தினமும் பூஜை புனஸ்காரங்கள் இருந்தாலும், வாராவாரம் சனிக்கிழமை காலையில் சிறப்பு ஆராதனைகள் நடக்கின்றன. ஒவ்வொரு தமிழ் மாதமும் மூன்றாவது சனிக்கிழமையன்று வெகு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் என்று அன்றைய தினம் அமர்க்களமாய் இருக்கும். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையன்று சுயம்பு பெருமாளுக்கு நடைபெறும் பெருந்திருவிழாவில் பலபகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
தல சிறப்பு:
இத்தலத்தில் பெருமாள் சுயம்புவாõக அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுயம்பு பெருமாள் திருக்கோயில்,
இருளர்பதி, கண்டியூர், காரமடை
கோயம்புத்தூர் 641104
பொது தகவல்:
வனப்பகுதி கோயில் என்பதால் இத்திருக்கோயிலின் வலது புறத்தில் கன்னிமார் மற்றும் கருப்பராயர் தெய்வங்கள் இருக்கின்றனர். இடது புறத்தில் முனியப்பன் காவல் தெய்வமாக விளங்குகிறார். கோயிலின் முன்புறம் கணபதி வீற்றிருக்க வெளி பிராகாரத்தில் ஆஞ்சநேயர் இருக்கிறார். கருவறை, அர்த்தமண்டபம், மகாம ண்டபம், கருநிலை மீது இருநிலை விமானம், தீபஸ்தம்பம், தளவரிசை போன்றவை அமைந்துள்ளன. 2013 மே மாதத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தைப் பேறின்மை, பூப்பு அடையாமை, கடுமையான நோய், ஓயாத மனக் கவலை, சித்தபிரமை போன்ற குறைகள் சுயம்பு பெருமாளை வணங்கினால் தீரும் என்பது நம்பிக்கை. அதோடு, விவசாய பிரச்னைகள் தீர, கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு பெற வேண்டுவோரின் கோரிக்கைகளையும் இந்த சுயம்பு பெருமாள் நிறைவேற்றி வைக்கிறார்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இருளர்பதியில் திருமாலே தோன்றிய தகவல் அக்கம் பக்க கிராமங்களுக்கு பரவ, அவர்கள் பெருந்திரளாக வந்து இறைவனை சேவிக்கிறார்கள். இன்றும் கேரளம் மற்றும் கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் இருக்கும் மலைவாழ் மக்களிடமும் இருளர்பதி சுயம்பு பெருமாளின் பெருமை பரவியிருப்பதால் அங்கிருந்து வந்து பெருமாளை சேவித்து செல்கிறார்கள். சுயம்பு பெருமாளை வணங்கினால், சுபிட்சம் நிலவும், வாழ்க்கை இருள் நீங்கி பிரகாசிக்கும் என்பது பக்தர்களின் கருத்து.
தல வரலாறு:
சென்ற நூற்றாண்டில் இருளர்பதியில் சுமார் 30 ஆதிவாசிக் குடும்பங்கள் வாழ்ந்தனர். மாடுமேய்ப்பதுதான் அவர்களின் முக்கியத் தொழில். ரங்க மூப்பனும் அவர்களில் ஒருவன். கிராமத்தினை தொட்டாற்போல் இருக்கும் வனப்பகுதியில் மாடுகளை மேய்த்துவிட்டு வருவதும், பின் பால் கறந்து விற்பதும் அவனது பிழைப்பு. தான்வளர்த்தவற்றில் ஒரு குறிப்பிட்ட பசுவின் மடியில் மட்டும் தினமும் பால் வற்றியிருப்பதை வருத்தத்தோடு கவனித்து வந்தான். வயிறு முட்ட பச்சை புல் மேய்கிறன்றன. ஆனால் இந்த பசுவினுடைய பாலமிர்தம் எங்குதான் தான் மாயமாக மறைகிறது என்று அவனுக்கு ஆச்சரிய அதிர்ச்சி. அதனால் ஒரு நாள் மேய்ச்சலுக்கு சென்ற அந்தப் பசுவை பின் தொடர்ந்து சென்று கவனித்தான். நன்கு பசும்புல் மேய்ந்த அந்தப் பசு பின் சிறிது நேரம் கழித்து ஒரு காரை மரத்தை நோக்கிச் சென்றது. ரங்க மூப்பனும் அதைப் பின் தொடர்ந்தான். அந்தப் பசு, மரத்தின் கீழ் இருந்த சுயம்பு மூர்த்தியின் மீது தனது பாலைப் பொழிந்தது. இதைப் பார்த்ததும் ரங்க மூப்பனுக்கு ஆச்சர்யம்! ஆனால் அதை தாண்டிய கோபமோ மூப்பனை மூர்க்கத்தனமாக நடக்க வைத்தது. கையிலிருந்த கம்பால் பசுவை அடித்து விரட்டினான். இந்த சுயம்பு மூர்த்தி இருப்பதால்தானே பசுவின் பால் வீணாகிறது என்று நினைத்தவன், கடும் கோபத்துடன் கையிலிருந்த அரிவாளால் அந்த மூர்த்தியை வெட்ட ஓங்கினான். அவனது கண்கள் இருண்டன, கைகால்கள் நடுங்கின, பயத்தினால் அலறித்துடித்தவன் கீழே விழுந்து மூர்ச்சையானான். மூப்பனின் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராமத்தினர் அவனை வீட்டுக்கு தூக்கிச் சென்றார்கள். தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தியபின் ரங்க மூப்பன் எழுந்தமர்ந்தான். நடந்த விஷயங்களை உணர்வு பொங்க விளக்கினான். ஊராருக்கும் அதிர்ச்சி! அந்த ஊரைச் சேர்ந்த தொட்டி மூப்பன் எனும் பெரியவர், இது தெய்வத்துச் செய்த குற்றம். இதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி அவர்களை அழைத்துக் கொண்டு சுயம்பு மூர்த்தம் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அவர்கள் அனைவரும் அதை வணங்கி, எங்களைக் காப்பாற்றி வரும் ஐயனே! அறியாமல் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும். என்று மனமுருகி வேண்டினார்கள். உடனே பெருமாளும் மனமிரங்கி சங்கு சக்கரதாரியாகக் காட்சியளித்தார். தேவரும் மூவரும் காண்பதற்கரிய காட்சியை கண்ட இருளர் மக்கள் கைகளை மேலே கூப்பி, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகா! எங்களது பிழைழைப் பொறுத்தருள்வாயப்பா என்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். அதன் அன்பில் நெகிழ்ந்த பெருமாள், உங்களையெல்லாம் காத்து ரட்சிக்கவே இங்கு எழுந்தருளியுள்ளேன். மனதில் மாசு இல்லாமல், உள்ளன்புடன் இங்கே வந்து என்னை வேண்டுபவர்களுக்கு இம்மையில் பதினாறு பேறுகளையும் அருளி, நிறைவில் முக்தியும் நல்குவோம் என்று அருளி மறைந்தார். பின்னர் அவர்கள் ஒன்றிணைந்து அவர்களுடைய குலவழக்கப்படி சுயம்பு பெருமாளுக்கு ஒரு எளிய கோயிலை உருவாக்கி வழிபாடு செய்தார்கள். அதோடு, ரங்க மூப்பன் தன் சந்ததி இனி வழிவழியாக பெருமாளின் அடிமைகளாக இருந்து சேவை செய்வார்கள் என்று உறுதி பூண்டான். அவனுக்குப் பின் அவனது வழித்தோன்றல்களும் தெய்வ சேவையை செய்து வந்தார்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலத்தில் பெருமாள் சுயம்புவாõக அருள்பாலிப்பது சிறப்பு.
இருப்பிடம் : கோவை, மேட்டுப்பாளையத்திலிருந்து வெள்ளியங்காடு செல்லும் 3பி, 3சி பேருந்துகளில் கண்டியூரில் இறங்கி, இருளர் பகுதியில் உள்ள கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும்.