கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பவுர்ணமி ஆகிய மாத விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தன்று சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துவர். கந்தர் சஷ்டியும் தைப்பூசமும் இங்கு கொண்டாடப்படும் தலையாய வருட உற்சவங்களாகும். கந்த சஷ்டி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி 6-ம் நாள் தேரோட்டம், 7-ம் நாள் திருக்கல்யாணம் எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி விசாகத்தன்று படிபூஜை கோலாகலமாக நடைபெறும்.
தல சிறப்பு:
கருவறையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்து வெற்றி வேலுடன் நின்ற கோலத்தில் மலர் அலங்காரத்தில் அருளும் வேலாயுத சுவாமியை கண்குளிர தரிசித்து இன்புறலாம்.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.
முதலில் பாத விநாயகர் சன்னதியைக் கடந்து படிப்பாதையில் மேலே சென்றால் இடும்பன் சன்னதி. சக்திகிரி, சிவகிரியை காவடியில் வைத்து சுமந்த கோலத்தில் அருள்பாலிக்கும் இவரை இடும்பக் குமரன் என அழைக்கின்றனர். அடுத்துள்ள ஆஞ்சநேயர் சன்னதியைக் கடந்து சென்றால் மலைக் கோயிலை அடையலாம். 156 படிகளைக் கொண்ட மலைக்கோயிலின் நுழைவு வாயில் தெற்கு நோக்கி உள்ளது. தீபஸ்தம்பம் ராஜகோபுரத்தின் முன் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தை அடுத்துள்ளது, குறட்டுவாசல். கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் வாத்திய மண்டபம் என நான்கு பகுதிகளைக் கொண்டது. உட்பிராகாரத்தில் கன்னிமூல கணபதி, முனியப்பன், கன்னிமார், கருப்பராயன், நவகிரகங்கள் மற்றும் பைரவர் தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர்.
பிரார்த்தனை
பலருக்கும் இத்தலத்து வேலாயுத சுவாமி குல தெய்வமாகவும், இஷ்டதெய்வமாகவும் விளங்குகிறார். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எந்த சுப காரியங்களை செய்வதென்றாலும், வேலாயுத சுவாமியின் உத்தரவு பெற்றே மேற்கொள்கின்றனர். அப்படிச் செய்வதால், தாங்கள் செய்யும் காரியங்களில் எந்தத் தடையும் ஏற்படாமல் வெற்றியே கிட்டும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை உள்பட அனைத்து பிரச்னைகளும் அகல ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வேலாயுதசுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், நற்பலன் விரைவாக கிட்டுகிறது. என்று மனப்பூர்வமாக நம்புகின்றனர் பக்தர்கள்.
தலபெருமை:
கொங்கணச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட முருகன் விக்ரகம் இங்குள்ளது. திப்புசுல்தான் படையெடுப்பின் போது அது பின்னமடைந்துவிட்டாலும் அதனை மகாமண்டபத்தில் வைத்து இன்றும் பூஜித்து வருகின்றனர். கோயிலுக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் கொங்கணச் சித்தருக்கு கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய கோயில் கொங்கணச் சித்தர் வடக்கு நோக்கி யோக நிஷ்டையில் அமர்ந்துள்ளார். இச்சன்னதியில் சித்தர் பூஜித்த கருப்பணசாமி, முனியப்பன், நாகர் ஆகியோரை தரிசிக்கலாம். அவர்களுக்கு தினசரி பூஜைகளும், பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
கொங்கு நாட்டில் குமரப் பெருமான் கோயில் கொண்ட மலைகளுள் ஒன்று, ஊதியூர் மலை. கொங்கு மண்டல சதகம் எனும் நூலில் இம்மலையின் பெருமைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இத்தலப் பெருமானை போற்றிப் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் தோன்றிய சித்தர்களுள் முதன்மையானவர் அகத்தியர். அவரது சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் பசி, பட்டினி என வாடிய மக்களின் குறைகளை தங்கள் யோக ஆற்றலால் நிவர்த்தி செய்து வந்தனர். ஒரு சமயம் அவர்கள் காங்கேய நாட்டு மக்களின் வறுமையைப் போக்கும் விதமாக மக்களை ஒன்று திரட்டி, மூலிகைகள் கொண்ட இம்மலைக்கு தீவைத்து புகை மூட்டி ஊதினர். அப்போது முருகப்பெருமான் அங்கு எழுந்தருளி மக்களின் வறுமையை நீக்கி, அவர்களின் வாழ்வில் வளமையை உண்டாக்கினார்.புகை மூட்டி ஊதியதால் ஊதிமலை என்றும்; கொங்கணச் சித்தர் தவம் செய்து நெருப்பு ஊதி பொன் தயாரித்ததால் பொன் ஊதிமலை என்றும்; கொங்கணகிரி என்றும்; அனுமன் எடுத்துச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இது என்று கருதப்படுவதால் சஞ்சீவி மலை என்றும் பல பெயர்களில் இம்மலை அழைக்கப்படுவதாக தலபுராணம் கூறுகிறது. இன்றும் சித்தர்கள் ஒளிவடிவாக இரவு நேரங்களில் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.அடிவாரத்தில், மலைப்பாதையின் தொடக்கத்தில் சுதைச் சிற்பங்களைக் கொண்ட கோபுரத்துடன் அமைந்துள்ள அழகான மயில் மண்டபத்தில் கலைநயத்துடன் கூடிய 4 கல் தூண் வீற்றிருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இதன் தென்புறம் ஒரு சுனை உள்ளது.
தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கருவறையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்து வெற்றி வேலுடன் நின்ற கோலத்தில் மலர் அலங்காரத்தில் அருளும் வேலாயுத சுவாமியை கண்குளிர தரிசித்து இன்புறலாம்.