆடி அமாவாசை காலத்தில் சிறப்பு ஓதுவார்கள் மூலம் சிறப்பு யாக பூஜைகளும் நடக்கும். ஆடி அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட காலையில் மிகவும் நேரமாக நடை திறக்கப்படுகிறது. ஆடிவெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடக்கும்.
தல வரலாறு:
சுமார் 100 ஆண்டுகளாக மண்ணில் இருந்த மாசாணியம்மன் சிலைவடிவம், தற்போது வழிபட்டு வரும் மாசாணியம்மனுக்கு தனியாக கோவில் இல்லை. இப்போது உள்ள கோவில் அமைவிடம் பல வருடங்களுக்கு முன்பு மயானமாக இருந்தது. அப்போது அவர்கள் மண்ணால் சிலை அமைத்து மயான பூஜை மட்டும் நடத்தி வந்தனர். தொடர்ந்து, இந்த மண் சிலை வடிவம் மழையில் கரைந்து விட்டது. ஆனால், சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட மயான பூஜைக்கு பின்னர், மண்ணால் ஆன மாசாணியம்மன் சிலை வடிவம் மழையில் நனைந்து கரையாமல், வெயிலில் வாடி வந்தது. இவ்விஷயம் ஊர் மக்களுக்கு தெரியவந்தது. அனைவருக்கும் வியப்பாக இருந்தன. அம்மனுக்கு அதிக சக்தியுள்ளதாகவும் கூறினர். அதனை தொடர்ந்து, அம்மன் தானாக எழுந்தருளியுள்ளதால், இப்பகுதி மக்கள் தங்களால் முயன்ற அளவில் பணம் போட்டு கோவில் எழுப்பியுள்ளனர். மேலும், இக்கோவிலுக்கு கோவை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்கில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொங்கு நாட்டில், பொள்ளாச்சி மாசாணியம்மனுக்கு அடுத்ததாக இந்த மாசாணியம்மன் தான் என்றும் கூறப்படுகிறது. இக்கோவிலில் உள்ள பூசாரிகள் தங்கள் வாழ் நாள் புண்ணியத்திற்காக வேலை பார்த்து வந்துள்ளனர். அங்கு அதே சிலையை வைத்து கோவில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். தற்போது, கோவில் எழுப்பி 25 ஆண்டுகள் ஆகியுள்ளநிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இந்த அம்மன் சுயம்புவாக மண்ணால் தானாக உருவாகியது.
இருப்பிடம் : கோவை டவுன்ஹாலிலிருந்து 9 கி. மீ. தூரத்திலுள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயிலை அடுத்துள்ள செட்டிபாளையம் பேருந்து நிலையத்திற்கு அருகில் கோயில் அமைந்துள்ளது.